பூமியில் வாழும் எண்ணூறு கோடி மக்களில் நீங்கள் தனித்துவமானவர்.
இது வரை வாழ்ந்து சென்ற மற்றும் வருங் காலத்தில் வாழப் போகின்ற பல்லாயிரம் கோடி மக்களில் நீங்கள் தனித்துவமானவர். உடல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, மன ரீதியாக நீங்கள் தனித்துவமானவர்.
பல தலை முறைகளைச் சேர்ந்த பல்லாயிரம் நபர்களின் சேர்க்கை தான் உங்கள் உடல். பல்லாயிரம் மக்களின் மனம் தான் உங்கள் ஆழ் மனம். அந்தப் பல்லாயிரம் மக்களில் ஒரு நபர் இல்லாமல் போயிருந்தாலும், நீங்கள் உருவாகி இருக்க முடியாது.
ஆகவே, உங்களை உருவாக்கிய அதே மூலக் கூறுகளைக் கொண்ட உடலும் மனமும் வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் சீரற்ற முறையில் சாதாரணமாகப் பிறந்தவர் அல்ல. பிரபஞ்சத்தின் தலைசிறந்த கலைஞரால் ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக நீங்கள் உருவாக்கப் பட்டிருக்கிறீர்கள்.
மனிதர்கள் அனைவரும் வேறு பட்டவர்கள். வெவ்வேறு முக அச்சு, விரல் ரேகைகளைக் கொண்டவர்கள். நகல் என்கிற பேச்சுக்கே படைப்பில் இடம் இல்லை.
எனவே தனித்துவமாக இருக்க முயற்சிப்பது ஒரு வகையில் முட்டாள்தனம். ஏனென்றால் படைப்பிலேயே நீங்கள் தனித்துவமானவர். இரட்டையர்கள் கூடத் தனித்துவமானவர்கள்.
உங்கள் சிந்தனை யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.
உலகை மற்றும் உங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில் நீங்கள் தனித்துவமானவர். உங்கள் வாழ்க்கையை உருவாக்க நீங்கள் எதைத் தேர்வு செய்கிறீர்கள், ஏன் அதைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதில் நீங்கள் தனித்துவமானவர்.
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் பின்னால் உங்கள் தனித்துவம் இருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் உங்கள் தனித்துவம் இருக்கிறது.
உங்கள் குரல் தொனி தனித்துவமானது. உங்களைப் போல வேறு யாரும் பேச முடியாது. உங்கள் அழகு தனித்துவமானது. நீங்கள் சொல்லும் உங்கள் கதை தனித்துவமானது. எதிர் காலத்தில் சொல்லப் போகின்ற உங்கள் கதை கூடத் தனித்துவமானது.
நீங்கள் தனித் திறமைகளைக் கொண்ட நபர். ஆனால், உங்கள் திறமைகளை நீங்கள் நம்பும் போது மட்டுமே அவை வெளிப் படும். இன்று நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் தனித் திறமைகளை நம்பி நீங்கள் செயலாற்றவில்லை என்றே பொருள்.
மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று, உங்களிடம் உள்ளது. மற்றவர்கள் செய்ய முடியாத ஏதோ ஒன்றைச் செய்திட, உங்களால் முடியும். ஆகவே, ஒரு போதும் உங்களைப் பிறரோடு ஒப்பிட வேண்டாம்.
பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் செயல் மகா முட்டாள் தனமான செயல். ஒப்பிடுவது படைப்புக்கு எதிரானது. பிறரோடு நம்மை ஒப்பிடுவது படைப்பு சக்தியைக் கொச்சைப் படுத்தும் செயல். ஏனெனில் படைப்புச் சக்தி நகல்களைப் படைப்பதில்லை. ஒவ்வொரு படைப்பையும் தனித்துவமாகப் படைப்பதே படைப்பின் இயல்பு.
குரங்கால் கடலில் நீந்த முடியாது. மீனால் மரம் ஏற முடியாது. இரண்டும் வெவ்வேறு திறமைகளுடன் படைக்கப் பட்டவை. தனித் தன்மையானவை.
