கேளுங்கள். பெறுவீர்கள்! தேடுங்கள். கண்டடைவீர்கள்! எண்ணம் போல் வாழ்க்கை! தீதும் நன்றும் பிறர் தர வாரா! இவையெல்லாம் பிரபஞ்சப் பேருண்மைகள். ஆனால், பலர் வாழ்விலே பிரபஞ்சப் பேருண்மைகள் பொய்த்துப் போகின்றன.
ஏனெனில், கேட்கத் தெரியாமல் பலர் கேட்கிறார்கள். அதனால், அவர்கள் கேட்பதைப் பெற முடிவதில்லை. எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், தேடுவதையும் பெற முடிவதில்லை. தானியங்கி முறையிலே எண்ணுகிறார்கள். சிந்திப்பதே இல்லை. அதனால், அவர்கள் எண்ணம் போலவே வாழ்க்கை அமைந்தும், அவர்களுக்கு அது புரிவதில்லை. சிந்திக்காமல், எண்ணங்களை நிகழ விட்டதால், தீமைகளை இவர்களே ஈர்த்து விட்டுத் தீமைக்குப் பிறரே காரணம் என்று புலம்புகிறார்கள்.
மேற்கண்ட உண்மையை நிரூபித்த பின், செல்வந்தராக உங்களை உருவாக்கும் நூலுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன்.
உங்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? வாழ்வில் எதை அடைய விரும்புகிறீர்கள் என்று கேட்டால் ஒருவர் சொல்கிறார். “பெரிய ஆள் ஆகி, மக்கள் சமூகத்துக்கு உதவ வேண்டும்”
இந்த நோக்கத்தை, “ஒரு நல்ல நோக்கம்” என்றே எவரும் சொல்வர். ஆனால் இந்த நோக்கத்தில் இரண்டு பழுதுகள் உள்ளன. முதல் பழுது, நோக்கத்தில் தெளிவில்லை. “பெரிய ஆள்” என்றால் என்ன பொருள்? இது குறித்துத் திட்டவட்டமான தகவல் இல்லா விட்டால் பிரபஞ்சத்துக்குப் புரியாது. அதனால், பிரபஞ்சம் உதவாது.
அதாவது, சிலருக்குப் பியூன் கூட “பெரிய ஆள்.” ஒருவருக்கு ஏ.எஸ்.பி “பெரிய ஆள்.” இனியொருவருக்குப் பிரதமர் தான் “பெரிய ஆள்.” மற்றொருவருக்கோ அமெரிக்க ஜனாதிபதி தான், “பெரிய ஆள்.” ஆகவே, உங்கள் “பெரிய ஆள்” என்பதன் பிம்பம் எது?
“பெரிய ஆள்” என்கிற இடத்தில் ஒரு நபரை உருவகப் படுத்திக் கொள்வதே நோக்கத்தைத் தெளிவு படுத்தும். உதாரணமாக, தினம் பத்து கோடி ரூபாய் சம்பாதிக்கிற சுந்தர் பிச்சை மாதிரி ஆக வேண்டும் என்பது தெளிவான தகவல். அடுத்து, எந்த வகையில் மக்களுக்கு உதவ வேண்டும்? எந்த துறையில் உதவ வேண்டும்? இது குறித்த தகவலும் தெளிவாக இல்லை. இதையும் தெளிவு படுத்த வேண்டும்.
இரண்டாம் பழுது, இந்த நோக்கத்தில் வெற்றி பெறத் தேவையான உந்து விசை இல்லை. மக்களுக்கு உதவுவதன் மூலம் நீங்கள் அடைய விரும்புவது என்ன? உதவுவதன் பின்னால் உள்ள உங்கள் சுய நல நோக்கம் என்ன? பணமா? பணமெனில், எவ்வளவு? புகழா? புகழெனில், எதற்காகப் புகழ்? யார் மெச்ச வேண்டும் என்பதற்காகப் புகழ் அடைய விரும்புகிறீர்கள்? மேற்கண்ட உங்கள் சுயநலம் சார்ந்த ஆசைகளைப் பற்றி விழிப்புணர்வோடு சிந்தனை செய்யுங்கள்.
சுயநலத்துக்கு முன்னுரிமை அளிக்காத நோக்கம் விருப்பமாக மட்டுமே இருக்குமே தவிர, “கொளுந்து விட்டு எரிகிற நெருப்பாக” மாறாது. “எரிகிற நெருப்பாக” மாறாத நோக்கம் நிறைவேறாது. ஆகவே, விருப்பத்தை நெருப்பாக மாற்றக் கற்றுக் கொள்ளுங்கள்.
தங்கள் நோக்கம் குறித்துச் சிலர் சொல்கிறார்கள். “நிறையச் சம்பாதித்துப் பெரிய ஆளாக ஆக வேண்டும்”
இந்த நோக்கத்தையும், “நல்ல நோக்கம்” என்றே சொல்வார்கள். ஆனால் இதிலும் தெளிவில்லை. உங்கள் நோக்கம் பிரபஞ்சத்துக்குப் புரியாது. ஏனெனில், “நிறையச் சம்பாதிப்பது” என்றால் எவ்வளவு சம்பாதிப்பது? “நிறைய” என்பது எவ்வளவு என்பதைத் துல்லியமாகத் தெரிவித்தால் மட்டுமே பிரபஞ்சத்துக்குப் புரியும்.
