Description
வாழ்க்கை ஒரு பரிசு. யாருக்குமே இரண்டாவது முறை இது வழங்கப் படுவதில்லை. ஆகவே, அதைக் கொண்டாடத் துவங்குங்கள்.
ஆனால், காமத்தைப் புறக்கணித்து விட்டு கொண்டாட்டம் சாத்தியமில்லை. ஏனெனில், பிறப்பு மட்டுமின்றி ஒவ்வொரு நபருடைய இல்லற வாழ்வும் கூட காமத்திலிருந்து தான் தொடங்கப் படுகிறது. பிறப்பு, இல்லறம், வாழ்வின் சாதனைகள், மரண நாள் என அனைத்தும் காமம் சார்ந்ததே.
ஆகவே, காமம் குறித்த கபட வேடத்தைக் களைந்தெறிவோம். இயற்கையைப் பேணுவதில் இரட்டை வேடங்கள் தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்வோம். தம்பதியர் இருவரும் ஒருவர் மற்றவருடைய இயற்கைத் தேவையான காமத்தைத் தணித்து வாழக் கற்றுக் கொள்வோம். கற்றுக் கொண்டவற்றை வெட்கமின்றிக் கடைப் பிடிப்போம்.
முறையான தளத்திற்குள் பரஸ்பரம் காமத்தைத் தணித்துக் கொள்வது வெட்கப் படுவதற்குரிய காரியமென்றால், பிரசவம் கூட வெட்கப்படத் தக்க செயலே. ஆகவே, காமத்தை எதிர்த்தால், கீழ்த்தரமாகக் கருதினால், பிரசவத்தைக் கைவிட வேண்டும்.
அதைக் கைவிட முடிவெடுக்கும் நாளில் மனித குலம் பட்டுப் போய் விடும். குல அழிவை மனிதனே முன்னின்று மேற்கொண்டாலும் இயற்கை ஏற்றுக் கொள்ளாது. இயற்கையை மீறிய சக்தி எதுவும் இங்கே இல்லை.
காமம் வாழ்வின் நாதம். அந்நாத ஒலி இனிய இசையாய் இருக்கலாம். நாராசமாகவும் ஒலிக்கலாம். இது மீட்டுபவருடைய அறிவின் ஆழத்தைப் பொறுத்தது. அதற்குரிய விசாலமான அறிவை வழங்குவதே நூலின் நோக்கம்.
நிம்மதியாக வாழ விரும்பும் குடும்பத்திற்கான ஒரு ஆலோசனைக் கையேடாக, வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கான ஒரு பேராயுதமாக, குடும்ப நிம்மதியைக் கொல்ல வரும் எந்தவொரு இரகசிய எதிரியையும் முன்கூட்டியே இனம் கண்டு அழித்தொழிக்கும் வல்லமையுடைய ஆயுதமாக இந்நூல் நிச்சயமாகச் செயலாற்றும்.
மேலும் இந்த நூல் பகிர்ந்து கொள்ளும் சம கால உதாரணங்களைத் தவிர, மற்றவையனைத்தும் புராதனமானவை. பண்டைய தமிழ் ஞானிகளால் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டவை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரை தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டவை. அன்னியர்களுடைய ஆதிக்கம் காரணமாகக் கைவிடப் பட்டவை. காலத்தின் தேவையால் மீண்டும் உயிர் பெற்று எழுந்திருப்பவை.
அந்த ஞானப் புதையல்களில் ஒன்று தான் தந்த்ரா! கலாச்சார ரீதியாகப் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் வாழ நேர்ந்துள்ள ஆணுக்கு அவசியமாகத் தேவைப் படுகின்ற ஞானம் தந்த்ரா! அந்த ஞானத்தைக் கற்காத ஆண்களால் இனிமேல் குடும்ப வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது.
ஆகவே காமம் குறித்து இதுவரை ஊட்டப் பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு படிக்கத் துவங்கினால், ஒவ்வொரு கணவனையும் அசாதாரணமான காதலனாக உண்மையான, சுயநலமற்ற தவறாமல் மனைவிக்குரிய இன்பத்தை அளிக்கின்ற வெற்றிகரமான கணவனாக இந்த நூல் மாற்றியமைக்கும்.
ஒரு குடும்பம் அமைவதும், அமைந்த குடும்பம் வாழ்வதும், வீழ்வதும், உயர்வதும், தாழ்வதும் பெண்ணின் கையில் தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு ஆணும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆண் என்பவன் புயல். மகா சக்தி மிக்கவன். பெண் என்பவள் புயலின் மையம். ஆணைப் போன்ற சக்தி இல்லாமல் இருக்கலாம். இயற்கையான உபாதைகள் சில இருக்கலாம். ஆனால், மையம் தான் புயலை வழி நடத்தும் சக்தி.
மனநிலை தான் வெற்றிகளின் மூலம். அந்த மன நிலையை உருவாக்குபவள் பெண். ஆகவே, பெண்ணின் மனநிலை ஆரோக்கிய மானதாக இருக்க வேண்டும். மனநிலையைக் கெடுப்பதில் முதலிடம் வகிப்பது தணிக்கப் படாத காமம். ஆகவே, பெண்ணின் காமம் தணிக்கப் பட வேண்டும்.
பெண்ணின் முதற் தேவையான உடற் தேவை பூர்த்தி செய்யப் பட வேண்டும். பெண்ணைப் போகப் பொருளாகப் பயன்படுத்தக் கூடாது. அது தான் குடும்ப அமைப்பைக் காப்பாற்ற உதவும். அந்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நூலின் தலையாய நோக்கம்.
இதோ இனி அந்த ஞானப் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்கத் துவங்குங்கள். கடலிலிருந்து கரையேறும் போது, ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டிய அளவிற்கு முத்தெடுத்து விடுவீர்கள் என்பதில் கடுகளவல்ல, அணுவளவு கூட எனக்கு ஐயம் இல்லை.
மனைவியை ஒரு போகப் பொருளாகப் பயன்படுத்தாமல், ஈடுபடும் ஒவ்வொரு முறையும் உரிய இன்பங்களை வழங்கி, மகிழ்ந்து குலாவிக் கொண்டாடி மகிழ, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அனைத்து வெற்றிக்கும் ஆனந்தமே அடிப்படை. வெற்றியே வாழ்வின் இலட்சியம். பேரானந்தம் நம் பிறப்புரிமை. அது எங்கோ வெகு தொலைவில் இல்லை. இல்லற வாழ்க்கைக்குள் தான் இருக்கிறது. அதைப் பெற்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்போமாக!
அவரவர்க்கு அமைந்த இல்லற இணையை இன்புறுத்தி மகிழ்வித்து தேவதையாய் உணரச் செய்து, வாழக் கிடைத்த இல்லற வாழ்வை ஆனந்தமாய்க் கொண்டாடிக்களித்து, நீண்ட காலம் நிம்மதியாய் வாழ்ந்து மகிழ்ந்திட, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Reviews
There are no reviews yet.