அதேபோல் தான் நீங்களும் தனித் தன்மையானவர். உங்கள் எண்ணங்கள், நம்பிக்கைகள், மனோபாவம், அணுகுமுறை, நடத்தை என அனைத்தும் தனித்துவமானது. ஆகவே உங்களைப் பிறரோடு ஒப்பிட்டுப் படைப்புச் சக்தியை அவமதிக்காதீர்கள்.
ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு புதிர்.
உங்கள் அனுபவச் சேகரிப்பை அச்சு அசலாக வேறு எவருமே கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, ஒரு குறிப்பிட்ட சூழலில் நீங்கள் செய்யும் அதே தேர்வுகளை, நீங்கள் எடுக்கும் அதே முடிவுகளை அச்சு அசலாக வேறு எவராலும் எடுக்க முடியாது.
எடுக்கும் முடிவு முட்டாள் தனமானதா அல்லது அறிவார்ந்த முடிவா என்பது வேறு விசயம். ஆனால் நீங்களை எடுத்ததைப் போன்றே அச்சு அசலாக முடிவெடுக்க யாராலும் முடியாது.
உங்கள் ஆளுமை தனித்துவமானது. உங்கள் இலக்குகள், குறிக் கோள்கள், உங்கள் பேரார்வம், உங்கள் பொழுதுபோக்கு என அனைத்துமே தனித்துவமானது.
உலகிற்குப் பங்களிக்கத் தனித்துவமான ஒன்று உங்களிடம் உள்ளது. நீங்கள் பங்களிக்கப் போகிற விசயத்தைக் கண்டுபிடிக்க சிறிது நேரம் ஆகலாம். மனம் தளராமல் அதைக் கண்டு பிடிக்க வேண்டியது மட்டுமே உங்கள் பொறுப்பு.
வாழ்க்கை பந்தயக் களம் அல்ல. ஆகவே யாருடனும் நீங்கள் போட்டியிடத் தேவையில்லை. தனக்கான போட்டியாளராக யாரேனும் தனித் உங்களை நினத்தால், அது அவர்கள் பிரச்சினை. நீங்கள் உங்கள் தன்மைக்கு ஏற்ப ஓடிக் கொண்டிருங்கள்.
வாழ்க்கை போர்க்களமல்ல. யாரேனும் ஒருவர் தன் வாழ்க்கையைப் போர்க்களமாக எண்ணி உங்களோடு போருக்கு வரலாம். அது அவருடைய தனித்தன்மை. ஆனால், உங்கள் தனித்தன்மை அல்ல. ஆகவே அவரிடமிருந்து ஒதுங்கிச் செல்லுங்கள். உங்கள் இலக்கை நோக்கி மட்டுமே உங்கள் பயணம் இருக்கட்டும்.
அப்படியிருந்தால் உலகம் உங்களைக் கோமாளியாகப் பார்க்குமே என்று நீங்கள் அச்சப் படலாம். ஆனால் உலகின் பார்வையைக் கண்டு அஞ்சுவது கூட ஒரு வகையில் முட்டாள்தனமே.
உலகம் ஒரு பார்வையாளர். பார்வையாளரின் பார்வை என்பது அவர்கள் அறிவுத் திறன் சார்ந்தது. மற்றும் அவர்களுடைய அன்றாட மனநிலை சார்ந்தது.
ஆகவே உங்களைப் பற்றிய மற்றவர்கள் கருத்து, உங்களைப் பற்றிய கருத்து அல்ல.
உங்கள் வாழ்க்கை நாடகத்தின் அடுத்த அத்தியாயத்தை அறியாதவர்களே உங்கள் பார்வையாளர்கள். ஆகவே மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அது பற்றிக் கவலைப் படாமல், நீங்கள் நீங்களாக மட்டுமே இருங்கள். உங்கள் வாழ்க்கை நாடகம் தனித்துவமானது.
