காட்டு மிராண்டிகளிடையே, காமம் காரணமாக ஏற்பட்டிருந்த கலகக் கலாச்சாரத்திற்கு முடிவுரை எழுதவே, திருமணம் கண்டு பிடிக்கப் பட்டது.
நாடோடி வாழ்க்கை.
மனிதர்களும் நான்கு கால் உயிரினங்களாகத் தான் துவக்கத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இலைதழைகள், காய்கள், பழங்கள், வேர்கள், பறவைகள் மற்றும் இறந்து கிடக்கும் விலங்குகள் போன்றவற்றை உண்டு பசியாறிக் கொண்டிருந்தார்கள். பசியாறியதும், எவ்வித நோக்கமுமின்றி நடந்து கொண்டேயிருந்தார்கள்.
காற்று, உணவு, தண்ணீர், உறக்கம், பாலின்பம் மட்டுமே அவர்களுடைய தேவை. அதைத் தவிர, நடந்து கொண்டேயிருப்பது தான் ஒரே வேலை. அவ்வாறு நடந்தே தான் பூமி முழுவதும் மக்கள் பரவினர்.
அப்போது மக்களின் எண்ணிக்கை குறைவாகவும், விலங்குகளின் கூட்டம் அதிகமாகவும் இருந்தது. கடலில் செல்லும் கப்பலைப் போல, விலங்குகள் மத்தியில் மனிதர்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே நடைபெற்ற பாலுறவு கூட, மிருகங்களை ஒத்ததாகவே இருந்தது. பெண்ணின் பின்னாலிருந்த படி தான் ஆண் புணர்ந்து கொண்டிருந்தான்.
நாடோடி வாழ்க்கையின் போது, மனிதர்கள் தான் விலங்குகளால் வேட்டையாடப் பட்டனர். விலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஓடத் துவங்கிய போது தான், கால்களை மட்டும் பயன்படுத்தி ஓடக் கற்றுக் கொண்டனர். கால்களால் மட்டும் ஓடும் போது, தெளிவாகப் பார்த்துக் கொண்டு ஒடுவதற்கும், ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே, மரக் கிளைகளைப் பிடித்து ஏறித் தப்பித்துக் கொள்ளவும் அது உதவிகரமாக இருந்தது.
அவ்வாறு ஆபத்தான நேரத்தில் கால்களை மட்டும் பயன்படுத்தி ஒடக் கற்றுக் கொண்டவர்கள், மரங்களிலிருந்த காய் கனிகளைப் பிடுங்குவதற்கும் கூட, நிமிர்ந்த நிலை மிகவும் உதவிகரமாக இருந்ததால், இறுதியில் நிமிர்ந்த நிலையில் வாழும் இரண்டு கால் உயிரினமாக மாறிப் போனார்கள்.
இரண்டு கால் உயிரினமாக மாறிய பிறகும் கூட, மனிதர்கள் தான் விலங்குகளால் வேட்டையாடப் பட்டனர். அந்த வேட்டைக்குப் பெரும்பாலும் பெண்கள் தான் இரையாகிக் கொண்டிருந்தனர்.
ஏனெனில், பருவமடைந்த நாள் முதலாகவே பெண் என்பவள் ஒரு குழந்தையைச் சுமந்த படியே தான் இருப்பாள். குழந்தை வயிற்றுக்கு உள்ளேயிருக்கும். அல்லது வெளியில் இருக்கும். அது தான் வித்தியாசம். அதனால், ஆணைப் போல எளிதாக ஓடித் தப்பிக்கப் பெண்ணால் முடியாது.
மேலும், குறைவான பலப் பிரயோகத்தில் வீழ்த்த முடிந்த இரையைத் தாக்குவது தான் விலங்குகளின் வழக்கம். அதனால், வேகமாக ஓடித் தப்பிக்க முடியாத பெண் தான் விலங்குகளுக்குரிய இலக்காக இருந்தாள்.
ஆண் தான் விலங்குகளிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். எனினும், பெண்ணைப் பொறுத்த வரை, நாடோடி வாழ்க்கை மிகவும் ஆபத்து நிறைந்ததாகவே இருந்தது. ஒன்று அவள் கொல்லப் படுவாள். அல்லது அவள் கண்ணெதிரில் அவளுடைய குழந்தை விலங்குகளால் குதறித் தின்னப் படும். அப்படிப் பட்ட ஆபத்தான பயணத்தின் போது தான், மனித இனம் குகையைக் கண்டு பிடித்தது.
குகை என்பது முப்புறமும் பாறையால் சூழப்பட்டு இருந்தது. முன் புறம் மட்டும் முட்புதர்களைப் போட்டு அடைத்து விடும் போது, விலங்குகளால் நெருங்க முடியாத பாதுகாப்பான அரணாக இருந்தது. அதனால், விலங்குகளிடமிருந்து தப்பிக்க, பெண்ணுக்கு குகை உதவியது.
பெண் குகையில் தங்கினாள். தனக்கும் தன் குழந்தைக்கும் கிடைத்த பாதுகாப்பை உணர்ந்தாள். அதனால், அதிலிருந்து வெளியேற மறுத்தாள். இவ்வாறாக, ஒரே இடத்தில் நிரந்தரமாகத் தங்கும் வழக்கம் உருவாயிற்று. மனித இனத்தை ஓரிடத்தில் நிலையாய்த் தங்கி வாழும் இனமாக, பெண் தான் மாற்றியமைத்தாள்.
கும்பல் கலாச்சாரம் – ஒரு கலகக் கலாச்சாரம்.