ஒரு கதை. “பணம் தேவைப் படுவோர் எல்லாம் வந்து கேளுங்கள் தருகிறேன்” என்று அறிவித்தார் கடவுள். ஒரு நபர் ஒரு முறை தான் கேட்க வேண்டும் என்பது நிபந்தனை. குப்பன் சென்றான். எவ்வளவு வேண்டுமென்று கேட்ட கடவுளிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வேண்டுமென்று கேட்டான் குப்பன். பல மூடைகளுக்கு மத்தியில், ஒரு மூட்டையைத் தேடி எடுத்துக் கொடுத்தார் கடவுள்.
பணத்தை எண்ணிப் பார்த்த குப்பனுக்கு அதிர்ச்சி. ஒரு கோடிக்கும் அதிகமாக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே மூடையில் இருந்தது. “கடவுளே நான் கேட்ட தொகை இல்லையே” என்றான் குப்பன்.
‘ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வேண்டுமென்று கேட்டாய். எவ்வளவு அதிகமாக வேண்டுமென்று தெளிவாகக் கேட்கவில்லை. அதனால் ஒரு கோடிக்கும் அதிகமாக – ஒரு ரூபாய் – இருந்த மூட்டையைச் சிரமப் பட்டு நான் தேடி எடுத்துக் கொடுத்தேன். இரண்டாம் வாய்ப்பு இல்லை. போய் வா” என்றார் கடவுள்.
கேட்கத் தெரியாமல் கேட்டால் இப்படித் தான் கிடைக்கும்.
இது தவிர, எதற்காக அவ்வளவு பணம் வேண்டும்? மேலும் எவ்வளவு நாட்களில் வேண்டும்? இதையும் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
எதை அடைய விரும்பினாலும், அதை அடைவதால் தனிப் பட்ட முறையில் நீங்கள் அடையப் போவது என்ன என்பது உங்கள் ஆழ் மனதுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். அப்போது தான் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றத் தேவையான செயல்களில் ஆழ் மனம் ஈடுபடும். இல்லா விட்டால், உங்கள் ஆழ் மனம் உங்களுக்கு உதவாது. ஆழ் மனதின் உதவியின்றி விரும்பியதை அடைய முடியாது. ஆகவே அடைய விரும்புவதை விழிப்புணர்வோடு அடைய விரும்புங்கள்.
வேறு சிலர் சொல்கிறார்கள். “நிறையப் படித்து, மக்களின் அறியாமையைப் போக்க வேண்டும்”
‘நிறைய படிப்பது” என்றால் எவ்வளவு படிப்பது? இந்தத் தெளிவு இங்கே இல்லை. எந்தத் துறை பற்றிப் படிக்க வேண்டும்? இதுவும் தெளிவாக இல்லை. அடுத்து அதை வைத்து மக்கள் சமூகத்துக்கு எவ்வகையில் சேவை செய்ய வேண்டும்? அந்தச் சேவையின் மூலம் தனிப் பட்ட முறையில் பெற விரும்புவது என்ன? இவை பற்றித் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் போது தான், நிறையப் படிக்க வேண்டும் என்கிற விருப்பம் தெளிவான நோக்கமாக மாறும். தெளிவான நோக்கமே பிரபஞ்சத்தால் நிறைவேற்றப் படும்.
அடுத்து, “மக்களின் அறியாமையைப் போக்குவது” என்றால் என்ன பொருள்? இதில் தெளிவு தேவை. மக்களிடம் காணப்படும் எல்லா அறியாமையையும் அகற்ற வேண்டும் என்பது, பிரபஞ்சத்தால் கூட முடியாத செயல். “நோபல் பரிசு” பெற்ற ஒரு விஞ்ஞானி கூட, வேறு துறைகளில் அறியாமை மிக்கவராக இருப்பார். அனைத்துத் துறையிலும் அறிஞராய் இருப்பது யாருக்கும் சாத்தியமில்லை.
அனைவரிடமும் அறியாமை உள்ளது. பூமிக்கு வந்த கடவுள் மனிதனிடம் ஒரு வரம் கேட்டார். மனிதனுக்கு ஒரே வியப்பு. “கடவுளே உங்களிடம் இல்லாத எது என்னிடம் உள்ளது? என்னிடம் போய் வரம் கேட்கிறீர்களே” என்றான். “உள்ளது, உன்னிடம் ஏராளமாக உள்ளது. என்னால் சுமந்து செல்ல முடியாத அளவுக்கு உன்னிடம் உள்ளது என்பதை நான் அறிவேன். அதனால் தான் கேட்கிறேன். கொடுப்பாயா?” என்றார். மனிதன் கொடுக்க ஒப்புக் கொண்டான். கடவுள் கேட்டார். “உன்னிடம் உள்ள அறியாமை என்கிற சொத்தை எனக்குக் கொடு” என்றார். மனிதனும் கொடுத்தான். ஆனால் கடவுளால் சுமந்து செல்ல முடியாத அளவுக்கு அந்த மூட்டை இருந்தது. அவர் தன்னால் சுமக்க முடிந்த அளவு அறியாமையை மட்டுமே எடுத்துக் கொண்டார். மீதியை மனிதனிடமே கொடுத்து விட்டார். ஆகவே கடவுளால் கூடச் சுமக்க முடியாத அளவுக்கு அறியாமையை வைத்திருப்பவன் மனிதன்.
ஆகவே, எந்த அறியாமையைப் போக்குவது? எழுதப் படிக்கத் தெரியாத அறியாமை, மனதைக் கையாளத் தெரியாத அறியாமை, இரு பாலரும் இன்புறும் வகையில் பாலுறவாடத் தெரியாத அறியாமை, உறவைப் பேணத் தெரியாத அறியாமை, உலகுடன் ஒட்டி வாழத் தெரியாத அறியாமை, அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அறியாமை, பணத்தைக் கையாளத் தெரியாத அறியாமை, செல்வந்தராக உருவாகத் தெரியாத அறியாமை, ஆன்மீக அறியாமை என எண்ணற்ற அறியாமைகளுக்கு உரிமையாளன் மனிதன். ஆகவே, எந்த அறியாமையைப் போக்க வேண்டும் என்கிற தெளிவு தேவை.