உங்கள் தனித்துவம் குறித்து இது வரை நீங்கள் அறியாதவராய் இருக்கலாம். ஆனால் யோசித்துப் பாருங்கள். உங்களைப் போலவே அச்சு அசலாகச் சிந்திக்கின்ற ஒரு நபரேனும் உலகில் இருக்க முடியுமா? இந்தப் புரிதலின் அடிப்படையில் உங்கள் தனித்துவத்தை ஒப்புக் கொள்ளுங்கள்.
உங்கள் இன்றைய சூழ்நிலை எப்படி இருப்பினும், அதை மாற்றும் திறன் உங்களிடம் உள்ளது.
“இல்லை. என் சூழ்நிலையிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்று நீங்கள் சொல்லலாம். கடன் போன்ற தொல்லைகளைச் சுட்டிக் காட்டலாம். அல்லது ஏழ்மையைக் கூடச் சாக்காக நீங்கள் சொல்லலாம்.
ஆனால், உங்கள் இன்றைய சூழல் எப்படி இருப்பினும், அதிலிருந்து வெளியேறப் பெரிய வளங்கள் எதுவும் தேவையில்லை. வளங்களை உருவாக்கும் திறன் மிக்க படைப்பாற்றல் சிந்தனை போதும். வாழ்வில் சாதிக்க.
இந்த உண்மையை உணரும் போது, வறுமையின் சிறையிலோ, தோல்வியின் வலையிலோ, நீங்கள் சிக்கிக் கொள்வது சாத்தியமில்லை.
இந்த விநாடி உங்களிடம் எதுவுமே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் சொல்கிறேன். உங்களிடம் பயன்படுத்தப்படாத பல திறமைகள் ஒளிந்திருக்கின்றன. மேலும் உங்களிடம் ஒளிந்திருப்பதைப் போன்ற திறமைகள், அடுத்தவர் எவரிடமும் இல்லை.
ஆனால், உங்களிடம் ஒளிந்துள்ள அறிவையும் திறமையையும் கண்டு பிடிக்க ஒரே வழி தான் உள்ளது. அந்த வழி கனவு காணுதல்.
ஒரு நபரிடம் ஒளிந்துள்ள அறிவையும், திறமையையும் வெளியே கொண்டு வர அவருடைய கனவுகளால் மட்டுமே முடியும். ஆகவே, உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் உயிர் கொடுக்கும் பொருட்டேனும் உடனடியாக கனவு காணத் தொடங்குங்கள்.
நீங்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையைச் செதுக்கிக் கொண்டிருக்கும் சிற்பி. நீங்கள் மட்டுமே உங்கள் வாழ்வின் மீட்பர். நீங்கள் மட்டுமே உங்கள் வாழ்வின் இயக்குநர். நீங்கள் மட்டுமே உங்கள் வாழ்வின் நாயகர்.
மனப் பூர்வமாக இதை ஏற்றுக் கொண்டு, உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு அடுத்தவர் மீது பழி போடாமல், உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கத் துவங்குங்கள்.
மனம் ஒரு மகா சக்தி. பொறுப்போடு, கவனத்தோடு, விழிப்புணர்வோடு இதைத் தான் சிந்திப்பேன், இதைச் சிந்திக்க மாட்டேன் என்று உறுதியாக சிந்தனை செய்வோருக்கு அடிமையாய் இருந்து அவரை உயர்த்தக் கூடிய மகா சக்தி மனம்.
ஆகவே உங்கள் மனதை மயக்க ஒரு கனவை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கனவைப் பற்றிய நேர்மறை எண்ணங்களை மட்டுமே சிந்தனை செய்யுங்கள். ஆறே ஆறுமாதம் அவ்வாறு செயல் பட்டுப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் வசப்பட்டு விடும்.
ஆகவே, உங்கள் தனித்துவத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு எவரோடும் உங்களை ஒப்பிடாமல், உடனடியாக உங்கள் கனவை உருவாக்கிக் கொண்டு செயலாற்றத் தொடங்குங்கள். விரைவில் நீங்கள் செல்வந்தராவீர்கள்.