குகை வாழ்க்கையின் போது, அருகில் இருந்த இலைதழைகளையும், காய்களையும் பறித்தபடி, குகையைச் சுற்றியே பெண் வாழத் தொடங்கினாள். ஆண் முழு நேர வேட்டைக்காரனாக மாறத் துவங்கினான். கற்களைக் கொண்டே ஆயுதங்கள் செய்யவும், திட்டமிட்டு விலங்குகளை வேட்டை யாடவும் கற்றுக் கொண்டான்.
அவ்வாறு கல்லாயுதங்களைக் கூர்மைப் படுத்துவதற்காகப் பாறைகளின் மீது கற்களைத் தேய்த்த போது தான், மரங்களுக்கு இடையிலான உராய்வால் இயற்கையாக உருவாகிக் கொண்டிருந்த நெருப்பை, செயற்கையான முறையில் தேவைக்கேற்ப உருவாக்கிக் கொள்ள மனிதன் கற்றுக் கொண்டான்.
குகையில் வாழத் துவங்கிய பின், பெண்ணைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம் ஆணுக்கு இல்லாததால், தற்காப்பு மட்டுமே போதுமென்றாயிற்று. விலங்குகளைத் துணிச்சலோடு எதிர் கொள்ள, அவனால் முடிந்தது. அதனால், ஆண் முழு நேர வேட்டைக்காரனாகத் தன்னை மாற்றிக் கொண்டான்.
ஆண் வேட்டைக்குச் செல்வான். பெண் குகையைக் காப்பாள். அதனால், ஆண்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி விட்டது. ஏனெனில், வேட்டைத் தொழிலில் வேட்டைக்காரனே கூட வேட்டையாடப் படும் சூழலும் இருந்தது. அதனால், ஆண்கள் விலங்குகளுக்குப் பலியாகத் தொடங்கினர்.
பிரசவம் தான் பெண்ணுக்கிருந்த ஒரே கண்டம். ஆனால், வேட்டைத் தொழில் காரணமாக ஆணுக்கோ தினமும் கண்டம். அதனால், ஆண்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
ஆண் தான் பாதுகாவலன். உணவின் ஆதாரம். அதன் காரணமாக, ஆண்கள் அதிகமாகத் தேவைப் பட்டனர். ஆண் குழந்தைகள் மிகவும் விரும்பப் பட்டனர். அந்த விருப்பம் மனித இனத்தின் மரபணுவிலேயே இரண்டறக் கலந்து விடுமளவு வெறித்தனமானதாக இடம் பிடித்தது.
மேலும் இன்றைய நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு வழக்கம் கற்காலத்தில் இருந்திருக்கிறது. மனிதர்களின் குழுவில் பலவானாக இருப்பவன் மட்டுமே எல்லாப் பெண்களுடனும் பாலுறவு கொள்ளும் உரிமை யுடையவன் என்று எழுதப் படாத ஒரு சட்டம் அப்போது இருந்திருக்கிறது.
பாட்டி, அம்மா, அத்தை, சகோதரி, மகள், பேத்தி போன்ற உறவு முறைகள் எதுவும் அப்போது உருவாகி இருக்கவில்லை. அதனால், அத்தனை பெண்களுடனும் பலவான் மட்டுமே பாலுறவில் ஈடுபடலாம். வேறு எந்த ஆணும் எந்தவொரு பெண்ணுடனும் பாலுறவில் ஈடுபடக்கூடாது.
பலவானைத் தவிர, மற்ற ஆண்கள் திருட்டுத்தனமாக மட்டுமே பெண்ணுடன் இணைய முடியும். அந்த பலவானின் மகனுக்கும் இது பொருந்தும். ஏனெனில், தந்தை மகன் என்கிற உறவே அப்போது உருவாகி யிருக்கவில்லை. ஒரே உறவு தாய் மட்டுமே. ஆகவே, கும்பலில் உள்ள ஏதாவது ஒரு பெண்ணுடன் இணைய முயலும் போது, தன் மகனைக் கூடக் – காட்டு மிராண்டித்தனமாக – அடித்துக் காட்டை விட்டே பலவான் விரட்டி விடுவான்.
அவ்வாறு ஒரு ஆண் விரட்டியடிக்கப் படும் போது, அவனை எல்லோருமே மறந்து விட்டாலும், அவனுடைய தாயால் மறக்க முடியாது. மோப்ப சக்தியின் மூலம் தன் மகனுடைய இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பாள். பலவானுக்குத் தெரியாமல் அவ்வப்போது மகனிடம் சென்று, அவனுக்குரிய இன்பத்தை வழங்கி, தன் குழந்தையைப் பராமரித்துக் கொண்டிருப்பாள். மகன் திடகாத் திரமான ஆணாகும் வரை இதே நிலை தொடரும்.
அதன் பின், அந்த மகனை வைத்தே அந்த பலவானைக் கொலை செய்வாள் அல்லது தன் அதிகாரத்தைத் துறக்க அந்த தந்தை சம்மதிக்கும் பட்சத்தில், மகனுக்கும் தந்தைக்கும் இடையே சமரசம் செய்து வைப்பாள். ஒன்றாகக் கூடி வாழ்வார்கள்.
ஆண் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய மேற்கண்ட பணியை, பல்லாயிரம் ஆண்டுகள், தாய் செய்து வந்திருக்கிறாள்.