இவை தவிர, மக்களின் அறியாமையைப் போக்கும் பணி மூலம் நீங்கள் அடைய விரும்புவது என்ன? பணமா? ஆமென்றால் எவ்வளவு? புகழா? ஆமென்றால், உலகளாவிய புகழா? தேசிய அளவிலா? இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில் கிடைக்காத வரை, ஆழ் மனதைத் தீண்ட முடியாத வெற்று விருப்பமாகவே உங்கள் நோக்கம் இருக்கும். வெற்று விருப்பம் ஒரு மலடு. மலடு எண்ணியதை ஈனாது.
சிலர் சொல்கிறார்கள். “என் பெற்றோரை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.”
நல்ல நோக்கம். ஆனால், “நன்றாக” என்றால் என்ன பொருள்? “நல்ல முதியோர் இல்லத்தில் என் பெற்றோரை விட்டிருக்கிறேன். தலா பதினைந்தாயிரம் வீதம் இருவருக்கும் மாதா மாதம் முப்பதாயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஒருவர் சொல்கிறார்.
இதை வைத்து, இவர் தன் பெற்றோரை நன்றாக வைத்திருக்கிறார் என்று சொல்லி விட முடியுமா? முப்பதாயிரம் அல்ல, மாதம் முப்பது லட்சமே கொடுத்தாலும், முதியோர் இல்ல வாழ்க்கை நிம்மதியைக் கொடுக்குமா? அல்லது கூழே ஆனாலும், குழந்தைகளின் முகத்தைத் தினமும் பார்த்த படி வாழும் வாழ்க்கை நிம்மதியைக் கொடுக்குமா?
ஆகவே, “பெற்றோரை நன்றாகப் பேணுதல்” என்றால் என்ன பொருள் என்கிற தெளிவு தேவை.
உதாரணமாக, எத்தகைய மாளிகையில் அவர்கள் வசிக்க வேண்டும்? எத்தகைய வாகனத்தில் அவர்கள் பயணிக்க வேண்டும்? எந்த மாதிரி ஆடைகள் மற்றும் எத்தனை ஆடைகள் அவர்களிடம் இருக்க வேண்டும்? எத்தனை பணியாட்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்? மேற்கண்டவற்றை வரையறை செய்தால் தான், பெற்றோருக்காக நீங்கள் எவ்வளவு பணமீட்ட வேண்டும் என்கிற தெளிவே பிறக்கும்.
தெளிவான நோக்கம் நிறைவேறியே தீரும். மேலும், பெற்றோரை முன்னிறுத்துவதால் இந்த நோக்கத்தில் போதுமான சுயநலம் உள்ளது. ஆகவே இது நிறை வேறும். இது நிறைவேறுவதால் இந்த நோக்கத்தைக் கொண்டுள்ள மனிதரின் வாழ்வும் முன்னேறும்.
சிலர் சொல்கிறார்கள். “மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும்.”
மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றால் என்ன பொருள்? “சாகா வரம்” பெற்று வாழ்வதா? “சாகா வரம்” பெற்று வாழும் மனிதர் ஒருவர் கூட உலகில் இல்லை. கிருஸ்ணர், இராமர், புத்தர் வரை எவரும் இப்போது இல்லை. ஆனால், அவர்கள் புகழ் எப்போதும் இருக்கும்.
உதாரணமாக, விவேகானந்தர் – 39, சாணக்யர்- 44, அகத்தியர் – 49, இராமகிருஸ்ணர் – 50, ஓஷோ – 59, ரமணர் – 71 வயது வரை உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். எனினும் அவர்களைப் பற்றிய தகவல் பல நூறாண்டுகளுக்குப் பூமியில் இருக்கும்.
மேற்கண்டோரில் ஒருவரைப் போல் வாழ வேண்டும் என்று தீர்மானிக்கலாம். அவ்வாறு தீர்மானித்தால், அவர்கள் மேற்கொண்ட பயணத்தைத் தான் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மரணமில்லாப் பெருவாழ்வு வாழக் கிளம்பியோரில், கோடியில் ஒருவர் கூட அதை அடைய முடிவதில்லை. பெரு நிறுவன மடாதிபதிகளாக ஒரு சிலர் உருவாகி இருக்கிறார்களே தவிர, மறைவுக்குப் பின் நினைவு கூறத் தக்கவர்களாக யாரும் உருவாகவில்லை. மரணமில்லாப் பெருவாழ்வு என்கிற பெயரில் வியாபாரம் மட்டுமே நடக்கிறது.
இந்த நோக்கம், யாரால், எப்படி உருவாயிற்று? இந்த நோக்கம் நிறை வேறும் போது ஒருவர் அடையக் கூடிய பலன் என்ன என்பதைப் பற்றி விழிப்புணர்வோடு சிந்தித்துப் பார்த்தால், இந்த நோக்கம் காணாமல் போய் விடும். அதன் பின், உங்களுக்கும் சமூகத்துக்கும் நன்மையளிக்கக் கூடிய நோக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதையடைய உதவும் உளவியல் அறிவைக் கொண்டு அடைய முயற்சிக்கலாம்.
சிலர் சொல்கிறார்கள். “என் நோக்கம் ஜீவ சமாதி அடைதல்.”
இந்த லட்சியத்தை எங்கிருந்து பெற்றார்களோ தெரியவில்லை. வாழ வேண்டிய வயதில், “சமாதி” அடைவதைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.