ஆண்களிடையே இத்தகைய சமரசத்தை ஏற்படுத்தி வைத்ததன் மூலம், பெண்ணுடன் இணைவதில் ஆண்கள் அனைவருக்கும் சம உரிமையை வழங்கக் கூடிய வாழ்க்கை முறையாக குகை வாழ்க்கையைத் தாய் மாற்றியமைத்தாள். அதன் மூலம், குகையில் வசிக்கும் அனைத்து ஆண்களுக்கும் பொதுவான சொத்தாக பெண் உருவாகி விட்டாள்.
மக்கள் கும்பல்களாக வாழத் தொடங்கினர். அந்தக் கும்பல் வாழ்க்கையில் தாய் என்கிற உறவு மட்டுமே இருந்தது. தந்தை இன்னாரென அறியப்படாத நிலையில் தான் குழந்தைகள் பிறந்து கொண்டிருந்தார்கள். தாய்க்குத் தான் உறவுகள் இருந்தன. அவளுடைய குழந்தைகள் அனைவரும் திடகாத் திரமாக வளர்ந்து நின்றபோது, தாய் தான், தன் குழந்தைகளால் சூழப் பட்டிருந்தாள். ஆகையால், தாய் தான் அவர்களுடைய தலைவியாக இருந்தாள். தாய் என்கிற பாத்திரம் கும்பலில் சக்தி வாய்ந்ததாக உருவாயிற்று.
ஆனால், தாயைத் தலைவியாகக் கொண்டு உருவான கும்பலின் வாழ்க்கை எப்போதும் கலகம் நிறைந்ததாகவே இருந்து கொண்டிருந்தது. ஆண்கள் அனைவருக்கும் சம உரிமை கிடைத்த பிறகு, பெண்ணோடு பாலுறவில் ஈடுபடுவது, ஆண்களிடையே கலகங்களை உருவாக்கக் கூடிய விவகாரமாக உருவாகி விட்டது. ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகளாகவே இருந்தாலும், பெண் விவகாரத்தில் ஆண்கள் மூர்க்கத்தனமாக அடித்துக் கொண்டார்கள். சகோதரர்களையே கொலை செய்தார்கள். விலங்குகளால் கொல்லப் படுவதை விட, பெண்ணுக்கான சண்டைகளில் அதிக ஆண்கள் கொல்லப் பட்டார்கள்.
தந்தை என்னும் உறவு உருவான வரலாறு.
மனித இனமே பலதார உறவில் வாழும் படி படைக்கப்பட்ட விலங்கினம் தான். அந்தப் படைப்பிலக்கணப் படி வாழும் போது, வேட்டையாடிய நேரம் போக மீதி நேரமெல்லாம் பெண்ணுடனான சரச சல்லாபங்களிலேயே ஆண்கள் ஈடுபட்டி ருந்தார்கள். அதனால், பெண்களுக்காக ஆண்களிடையே நடைபெற்ற சண்டை களால், குகைச் சமூகம் கொலைகாரச் சமூகமாகவே வாழ வேண்டியிருந்தது.
இந்த வாழ்க்கை தாய்க்கு அளித்த மன வேதனை அளப்பரியது. ஏனெனில், அவளுடைய கண்ணெதிரிலேயே பெண்ணுக்கான சண்டைகளில் அவளுடைய ஆண் குழந்தைகள் செத்துக் கொண்டிருந்தார்கள்.
பாலின்பமே தன்னினக் கொலைகளுக்கான களமாக மாறிய போது, வரை முறையற்ற பாலுறவிற்குத் தீர்வைக் கண்டுபிடித்தே ஆகவேண்டிய நெருக்கடி தாய்க்கு ஏற்பட்டது. தன்னுடைய குழந்தைகளின் மரணங்கள் ஏற்படுத்திய மன வலி காரணமாக, சகோதரக் கொலைகளுக்கு தாய் ஒரு முடிவு கட்டினாள்.
கும்பலில் உள்ள ஒவ்வொரு ஆணுக்கும் குறிப்பிட்ட சில பெண்கள் எனப் பிரித்துக் கொடுத்து, அவர்களுடன் மட்டுமே அந்த ஆண் பாலுறவில் ஈடுபட வேண்டும். அதை மீறி நடந்து கொள்ளக்கூடாது. மீறும் ஆண் கும்பலிலிருந்து விரட்டப் படுவான் என்னும் வகையில் எழுதப்படாத ஒரு சட்டத்தை இயற்றி, கும்பலின் பாலுறவு செயல்பாடுகளை தாய் ஒழுங்கமைத்தாள்.
இந்த ஏற்பாட்டின் மூலம், ஒரே பெண்ணுக்காகப் பல ஆண்களிடையே நடைபெற்று வந்த பகிரங்கமான கலகங்களுக்கு தாய் முடிவுரை எழுதினாள். தாயின் ஏற்பாடு ஆண்களால் வெளிப்படையாக மீற முடியாததாக இருந்தது. ஆனால், பெண்களுக்கென எவ்விதக் கட்டுப் பாடுகளையும் தாய் விதிக்க வில்லை. ஏனெனில் பெண்ணால் மட்டுமே கும்பலுக்குத் தேவைப்படுகின்ற ஆண்களை மென்மேலும் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதால், பெண்ணின் பாலியல் சுதந்திரத்தில் தாய் தலையிடவில்லை.
குகை வாழ்க்கையில், தாய் மட்டுமே தன் குழந்தைகளால் அறியப் பட்டிருந்தாள். அதனால் கும்பலில் உள்ள ஒவ்வொரு நபருடனும், ஏதோ ஒரு வகையில் இரத்த சம்பந்தமுடையவளாக இருந்தாள். அதனால், அதிகாரம் அவளுடைய கையில் இருந்தது.