ஜீவ சமாதி என்றால் என்ன பொருள்? அதை அடைய விரும்புவது ஏன்? ஜீவ சமாதிக் கருத்து இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எங்காவது இருக்கிறதா? இந்தக் கருத்து உருவாகக் காரணம் என்ன? இதைப் பற்றி விழிப்புணர்வோடு சிந்தனை செய்து பார்க்கலாமா?
ஒருவர், தன் மரணத்தை அறிவிக்கிறார். “தியான நிலைக்குள் செல்லும் நான், அதே நிலையிலேயே நிரந்தர இடம் நோக்கிச் சென்று விடுவேன்” என்று சொல்லி விட்டுத் தியான நிலைக்குள் செல்கிறார்.
சீடர்களைத் தவிர யாருக்கும் தெரியாமல் நிகழும் இந்த நிகழ்வு, அவரது மரணத்துக்குப் பின் உலகத்துக்குத் தெரியப் படுத்தப் படும்.
அதன் பின், அவர் உடலை வேறோர் இடத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்குப் பதில், எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் உடலை விட்டு, அதைச் சுற்றிச் சுவர் கட்டி மூடி போட்டு விடுவார்கள். இது தான் சமாதி.
வினோபா பாவே இவ்வாறு தான் உலக வாழ்வை நீத்தார். “என் உடல் என்னைக் கைவிடும் முன், என் உடலை நான் கை விட விரும்புகிறேன்” என்று சொல்லி உயிர் நீத்தவர் வினோபா. 1942-ல், நடந்த, “வெள்ளையேனே வெளியேறு” போராட்டத்தின் போது முதல் சத்யாக்கிரகியாகக் களம் இறங்கிய இந்த தேச பக்தரின் மரணம், ஒரு வகைத் “தற்கொலை” என்று பலரால் சாடப் பட்டது.
இவ்வாறு இறந்தவர் உடலை மூடிய பின், அவர் நகம் வளர்கிறது. முடி வளர்கிறது. ஆகவே அவர் சாகவில்லை என்று கதை கட்டி, இறந்தவரை ஒரு புனிதரைப் போலச் சித்தரித்து, மக்களால் வழிபடப்படும் இடமாக அந்தச் சமாதி மாற்றப் படும்.
இது தான் ஜீவ சமாதி. “பணம் காய்க்கும் மரமாய்” இந்தச் சமாதி இருக்கும் வரை, “சமாதியை வைத்துப் பிழைப்பு நடத்துவோரால்” இது பராமரிக்கப் படும். வருவாய் நிற்கும் போது சமாதி சீந்துவாரின்றிச் சிதிலமாகி விடும். குட்டிச் சுவராய்க் கிடக்கும் சமாதிகளே சான்று.
மேலும், ஜீவ சமாதி என்கிற பெயரில் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால், சமாதி உருவாவதைத் தவிர இறந்தவருக்கோ அல்லது அவரைச் சார்ந்தவருக்கோ அல்லது சமூகத்துக்கோ எவ்வித நன்மையும் இல்லை. ஆகவே, ஜீவ சமாதி என்பது ஒரு பித்தலாட்டம்.
இதை அறிந்த பிறகும், “ஜீவ சமாதி” அடைவதே ஒருவருடைய லட்சியமாக இருந்தால், “தந்த்ரா இரகசியங்கள் நூலை” வாசித்து விட்டுத் தாம்பத்யத்தில் ஈடுபட்டால் போதும். பித்துக் குளித்தனமான எண்ணம் மறைந்து, மனதில் தெளிவும் விழிப்பான சிந்தனையும் பிறந்து விடும்.
அனுபவிக்க வேண்டிய பருவத்தில், இன்பங்களை அனுபவிக்க வாய்ப்பில்லா விட்டால் – இளமையில் வறுமை இருந்தால் – இத்தகைய பித்துக் குளித்தனமான சிந்தனைகள் மனதில் பிறப்பது இயல்பே. பாலுறவே இவர்களைக் குணப் படுத்தும் மருந்து.
வேறு சிலர் சொல்கிறார்கள். “தியானம் செய்து, ஞானமடைந்து மக்கள் உயர உதவப் போகிறேன்.”
பிரார்த்தனை என்பது நீங்கள் கடவுளோடு பேசுவது. தியானம் என்பது உங்கள் கடவுள் உங்களோடு பேசுவது. என் கடவுளும் உங்கள் கடவுளும் ஒன்று அல்ல. என் கடவுள் வேறு. உங்கள் கடவுள் வேறு. ஏனெனில், அவரவர் ஆழ் மனமே அவரவர் கடவுள். “கட + உள்” என்பதே, “கடவுள்.”
இதைத் தவிர கடவுள் என்கிற முதியவர் எவரும் உலகில் இல்லை. தியானம் சுயம் சார்ந்தது. தன்னை அறிதலே தியானத்தின் நோக்கம். நான் யார்? என் ஆசைகள் எவை? மற்றும் அந்த ஆசைக்குப் பின்னால் மறைந்துள்ள என் ஆணவம் எப்படிப் பட்டது? இதை அறிதலே தியானத்தின் விளைவு.
என் சிந்தனையை நான் கவனிக்கிறேன். அவ்வாறு என் சிந்தனையைக் கவனிக்கும் என்னையும் கவனிக்கிறேன். அவ்வப்போது மனமற்ற நிலைக்கும் செல்கிறேன். அதன் மூலம் என் சிந்தனையைச் செழுமையாக்குகிறேன்.
அதனால், உள்ளதை உள்ள படி பார்க்கும் திறனைப் பெறுகிறேன். உண்மைக்குள் மறைந்துள்ள பொய்யையும், பொய்க்குள் மறைந்துள்ள உண்மையையும் என்னால் கண்டுணர முடிகிறது.
அதனால் அனைவரையும் நேசிக்கும் அன்பாளராய் நான் மாறுகிறேன். யாரிடமும் குறையில்லை. யாரோடும் பகையில்லை. மக்கள் அனைவரும் பிரபஞ்சத்தின் குழந்தைகள்!
எதிரியும் மாயை! நண்பரும் மாயை! எல்லாம் “நான்” செய்யும் வேலை! ஆகவே ஒருவரைப் போற்றுவதோ அன்றித் தூற்றுவதோ, மகா அபத்தம்! “அன்பு மட்டுமே ஒரே ஆயுதம்!” மேற்கண்ட உண்மையை உணர்வதே தியானத்தால் பெறப் படும் ஞானம்.
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி வருந்திய வள்ளலார் ஞானி. தண்ணீர் இல்லாத் தாவரத் துயர் கண்டு யார் கண்ணில் கண்ணீர் வருகிறதோ, அவரே ஞானி. தியானம் மூலம் மேற்கண்ட நிலையை அடையலாம்.
ஞானம் அடைதல் என்றால், உங்களிடம் இல்லாத ஒன்றை நீங்கள் அடைவது அல்ல. இப்போது இருக்கிற ஒன்றைத் துறப்பதே ஞானம். “நான்” என்கிற உங்கள் அகங்காரத்தைத் துறப்பதே ஞானம்.
உலக நன்மைக்காக யாகம் செய்யலாம். யாக வாயுக்களால் வளி மண்டலம் சுத்தமாகும். யாகத்தால் வியாதி கூட குணமாகலாம்.
தியானம் அத்தகையது அல்ல. தியானம் செய்வதன் மூலம், உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ளலாம். ஏனெனில், அவரவர் தியானத்தால், அவரவர் மனம் மட்டுமே சுத்தமாகும்.
தியானம் செய்வதன் மூலம் மழையை நிறுத்தவோ, பெய்விக்கவோ முடியாது. பூகம்பத்தைத் தடுக்க முடியாது. கொரோனாவைக் கொல்ல முடியாது. திருடனைத் திருத்த முடியாது. மக்களின் வாழ்க்கையைச் செழிப்பாக்க முடியாது.
தியானம் அவரவர் மனதுக்கான மருந்து. மனதை ஆளும் திறனைப் பெறலாம். எந்தச் சூழலிலும் விழிப்போடு வாழலாம். கேள்விகளற்ற மனதைப் பெறலாம். சிந்தனையற்ற சுகத்தை நுகரலாம். செயல் படும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம். மனித நேயம் மிக்க மனிதனாய் வாழலாம். தியானம் அதி தீவிர சுய நலம்.
இதை அடைவது தான் உங்கள் நோக்கமெனில், இதை அடைந்த பின், உங்களுக்குத் தனிப் பட்ட முறையில் நீங்கள் செய்து கொள்ளப் போவது என்ன என்கிற திட்டம் தேவை. நீங்கள் விரும்புவது என்ன? பணமா? புகழா? எத்தனை ஏக்கரில் மடம் கட்ட வேண்டும்? எத்தனை ஆயிரம் கோடி பணம் தேவை? கைலாசா மாதிரி தனி நாடே வேண்டுமா?
மேற்படி ஒரு சுய நலத் திட்டமிருந்தால், நீங்கள் புகழ் அடைவீர்கள். உங்களிடம் பணமும் சேரும். பணமும், புகழும் இருந்தால் தான், உங்களை ஞானியென்றே மக்கள் நம்புவார்கள். அவ்வாறு நம்பினால் தான், உங்கள் பிரசங்கத்தைக் கேட்க வருவார்கள். இல்லா விட்டால், “யாரோ ஒரு பிச்சைக் காரன் உளறுகிறான்” என்று மக்கள் உங்களை மதிக்கவே மாட்டார்கள். எத்தகைய ஞானத்தை நீங்கள் பெற்றிருந்தாலும் இது தான் கதி.
ஏனெனில், கடவுளாகவே இருந்தாலும், ஏழையாக இருந்தால், எவரும் அவரை மதிக்க மாட்டார்கள். நாய்களின் சிறுநீரில் குளித்த படி மரத் தடியில் அனாதை மாதிரி நின்று கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான கடவுள்களே ஆதாரம்.
ஆகவே, சுயநல நோக்கம் இல்லா விட்டால், வன மலரின் வாசம் பயனின்றி வீசுவதைப் போல், பிறருக்குப் பயனின்றி உங்கள் ஞானத்தை நீங்கள் வீணடிக்கலாம். முகவரி இல்லாத இமய மலை ஞானிகளில் ஒருவராக வாழ்ந்து மடியலாம்.
ஒரு முக்கியத் தகவல். எந்த ஞானியும் பிறரை உயர்த்த வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஏனெனில், “உயிர்கள் அனைத்தும் சமம்” என்பதை உணர்தலே ஞானம்.
“இரு வேறு நிலை உலகில் இல்லை” என்பதை அறிவதே ஞானம்.
உயர்வு தாழ்வே உலகில் இல்லை. அனைத்தும் ஒன்றே. அனைத்தும் ஆற்றலே. அனைத்தும் சக்தி மயம். ஆகவே “உயர்வு, தாழ்வு” என்கிற இருமை இல்லை என்பதை உணர்தலே ஞானம்.