வன்முறையில் ஈடுபடும் பலம் கொண்ட மக்கள் கூட்டம் யாருக்கு இருக்கிறதோ, அவர்கள் தான் அறிவுத் தளத்தில் வளர்ச்சியடையாத மக்களின் தலைவர்களாக உருவாக முடியும்.
இயல்பாகவே தாய்க்குத்தான் ஏராளமான குழந்தைகள் இருந்தன. அவளுக்காக வன்முறையில் ஈடுபடக் குழந்தைகள் தயாராக இருந்தார்கள். ஆணுக்காக யாருமே இல்லை. அதனால் தாயே கும்பலின் தலைவியாக இருந்தாள். அவளுடைய வார்த்தையே சட்டமாயிற்று.
இவ்வாறாக, இன்னார்க்கு இன்னார் எனப் பகுத்து வாழத் தொடங்கிய போது தான், தந்தை என்கிற ஒரு பாத்திரமே முதன் முதலாக மனித சமூகத்திற்கு அறிமுகமாயிற்று. அதுவரை மற்ற பாலூட்டிகளைப் போலவே, தாய் தான், குழந்தையின் ஒரே உறவாக இருந்தாள்.
பெண்ணுக்குப் போடப்பட்ட முதல் கற்புக் கவசம்.
தந்தை என்கிற உறவு உருவானதைத் தொடர்ந்து, குழந்தைகளின் பாதுகாப்பில் தந்தையும் பங்கேற்க வேண்டும். உணவுக்கும் அவனே வழி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பு ஆண்களின் கட்டாயப் பொறுப்பாயிற்று.
அவ்வாறு பொறுபேற்கத் தொடங்கிய போது தான், தன் குழந்தை, அடுத்தவன் குழந்தை என, குழந்தைகளைப் பாகுபடுத்திப் பார்க்கக் கூடிய அறிவை ஆண் பெற்றான். அதன் காரணமாக ஒவ்வொரு ஆணும் தன் குழந்தையை மட்டுமே பராமரிக்க விரும்பினான். அதனால், அவனுக்கென ஒதுக்கப்பட்ட பெண்கள் அவனுடைய குழந்தையை மட்டும் தான் பெற்றெடுக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தை பெண்களின் மீது சுமத்தத் தொடங்கினான்.
இந்த நிபந்தனைக்கு, அவன் தோழி ஒப்புக் கொள்ளாத போது, தான் வேட்டையாடிக் கொண்டு வந்த விலங்கை, அவளுக்குக் கொடுக்க மறுத்தான். தனக்கு மட்டுமே பிறந்ததாக அவனால் நம்பப் பட்ட குழந்தைகளோடு மட்டுமே தன் வேட்டைப் பொருளை அவன் பகிர்ந்துண்ணத் தொடங்கினான்.
பெண்ணின் மனதை இது கொடூரமாக வருத்தியது. தன்னுடைய குழந்தை களில் சிலர் வயிறார உண்கிற அதே வேளையில், சில குழந்தைகள் பசியால் வாடும் நிலைமையை அவள் பார்க்க வேண்டியதாயிற்று. ஏற்க வேண்டியதாயிற்று. அவளால் அதிகாரத்தையும் பயன்படுத்த முடியவில்லை. ஏனெனில், அவளுடைய தோழன் தன்னுடைய குழந்தைகளைப் பராமரிப்பதில் தவறேதும் செய்யவில்லை. அடுத்தவனுக்குப் பிறந்ததாய்க் கருதப்படும் குழந்தையைத் தான் பராமரிக்க மறுக்கிறான். ஆகவே, அவன் மீது குற்றம் காண முடியாது.
ஒரு தாயாக இதைச் சகித்துக் கொள்ள பெண்ணால் முடியவில்லை. அதே சமயத்தில் சுயமாக உணவு தேடவும் முடியவில்லை. ஏனெனில், அன்றைய ஒரே பொழுதுபோக்கு பாலுறவு. அதனால், பெண் எப்போதுமே கர்ப்பமாகவே தான் இருப்பாள்.
இச்சூழல் காரணமாக, தன் குழந்தைகள் அனைவரும் சமமான நிலையில் பராமரிக்கப் படும் நிலையை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக, ஆணின் நிர்பந்தப்படி, அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட ஆண் மூலமாக மட்டுமே குழந்தையைப் பெற்றெடுக்க பெண் ஒப்புக் கொண்டாள். இவ்வாறாக, பெண்ணின் மீது கற்பு சுமத்தப் பட்டு, பல்லாயிரம் ஆண்டு காலப் பாலியல் சுதந்திரம் பெண்ணிடமிருந்து பறிக்கப் பட்டது.
தனியுடைமை தோன்றியது.
அதன் பின் தன் குழந்தைகள் மீது அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகள் ஆணுக்கும் ஏற்படத் தொடங்கின. தன் தோழியரை மட்டுமின்றி குழந்தை களையும் பராமரிக்கும் பொறுப்பை ஆண் முழுமையாக ஏற்றுக் கொண்டான். அதனால், தேவைகள் அதிகரித்தன. அதையொட்டிய தேடலும் துவங்கியது. அதன் விளைவாய் அவன் விவசாயத்தைக் கண்டு பிடித்தான்.
தாவர உணவுகளை விளைவிக்க ஆணுக்கு நிலம் தேவைப்பட்டது. நிலத்தைத் தேர்வு செய்தான். பண்படுத்தினான். பயிரிடத் தொடங்கினான். அவ்வாறு அவன் பண்படுத்தி பயன்படுத்திய நிலத்தைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள மறுத்தான். அவனுக்குப் பின் அந்த நிலம் அவனுடைய குழந்தை களுக்குத் தான் சொந்தமாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அந்த எண்ணம் எளிதாக வெற்றியும் பெற்றது.