ஆகவே, “ஒருவரை உயர்த்துவது” என்கிற நோக்கமே ஞானத்துக்கு எதிரானது. அந்த நோக்கமே போலி ஞானிக்கான அடையாளம். இதைப் புரிந்து கொண்டவன், ஞானம் அடைந்து மக்கள் உயர உதவப் போகிறேன் என்கிற இலக்கை வைக்க மாட்டான்.
தன் வாழ்வின் நோக்கம் பற்றி வெறொருவர் கூறுகிறார். “நான் பிறவிப் பேரற்ற நிலையை அடைய வேண்டும்.”
பிறவியற்ற நிலையை அடைய வேண்டும் என்பது பிறரால் ஊட்டப் பட்ட நம்பிக்கையின் விளைவாக உருவான நோக்கம். அல்லது சந்தித்த ஏமாற்றங்களால் உருவான விரக்தியின் விளைவு.
முற்பிறவி, அடுத்த பிறவி என்பதெல்லாம் நிரூபிக்க முடியாத விசயங்கள். அதைப் பற்றிப் பேசுபவர் உண்மையின் அடிப்படையில் தான் பேசுகிறார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
செத்துப் போன எவரும் திரும்பி வந்து சொன்னதும் இல்லை.
வேறெந்தப் பாலூட்டியும், அடுத்த பிறவி பற்றிச் சிந்திப்பதாகவும் தெரியவில்லை. உதாரணமாக, “தானம் செய்தால் அடுத்த பிறவியில் நீ நன்றாக இருக்கலாம்” என்று சொல்லி மனிதனிடம் உள்ள இரண்டு பழங்களில் ஒன்றை நீங்கள் பிடுங்கி விடலாம்.
ஆனால், குரங்கை அவ்வாறு ஏமாற்ற முடியாது.
மிருகமும் மனிதரும் ஒன்றா என்று கேட்கலாம். இல்லை. மிருகமும் மனிதரும் ஒன்றல்ல. ஏனெனில், எந்தவொரு விலங்கையும் விட மனிதனே மகா சூழ்ச்சிகரமான மிருகம். முற்பிறவி, அடுத்த பிறவி பற்றியெல்லாம் கூறித் தன் சக மனிதனையே ஏமாற்றும் மிருகம்.
யோசித்துப் பாருங்கள். முற்பிறவி என்பது உண்மையானால், கிறிஸ்து பிறக்கும் போது பத்துக் கோடியாக இருந்த உலகின் ஜனத் தொகை, இப்போது எண்ணூறு கோடியாக உயர்ந்தது எப்படி?
மேலும், கி பி 2100 – ல் ஆயிரத்து முன்னூறு கோடியாக ஜனத் தொகை உயரப் போகிறதே! அது எப்படி நிகழ முடியும்?
இறந்தவர் மீண்டும் பிறக்கிறார் என்பதை உண்மையென்றே எடுத்துக் கொண்டாலும், உலகின் ஜனத் தொகை கி.பி. 1 -ல் இருந்த பத்து கோடியாகவே தானே இருக்க வேண்டும். அது எப்படி அதிகரித்தது? பத்துக் கோடிப் பேர் எண்ணூறு கோடிப் பேராக அதிகரித்தது எப்படி?
“புண்ணியம் செய்யும் விலங்குகள்” மனிதராய்ப் பதவி உயர்வு பெறுகின்றன என்றால், புண்ணியம் செய்யும் விலங்குகளின் விகிதம் எப்படி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது?
கி பி 1 முதல் கி.பி. 1000 வரையிலான முதல் ஆயிரம் ஆண்டுகளில், ஏராளமான விலங்கினங்கள் பூமியில் இருந்தன. ஆனால், வெறும் தொண்ணூறு கோடி விலங்குகள் மட்டும் தான் அப்போது மனிதராய்ப் பதவி உயர்வு பெற்றன.
ஆனால், கி பி 1000 முதல் கி.பி. 2000- க்குள் மட்டும் எப்படி அறு நூறு கோடி விலங்குகள் மனிதராகப் பதவி உயர்வு பெற்றன?
கி பி 2100 – ல் மக்கள் தொகை 1300 கோடியாக உயரப் போகிறதே. அப்படியெனில் புதிதாக ஐநூறு கோடி விலங்குகள் “புண்ணியம் செய்யும் பயிற்சியை” செய்து கொண்டிருக்கிறதா? புண்ணியம் செய்து கொண்டி ருக்கும் விலங்குகள் எவை?
மேலும், தொண்ணூறு சதவீத விலங்கினங்கள் ஒழிக்கப் பட்டு விட்ட தற்காலத்தில் மனிதராகப் பதவி உயர்வு பெறும் விலங்குகளின் எண்ணிக்கை மட்டும் எப்படி அசுர வேகத்தில் அதிகரிக்கிறது?
ஆன்மா! அது எப்போது, எதற்காக உருவாக்கப் பட்டது? அது ஏன் துன்புறுகிறது? அது ஏன் பாவச் செயல்களைச் செய்தது? பாவச் செயல்களைச் செய்ய வைத்தது யார்? அதன் பின் உள்ள காரணம் என்ன?
கடந்த ஜென்மப் பலன் தான் இந்த ஜென்மம் எனில், தீயில் விரலை வைத்தால் உடனே வேகுமா? அடுத்த ஜென்மத்தில் தான் வேகுமா? என் செயலின் விளைவு எப்போது வரும்? அடுத்த ஜென்மத்தில் சுகமாக வாழ, இப்போதிருந்தே புண்ணியம் சேர்ப்பது உச்ச பட்ச பேராசை அல்லவா? சொர்க்கம், நரகம் கற்பனை உலகங்களா? அல்லது எண்ணெய்க் கொப்பரை எரிந்து கொண்டிருக்கிறதா?