ஏனெனில், அவனோடு இணைந்து அந்த நிலத்தில் உழைக்கும் வாய்ப்பை அவனுடைய குழந்தைகள் தான் பெற்றிருந்தார்கள். ஆகையால், அவனுக்குப் பின் அந்த நிலம் இயல்பாகவே அவர்களைச் சென்றடையும் நிலை உருவாயிற்று. அந்த நிலம் அவர்களுக்கு மட்டுமே உரியது என பிறராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இவ்வாறாக மனித சமூகத்திற்கு தனியுடைமை அறிமுகமாயிற்று.
பெண்ணை மையமாய் வைத்து ஆண்களிடையே நடைபெற்ற கலகங்களை முடிவுக்குக் கொண்டு வர இன்னார்க்கு இன்னார் என பகுத்து வாழும் முறை அறிமுகமாயிற்று. பெண்ணுக்கென்று ஒதுக்கப்பட்ட ஆணின் குழந்தைகளை மட்டுமே, அந்தப் பெண் பெற்றெடுக்க வேண்டும் என்கிற கருத்தால் பெண்ணுக்கான கற்பு அறிமுகமாயிற்று.
பெண்ணின் கற்பு காரணமாக, தனக்கு மட்டுமே பிறந்த குழந்தைகளிடம் தன்னுடைய நிலத்தையும், பொருட்களையும் மற்றும் கால்நடை களையும் ஆண்கள் அளித்துச் சென்றதன் வாயிலாக, தனியுடைமை உருவாயிற்று. இவ்வாறு தனியுடைமை என்பது சமூகத்தில் தோன்றிய பிறகு. அந்த உடைமைகளைப் பறித்துக் கொள்ளும் நோக்கில், மனிதர்களிடையே பெண்ணை அபகரிக்க ஒரே கும்பலைச் சேர்ந்த ஆண்களிடையே நடைபெறும் சண்டைகளையும் தீர்த்து வைக்க ஒரு நபர் தேவைப்பட்டான்.
கும்பல் என்பதே காட்டுமிராண்டித்தனமானது. ஆனால், அடிப்படையில் பேடித் தனமானது. அச்சமே கும்பல்களை உருவாக்கும் பட்டறை. அதனால், நியாயவான் சொல் கும்பலிடம் எடுபடாது. மூர்க்கரிடம் மட்டுமே கும்பல் அடி பணியும். இன்றைக்கும், இக்கருத்து பொருந்தும்.
கும்பலாகக் கூடும் இன்றைய மனிதர்களும், தங்கள் தகுதிக்கேற்ப தங்களிடம் மறைந்து கிடக்கும் காட்டுமிராண்டிக் குணத்தை நுண்ணிய அளவிளாவது காட்டியே தீர்வார்கள். ஆனால், எந்தக் கும்பலும் கண்டிப்பான தலைவனிடம் சரணடைந்து விடும்.
அரசியல் அதிகாரம் உருவாயிற்று.
மனிதனின் மரபணுவிலேயே இடம் பிடித்துள்ள ஒரு அடிப்படைக் குணம் தனி நபர் துதி. உலகில் தோன்றியுள்ள மதங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. இந்து மதத்தைத் தவிர, மற்ற மதங்கள் அனைத்தும் தனிநபர்களின் கருத்துக்களால் உருவாக்கப் பட்டவை.
காந்தி என்கிற தனிநபரை முன்னிலைப் படுத்தாமல் இருந்திருந்தால் இந்தியா இவ்வளவு எளிதாக சுதந்திரம் அடைந்திருக்க முடியாது. அதே போல மாசேதுங் இல்லாமல் சீனாவும், ஜின்னா இல்லாமல் பாகிஸ்தானும் தோன்றி யிருக்க முடியாது. அதே போல அலெக்ஸாண்டர், நெப்போலியன், அசோகர் எனத் தனி நபர்கள் தான் சரித்திரம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள்.
மக்களாட்சி மலர்ந்த பிறகும் கூட, தனி நபரை முன்னிலைப் படுத்தாத அரசியல் கட்சிகள் தேர்தல்களில் பெரு வெற்றி பெறுவதில்லை. உதாரணமாக, மோடி என்கிற தனிநபரை முன்னிலைப் படுத்தாத வரை, பாரதீய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதேயில்லை.
மேலும், தனித்தன்மை மிக்கவராகத் தன்னை வித்தியாசப் படுத்திக் காட்டும் திறனற்ற தனி நபரும் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில், தனித் தன்மையோடு தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள முடிந்த தனி நபரைத் தான், மக்கள் தங்கள் ஆட்சியாளனாகத் தேர்வு செய்கிறார்கள். மனித வரலாற்றின் எந்தக் கட்டத்திலும் இந்த நிலைமை மட்டும் மாறவே யில்லை. மனித குலம் உள்ள வரை, தனிநபர் துதி மாறவும் மாறாது. மறையவும் மறையாது.
ஆகவே துணிச்சலாகச் செயலாற்றும் ஒரு தீரன், இரக்கமற்ற பலவான் ஒருவன் காட்டு மிராண்டிகளுக்குத் தேவைப்பட்டான். சர்வாதிகாரம் தேவைப் பட்டது. மனித இனத்தை வழி நடத்த, எப்போதெல்லாம் ஒரு சர்வாதிகாரி தேவைப்படுகிறானோ அப்போதெல்லாம் தவறாமல் ஒரு நபர் தோன்றுவான் என்பது ஒரு சமூக விதி.
அவ்விதியின் படி, வலியவன் ஒருவன் உருவானான். அவன் சொல் ஏற்கப்பட்டது. வலியவனை ஏற்றுக் கொண்ட போது, வாழ்வது எளிதாயிற்று. வாழ்க்கை பாதுகாப்புடையதாயிற்று. தன் உடைமைகளையும், பெண்ணையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அது உதவிகரமாய் இருந்தது. ஆகவே வலியவனை வழிபடுவதும், அவனுடன் இணந்து கொள்வதும் வழக்கமாயிற்று.
குட்டி போட்டு பாலூட்டி வளர்க்கும் விலங்குகள் பலவானைத் தலைவனாக ஏற்றுக் கொள்வது ஒரு பொது விதி. மனிதனும் அதே விலங்கினத்தைச் சேர்ந்தவனே. ஆகவே, வலியவன் தலைவனானான்.
ஒரு கும்பலை அடிமையாக்கிய வலியவன் அதே உளவியல் நுணுக்கத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்த கும்பல்களை அடிமையாக்கினான்.
காற்று, தண்ணீர், உறக்கம், உணவு மற்றும் பாலின்பம் மட்டுமே அவனுடைய தேவைகள். இவற்றில் முதல் மூன்றும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியவை. அடுத்த இரண்டும் அவனுடைய அடிமைக் கும்பல்களால் பொதுவில் வழங்கப்பட்டன. அவனுக்கு மட்டுமின்றி அவனுடைய கையாட்களுக்கும் அவை பொதுவாயின. இதைக் கண்டு, வலியவனின் கையாட்களாகச் சேர்ந்து கொள்ள பலர் தயாராயினர். இவ்வாறாக வன்முறையாகச் செயல்படும் வல்லமைமிக்க கூட்டமொன்று வலியவனின் தலைமையில் உருவாயிற்று.
அந்தக் கூட்டத்தை கண்டதுமே எந்தக் கும்பலும் சரணடைந்தது. சரணடையாத கும்பல் துவம்சம் செய்யப் பட்டது. பெண்கள் சூறையாடப் பட்டனர். குழந்தைகள் கொல்லப் பட்டனர். வலியவன் பலம், மிருக பலத்தைக் கடந்து, அசுர பலமாக மாறிப் போயிற்று. அதன்பின் அவன் வைத்ததே சட்டம் என்றாயிற்று. அவனது சொல்லே வேதவாக்காயிற்று. இவ்வாறாக ஏராளமான கும்பல்களைக் கொண்ட கூட்டத்திற்குத் தலைவனாகத் தன்னை உருவாக்கிக் கொண்டான்.
அவனுக்கு ஊழியம் புரிய ஒவ்வொரு கும்பலிலிருந்தும் சிலர் பணிக்கப் பட்டனர். அவர்களிலிருந்து ஒரு நபரைத் தேர்வு செய்து அந்தந்தக் கும்பலுக்கு தன்னுடைய பிரதிநிதியாக நியமித்து, அந்த பிரதிநிதிகளின் தலைவனாக அந்த வலியவன் உருவாகி விட்டான்.
அடிமைக் கும்பல்கள் அனைத்தும் அவனுடைய அதிகாரத்தின் படி நடக்க வேண்டியதாயிற்று. அந்த அடிமைகளைக் கொண்ட பகுதி அவனுடைய நாடாக உருவாயிற்று. அந்த வலியவனே அரசனானான். நாடும் அரசனும் உருவான பிறகு, ஆணாதிக்கம் என்பது இயல்பாகவே உருவாகி விட்டது.
இந்த முரட்டுக்கூட்டத்தின் முன்னால், தாயைத் தலைவியாய் ஏற்று வாழ்ந்து கொண்டிருந்த ஆண்கள் தோற்றுப் போனார்கள். அவர்கள் தங்கள் தோழியரையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருந்ததால், முரட்டுக் கூட்டத்தின் முன் சரணடைந்தே ஆக வேண்டிய நிப்பந்தத்தில் இருந்தார்கள். அதனால், ஆண்களைக் கொண்ட முரட்டுக் கூட்டம் உருவாகி, பெயரிடப் படாத நாடுகள் உருவான போது, தாயாதிக்கம் முடிந்து போயிற்று.
பல தார உறவு என்பது மனிதனின் மரபணு அறிவு. அதனால், தாயின் காலத்தில் இணைமாற்றம் இயல்பான செயலாகவே நிகழ்ந்து கொண்டிருந்தது. தாயின் சட்டத்தை மீறியதாகக் கண்டுபிடிக்கப் படும் ஆண் தண்டிப்பது போன்ற பாவனைகள் மூலமாக, தாயால் பெரும்பாலும் மன்னிக்கப் பட்டான். அதனால் பெண்ணை மையமாய்க் கொண்ட கலகங்கள் பகிரங்கமாக நடைபெறா விட்டாலும் மறைமுகமாக நடந்து கொண்டே தான் இருந்தன. ஆனால், மூர்க்கத்தனமான சண்டையாகவோ, கொலைச் செயலாகவோ மாறும் முன், உடனுக்குடன் தாயால் அவை சமரசப் படுத்தப் பட்டன.
ஆனால், தாயாதிக்கம் முடிந்த பிறகு, களவொழுக்கப் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க ஆளில்லாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், தாயைப் போல் சுமுகமான முறையில் வலியவனின் பிரதிநிதியால் தீர்த்து வைக்க முடியவில்லை. அதன் காரணமாக, காமாந்தகக் கலகங்களில் ஈடுபடும் கலக இனமாக, மனித சமூகம் மீண்டும் மாறத் தொடங்கியது.