பிறவியற்ற நிலையை அடைந்துள்ள மனிதர் யார்? பிறவியற்ற நிலையை அடைந்து விட்டதை எவ்வாறு அறிந்து கொள்வது?
மேலும், வாழ்க்கையின் வெறுப்பு உள்ளவர் தானே அடுத்த பிறவி வேண்டாம் என்று சொல்வார்? இலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில்கேட்ஸ், அம்பானி, சுந்தர் பிச்சை போன்ற யாராவது இதைக் கேட்பார்களா?
மேற்கண்ட விளக்கத்திலிருந்தே முற்பிறவி, அடுத்த பிறவி என்பதெல்லாம் அபத்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
மேலும், இப்போது பெற்றுள்ள பிறவி உண்மையானது. ஆகவே, இதைச் சிறப்பாக வாழ்ந்து செல்வோம் என்றும் முடிவெடுக்கலாம்.
வாழ்க்கையோடு போராடாதீர்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். கொண்டாடினால் தான் வாழ்க்கை வசப் படும். வாழ்க்கை வசப் படும் போது பிறவிப் பேரற்ற நிலையை அடைய வேண்டும் என்கிற நோக்கம் மனதில் பிறக்காது.
சிலர் சொல்கிறார்கள். ” நான் கடவுளைப் பார்க்க வேண்டும்.” கடவுளைப் பார்ப்பதன் மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறேன் என்று யோசித்தால் போதும். இந்த நோக்கம் காணாமல் போய் விடும்.
மேலும், “கடவுளைப் பார்த்தே தான் ஆக வேண்டும்” என்று ஒருவர் அடம் பிடித்தால் நானே காட்டுகிறேன். கடவுள் இருக்கிறார். கடவுளை முழுமையாகப் பார்க்க முடியாது. ஆனால், தொட்டுணர முடியும். ஏனெனில், பிரபஞ்சம் தான் கடவுளின் உருவம்.
நாம் கடவுளால் படைக்கப்பட்ட ஒரு நுண்ணுயிர். அனைத்து ஜீவன்களும் கடவுளின் படைப்புக்களே. உருவாக்கியவரே படைப்பின் தாய். உருவாக்கியது பிரபஞ்சம். பிரபஞ்சம் தான் கடவுள்.
நீங்களும் நானும் பிரபஞ்சத்தின் குழந்தைகள். ஆகவே, நீங்கள் ஒரு தேவ குமாரன் அல்லது தேவ குமாரி. ஆகவே நீங்களும் கடவுளே.
அதனால், கடவுளைப் பார்க்க விரும்பினால், கண்ணாடி முன் சென்று நில்லுங்கள். உங்கள் கடவுள் உங்களுக்குக் காட்சியளிப்பார்.
இதைத் தவிர்த்து, மேரி மாதா மாதிரி, காளி மாதிரி, ஈசன் மாதிரி, ஏசு மாதிரி பார்க்க விரும்பினால், அது சாத்தியமில்லை. அவ்வாறு பார்த்ததாகச் சொல்வதெல்லாம் அவரவர் பிரமை.
ஏனெனில், உருவ வடிவில் கடவுள் இல்லை.
தூணிலும் துரும்பிலும் மலையிலும் மடுவிலும் பால்வெளிகள் அனைத்திலும் மற்றும் கருந்துளையிலும் இருப்பவர் எவரோ, அவரே கடவுள். ஆகவே பிரபஞ்சமே கடவுளின் உருவம். ஆகவே கடவுள் உருவமற்றவர். தொடலாம். ஆனால், பார்க்க முடியாது.
வேறு சிலர் சொல்கிறார்கள். “மதங்களைப் பற்றித் தெளிவாக நான் தெரிந்து கொள்ள வேண்டும். இது தான் என் நோக்கம்.”
மதம் என்பது என்ன?
உலகில் அவ்வப்போது அசாத்தியமான அறிவுடைய ஞானிகள் தோன்றுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை வழங்கிய அனுபவத்துக்கு ஏற்ப, வாழ்வியல் உண்மைகள் சிலவற்றை அவர்கள் கண்டறிகிறார்கள்.
அதன் பின், காட்டுமிராண்டியாக இருந்த மனிதனைப் பண்படுத்தும் நோக்கில் தாங்கள் கண்டறிந்த உண்மைகளைப் போதிக்கிறார்கள்.
அவர்கள் மறைந்த பின், அவர்கள் கூறிய வாழ்வியல் வழிகளைப் பின்பற்றும் ஒரு கூட்டம் உருவாகிறது. நாளடைவில், பிறரும் தங்கள் வழியைப் பின்பற்ற வேண்டும் என்று அக்கூட்டம் விரும்புகிறது. ஆகவே, தங்கள் வாழ்வியல் வழிகளை உலகெங்கும் கொண்டு சென்று போதிக்கும் ஒரு அமைப்பை அக்கூட்டம் உருவாக்குகிறது. அந்த அமைப்பு வளரும் போது, குறிப்பிட்ட கோட்பாடுகளை வாழ்வியல் வழிகளாகப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு நிறுவனமாக அது உருமாறுகிறது. அந்த நிறுவனம் தான் மதம்.
இது போல் பல மதங்கள் உள்ளன. அதனால் மக்களிடையே பிரிவுகள் உருவாகி ஒருவரை மற்றவர் அடித்துக் கொள்கிறார்கள். இதற்கு மேல், மதங்களைப் பற்றிப் பெருமை பேச எதுவும் இல்லை.