பெண்ணின் பாலியல் சுதந்திரம் முடக்கப் பட்டது.
ஆனால், இந்த நிலைமை நீண்ட காலம் நீடிக்கவில்லை. நாடும், அரசனும், படைகளும் தோன்றிய பிறகு, கலகக் கலாச்சாரம் மிகக் கடுமையான முறையில் ஒழுங்கு படுத்தப் பட்டது. பலதார உறவு ஒடுக்கப் பட்டது. அமைதியை நிலை நாட்டுவதில் தாயைப் போல சமரச பாணியைப் பின்பற்றவோ, அல்லது சாந்தமான முறையைக் கையாளவோ, அரசன் தயாராக இல்லை.
அரசன் ஆணாக இருந்தான். அவனுடைய படை முரட்டுத்தனமான ஆண் களைக் கொண்டதாக இருந்தது. அதனால் மனித சமூகம் முழுக்க முழுக்க ஆணாதிக்கமுடையதாக இருந்தது. அதனால், முதல் வேலையாகப் பெண்ணின் பாலியல் சுதந்திரம் முடக்கப் பட்டது. பெண் சுதந்திரம் தான் பலதார உறவுக்கே முதற் காரணம் என்று கருதப் பட்டது. அதனால், ஆணின் அடிமையாகவே பெண் அறிவிக்கப் பட்டாள்.
குறிப்பிட்ட ஆணின் அடிமை என்பதைப் பிறர் அறிந்து கொள்ளும் வகையில் பெண்ணின் உடலைக் காயப்படுத்தி, தழும்புகள் உருவாக்கும் முறை கூட அமுலில் இருந்திருக்கிறது. அது தான் பிற்காலத்தில், பச்சை குத்துதல், மோதிரம், தாலி போன்ற அடையாளங்களாக மாற்றமடைந்தது.
இவ்வாறு அடிமையாக அறிவிக்கப் படும் பெண்ணைப் பொறுத்த வரை, தோழனின் குழந்தையைப் பெற்றுக் கொடுப்பது, வளர்ப்பது, தோழனுக்குப் பணிவிடை புரிவது, தோழனுக்குரிய இன்பங்களைத் தருவது அவளது கடமை.
அவளுக்குரிய இன்பத்தைப் பற்றி பெண் சிந்திக்கவே கூடாது. களவொ ழுக்கம் மிகக் கடுமையான தண்டனைக் குரியது. களவொழுக்கம் நிகழ்ந்தால், பெண் தான் குற்றவாளி. ஆண் நிரபராதி. ( இப்போது களவொழுக்கம் நிகழ்ந்தால் ஆண் தான் குற்றவாளி. பெண் நிரபராதி. )
ஏனெனில், ஆண் விதைகளை வழங்கக் கூடியவனாகவும், பெண் விளை நிலமாகவும் இருந்ததால், அடுத்தவன் பயிரை பெண்ணின் தோழன் வளர்க்கும் சூழல் உருவாகிறது. மேலும், விதையைக் கொடுத்த ஆணுக்கும் விதையை வாங்கி வந்த பெண்ணின் தோழனுக்கும் பகை உருவாகி விடுகிறது. ஏதோ வொரு வகையில் சமூகத்தில் அது கலவரமாக வெடித்துக் கொண்டேயிருக்கிறது.
ஆகவே, கருவுறும் வாய்ப்பைப் பெற்றுள்ள பெண்ணின் களவொழுக்கம் தான் சமூகக் கலவரங்களுக்கு முதற் காரணம் என்று ஆண்கள் கருதினார்கள். இந்தக் கருத்து உருவான காலத்திலிருந்து தான், மனைவியை ஒரு போகப் பொருளாகப் பாவிக்கும் போக்கு துவக்கமாயிற்று.
பெண் பலிகிடா ஆக்கப்பட்டாள்.
தன்னுடைய தோழி வேறொரு ஆணுடன் களவொழுக்கத்தில் ஈடுபட்டதை ஒரு ஆண் கண்டு பிடித்து விட்டால், அந்தப் பெண் மிகவும் கொடூரமாகத் தண்டிக்கப் பட்டாள்.
இப்போது ஒரு கலாச்சாரம் இருக்கிறதல்லவா? தன் கணவன் வன் பாலுறவில் ஈடுபட்டதாக ஒரு மனைவி கூறினால் போதும். விவாகரத்து வழங்கப் படும். அதே போல, ஆண் கூறிய அனைத்தும் அந்தக் காலத்தில் ஏற்கப் படும்.
விசாரணை கூட கீழ்க்கண்டவாறு தான் நடைபெறும். அவள் சாத்தானோடு உடலுறவு கொண்டதாக ஒப்புக் கொள்ளும்படி கடுமையாகத் தாக்கப் படுவாள். அடி தாளாமல் ஒப்புகொண்ட பின், அந்த சாத்தானின் ஆண் குறி பற்றி விசாரிக்கப்படும். அதன் அளவைப் பற்றியும், வடிவத்தைப் பற்றியும் அவள் விளக்கியாக வேண்டும். அதை விளக்கமாகக் கூறும் வரை அவள் கடுமையாகச் சித்திரவதை செய்யப் படுவாள்.
அந்த சித்திரவதையைத் தாங்கமுடியாமல், அவள் ஏதேதோ கற்பனை வடிவங்களையெல்லாம் கூறுவாள். பெரிய பெரிய அளவுகளைக் கூறும் படி அவள் துன்புறுத்தப் படுவாள். இறுதியாக ஆண்களாகவே ஒரு வடிவத்தைச் சொல்வார்கள். அதை அவள் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சித்திரவதை தொடரும். அதனால் ஆண்களால் சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களையும், அவர்களால் சொல்லப்படும் ஆண்குறி குறித்த கற்பனை வடிவங்களையும், அளவுகளையும் அவள் ஒப்புக் கொள்வாள்.
அதன் படி, சாத்தானின் ஆணுறுப்பு உடலிலிருந்து வெளிவரும் போது ஒரே உறுப்பாகத் தான் வரும். ஆணின் பாலுறுப்புக்கும், சாத்தானின் பாலுறுப்புக்கும் எவ்வித வித்தியாசமும் இருக்காது. ஆனால். அது விரைப்படையும் போது, ஒண்டி வில் குச்சியைப் போல், ஆங்கில எழுத்து “வி” மாதிரி இரண்டு உறுப்பாக மாறும். அவ்வாறு மாறிய உறுப்பு, ஒரே நேரத்தில் பெண்ணுறுப்பு வழியாகவும், ஆசன வாய் வழியாகவும் ஏக காலத்தில் பாலுறவு கொள்ளும். அது பேரானந்தமாக இருக்கும் என்று சொல்லும் படியாக அவள் சித்திரவதை செய்யப் படுவாள்.
சித்திரவதை தாங்க முடியாமல் ஒப்புக் கொண்ட பின், அதைப் போன்ற இன்பத்தை பிறருக்கும் அவள் அறிமுகப் படுத்தி விடுவாள். ஆகவே அவள் கொல்லப்பட வேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையில் கொல்லப்படுவாள்.
பெண்கள் அனைவருக்கும் பாடமாக இருக்கும் வகையில் கல்லால் அடித்துக் கொல்வது, உயிர் பிரியும் வரை மரத்தில் கட்டி தொங்க விட்டு விடுவது, உயிரோடு தீயிட்டுக் கொல்வது போன்ற முறைகளில் தண்டனை நிறைவேற்றப் படும்.
பலதார உறவை இயற்கையாய்க் கொண்ட மனித இனத்தை ஒரு தார உறவிற்குள் வாழப் பழக்கப் படுத்துவதற்காக, பெண் பலிகிடா ஆக்கப் பட்டாள். ஆனால், ஆண் மட்டும் முற்றிலுமாக மன்னிக்கப் பட்டான்.
திருமண நிறுவனம் உருவாக்கப் பட்டது.
ஆணைக் குற்றமற்றவனாகக் கருதியதால், எவ்வித அச்சமும் இல்லாமல் ஆண்கள் பெண்ணை அணுகுவதும், அதற்காகப் பெண்கள் கொலையுண்டு போவதும் சமூகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையை முடிவிற்குக் கொண்டு வர அவ்வப்போது தோன்றிய ஞானியர் பலர் முயற்சித்தனர். பல்வேறு வடிவங்களை ஆராய்ந்தனர்.
ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடி வாழும் வாழ்க்கை முறை தான், எந்தவொரு ஏற்பாட்டைக் காட்டிலும் இயற்கையோடு இயைந்து செல்லக் கூடியதாக இருந்ததால், அந்த ஏற்பாட்டிலேயே வேறொரு முக்கியமான விதியைப் புகுத்தி, ஒழுங்கு முறையுடைதாக மாற்றியமைத்தனர். அவ்விதியின் படி, ஆணின் மனைவி அவனுடைய தனிச் சொத்தாக அறிவிக்கப் பட்டாள். அந்த சொத்தைக் கொள்ளையிட, எந்த ஆண் முயற்சித்தாலும், அது தண்டனைக்குரிய செயல் என்கிற கருத்து உருவாக்கப்பட்டது.
தனது சொத்தைத் தவிர, பிற பெண்களை நெருங்கக் கூடாது என ஆணின் பாலியல் நடவடிக்கைகளிலும் கற்பொழுக்கத்தைப் புகுத்தி, சமூகத்தில் அமைதியை நிலை நாட்டும் விதிகளை உருவாக்கி, அதை ஒரு சடங்கின் மூலம் துவக்கி வைத்தனர். அது தான் திருமணம் என்கின்ற சடங்கின் மூலமாக உருவாக்கப் படுகிற குடும்ப வாழ்க்கை.
குடும்ப நிறுவன அமைப்பு முறை என்பது தனி நபர்களுக்கான வாழும் வழி முறையாக மட்டுமின்றி, சமூகத்தின் கட்டமைப்பைச் சிதைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்கின்ற, சமூகத்தில் அமைதியைப் பேணுகின்ற பொது நலச் சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது.
அதன் படி, மனைவி என்பவள் ஆணின் முதல் சொத்தாக அறிவிக்கப்பட்டாள். அச்சொத்தை அபகரிக்க, யார் முயன்றாலும், அது ஒரு குற்றச் செயல் என்று அறிவிக்கப் பட்டது. அதன் மூலமாக, அடுத்தவன் மனைவியை நெருங்குவது தண்டனைக்குரியது என்கிற கருத்தும் உருவாயிற்று.
இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகள் பல்வேறு வடிவங்களில் வாழ்ந்து பார்த்தபின், இறுதியாக இருப்பதில் சிறந்ததோர் ஏற்பாடாக இருந்த திருமண நிறுவன அமைப்பு முறை மனித சமூகத்திற்கு அறிமுகப் படுத்தப் பட்டு, நிரந்தரமாக்கப் பட்டது.