தன் மதமே பெரிதெனப் பேசுதல் அறியாமை. தன் மதமே சிறப்பென மதம் ஊட்டுதல் உலகை ஆளும் சூழ்ச்சி. மதத்தை வளர்த்தல் சிலரது பிழைப்பு. மனிதனுக்கு மதம் ஊட்டும் எந்தவொரு மதமும் தீதே. மனித மதத்தைக் குணப் படுத்துவதே மதம்.
இருப்பினும், மதங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதையே, ஒருவர் தன் நோக்கமாகக் கொண்டிருந்தால், அதைத் தெரிந்து கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார் என்கிற தெளிவு தேவை.
மதத் தலைவர் ஆகப் போகிறாரா? அதன் மூலம் அவர் பெற விரும்புவது என்ன? பணமா? புகழா? எவ்வளவு தேவை? இதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஏனெனில், சுயநலம் இல்லாமல் எதில் இறங்கினாலும், வெல்ல முடியாது. ஆகவே, தன்னுடைய சுயநல நோக்கம் என்ன என்பது தெளிவான பிறகு, “எதற்காக இதைப் படிக்கிறோம்” என்கிற விழிப்புணர்வோடு மதமும் தத்துவமும் என்கிற தலைப்பில் அவர் படிக்கத் துவங்கலாம்.
ஒருவர் சொல்கிறார். “நான் மனிதர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தான் என் நோக்கம்.”
“இதெல்லாம் ஒரு இலக்கா? உளவியல் அறியாமை” காரணமாக உருவான நோக்கம் இது. ஏனெனில், மனிதன் நதி போன்றவன். இப்போதுள்ள மனிதன் அடுத்த கணம் இருக்க மாட்டான். சூழ்நிலை யாரை எப்படி மாற்றும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஜெயலலிதா மறைந்த பின் சசிகலா வாழ்வில் நடந்த நிகழ்வு களைப் பாருங்கள். மனித புத்தி வரையறுக்க முடியாதது என்பது புரியும்.
எண்ணற்ற முகமூடிகளுக்கு மனிதன் சொந்தக்காரன். எந்த நேரத்தில், யார் முன்னால், எந்த முகமூடியை அணிவான் என்பதை அவரவரால் கூட முன் கூட்டியே சொல்ல முடியாது.
இணை பிரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியாகவே இருந்தாலும், ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள முடியாது. குறிப்பிட்ட நபரை நான் முழுமையாகப் புரிந்து கொண்டு விட்டேன் என்று கருதுவது தான் பேதமையிலும் பேதமை.
அதாவது, “மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது” என்பதைப் புரிந்து கொள்வதே மனிதர்களைப் பற்றிய சரியான புரிதல்.
இதற்கு மேலும், மனிதர்களைப் புரிந்து கொள்வதே லட்சியமாக இருந்தால் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கப் போகிறது என்று பொருள் அதிலிருந்து தப்பிக்க, “மனிதர்களைப் பற்றிப் புரிந்து கொள்வதன் மூலம் எதைச் சாதிக்கப் போகிறோம்” என்று யோசித்துப் பாருங்கள்.
ஆக்கபூர்வமான சிந்தனை பிறக்கும். அந்தச் சிந்தனையை விழிப் புணர்வோடு பின் தொடருங்கள். வாழ்வில் வளரலாம். அதன் மூலம் பிறருக்கும் உதவலாம்.
மேலே சொல்லப் பட்ட நோக்கங்கள், பிறருடைய போதனைகளால் உருவானவை. வளர்ந்த சூழலும், பிஞ்சு மனதுக்குள் பிறரால் ஊட்டப் பட்ட நஞ்சும், அவர்களுடைய இன்றைய வறுமையும் தான் மேற்கண்ட நோக்கங்களை உருவாக்கிய காரணிகள்.
திட்டமிட்டுச் சிந்திக்காமல், தான் தோண்றித் தனமாக எண்ணங்களை மனதில் நிகழ விட்டதால் உருவாகி உள்ள நோக்கங்கள். உங்கள் நோக்கங்களை இவ்வாறு உருவாக்கிக் கொள்ளாதீர்கள். நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். அதோடு நோக்கத்தில் சுய நலமே முதலிடம் பெற வேண்டும்.
விழிப்புணர்வோடு சிந்தனை செய்து, உங்கள் ஆழ் மனதுக்குப் பிடித்த, உங்கள் சுய நலத்தை முன்னிறுத்தும் ஒரு லட்சியத்தை, அதே நேரத்தில் சமூகத்துக்கும் உதவக் கூடிய ஒரு நோக்கத்தை ஏற்று வாழ்வதே இலக்கோடு வாழ்தல்.
சுய நலமற்ற இயக்கம் என்று உலகில் எதுவும் இல்லை. “நான் ஞானி” என்று பெயர் பெற வேண்டும் என்பது சுயநலம். “நான் அறிவாளி” என்று பெயர் பெற வேண்டும் என்பது சுயநலம். “நான் நல்லவன்” என்று பெயர் பெற வேண்டும் என்பது சுயநலம். இவ்வாறாக மனிதப் பிறவியின் அனைத்து நடத்தைகளும் சுய நலத்தால் மட்டுமே வடிவமைக்கப் படுகின்றன. சுய நலமே இயக்கத்தின் உயிர்.
“நான் சுயநலமற்றவன்” என்று சொல்பவன், “மகா பொய்யன்.” அதே போல், சுயநலமற்றவன் என்கிற வேடத்தைப் புனைபவன் “உலக மகா அயோக்கியன்.” “நான் மலமே கழித்ததில்லை” என்பதும் “என் செயலில் சுயநல நோக்கமே இல்லை” என்பதும் சமமான பொய்களே.
சுயநலமாயிருப்பதே உயிரினங்களின் அடிப்படைப் பண்பு.