Description
எது காதல்? எது காமம்? எது மோகம்? எது போலிக்காதல்? எது இனக்கவர்ச்சி? ஏன் தற்கொலைகள்?
பள்ளிக்கோ, கல்லூரிக்கோ பணிக்கோ செல்லும் குழந்தைகள் இவற்றில் சிக்கித் திசை மாறிப் போய், பெற்றோருக்கே எதிரிகளாக மாறி விடாதவாறு, கவனமாகக் குழந்தையை வளர்ப்பது எப்படி?
குழந்தைகளின் கவனத்தைச் சிதறடித்துக் காதலில் விழ்த்தும் உயிரியல் காரணிகள் எவை? உளவியல் காரணிகள் எவை? சமூகக் காரணிகள் எவை?
மாணவ மாணவியரின் தற்கொலைக்கான காரணங்கள் எவை? தற்கொலைக்கு முந்தைய அறிகுறிகள் எவை? மற்றும் தற்கொலையைத் தடுக்கும் உத்திகள் எவை?
அவற்றின் தாக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? என்பதை அறிவியல் பூர்வமாய் பகுப்பாயும் நூல்.
தங்கள் குழந்தையை வெற்றியாளராய் உருவாக்க விரும்பும் ஒவ்வொரு பெற்றோருக்கும். மற்றும் பிறரை விடப் பெற்றோரையே சிறந்த வழிகாட்டியாய்க் கருதுகின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் சமர்ப்பணம்.
இலங்கையின் குடும்ப அமைப்பு சிதையத் தொடங்கியிருக்கிறது. திருமணங்கள் அதிவேகமாய்த் தகர்க்கப்படுகின்றன. குடும்ப நீதிமன்றங்களின் எண்ணிக்கையை நான்கு மடங்காக அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. காரணம் காதல்.
மன்னிக்கவும். இனக் கவர்ச்சியால் நிகழும் களியாட்டங்களும், அந்தக் களிகளைக் காதலெனக் கருதி, நடத்தப்படும் திருமணங்களும் தான், குடும்ப அமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.
பதின் பருவ யுவதியும், இளைஞனும் தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல், முன்னிரவு நேரத்தில், புறநகரின் மறைவான புதர்ப் பகுதிகளில், போய்ப் படுத்தெழுந்து வருவதற்குப் பெயர் பொறுக்கித்தனம். ஆனால், பல்வேறான உயிர் உடமை ஆபத்துக்களை உள்ளடக்கிய அந்தச் செயல் தான், இங்கே புனிதக் காதல்!
பதின் பருவப் போதையால், காமக் களிகளில் ஈடுபடுவது, பிஞ்சிலே பழுக்கும் செயல். எதிர்காலத்தை நாசமாக்கும் செயல். ஆனால், அதற்குப் பெயர் இங்கே தெய்வீகக் காதல்!
கல்லூரியில் சேர்ந்த ஆறே மாதத்தில், பதிவுத் திருமணம் செய்து கொண்டு, இரகசியமாய்க் குடித்தனம் நடத்துவது, பெற்றோருக்குச் செய்கின்ற பெருந்துரோகம். எதிர்கால திருமண இணைக்குச் செய்யப் போகின்ற துரோகத்திற்கான ஒத்திகை. அதோடு, கல்வியைப் பாழடிக்கும் செயல். ஆனால், அதற்குப் பெயர் இங்கே நவீன காதல்!
சக மனிதர்களை விலங்குகளாய் கருதி, அவர்களுக்கெதிரிலே சரச சல்லாபங்களில் ஈடுபடுவது, அநாகரீகம். ஆனால், அதற்குப் பெயர் இங்கே, பதின் பருவ வயதில் இயல்பாய் நிகழும் காதல்!
பொது வெளிகளில், தங்களையொத்த குழந்தைகளின் உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில், குலவிக் கொள்ளலும், கொஞ்சி மகிழ்தலும், மிருக இச்சையின் வெளிப்பாடுகள். ஆனால், அதற்குப் பெயர் இங்கே உயிருக்கு உயிராய்க் காதலித்தல்!
மேல் நாடுகளிலும் இவ்வாறு ஊர் சுற்றுவோர் உண்டு. ஆனால், அதை காதலென அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை. “டேட்டிங்” என்றே அதை குறிப்பிடுகிறார்கள்.
“டேட்டிங்” என்றால், ஆணும் பெண்ணும் ஒன்றாய் இணைந்து வெளியில் செல்தல். நட்புக்கும், காதலுக்கும் இடைப்பட்ட உறவு இது. ஒருவரை மற்றவர் புரிந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடு இது. “போலி காதல்” என்று இதைச் சொல்லலாம்.
பெண்ணின் பெற்றோரிடம் அனுமதி பெற்றுத் தான், பெண்ணை அங்கே “டேட்டிங்” அழைத்துச் செல்ல வேண்டும். எனினும், இந்தப் போலிக்காதல், அங்கே பாலுறவு கொள்வதற்கான உரிமம் அல்ல.
அதே “டேட்டிங்” வேலையை, நம் குழந்தைகள் செய்கிறார்கள். ஆனால், பெற்றோருக்குத் தெரியாமல் செய்கிறார்கள். மேலும், பாலுறவு கொள்வதற்கான வாய்ப்பாக, “டேட்டிங்”கைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கேட்டால், காதலிப்பதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு “டேட்டிங்” செல்லும் போலிக் காதலர்களை, “தெய்வீகக் காதலர்கள்” என்றே மக்களும் கருதுகிறார்கள். காதலைப் பற்றிய சமூகத்தின் புரிதல் இவ்வாறு உள்ளது.
மேல்நாடுகளில், “டேட்டிங்” என்கிற பெயரில் ஊர் சுற்றும் குழந்தைகள் எவரும் நான்காண்டு கால பொறியியல் கல்வியைக் கற்பதில்லை. கலை அறிவியல் கல்வியையே கற்கிறார்கள். அல்லது பள்ளிக் கல்வியோடு கற்பதையே நிறுத்திக் கொள்கிறார்கள்.
அதனால் தான், பெரும்பாலான மேலை நாடுகள், தங்கள் பொறியியல் பணிகளைச் செய்ய, அந்நியர்களையே சார்ந்திருக்கின்றனர்.
மேற்கண்ட உண்மையை அறிந்திராத இலங்கைக் குழந்தைகள், பள்ளிப் பருவத்திலேயே, போலிக் காதலைத் துவக்கி விடுகிறார்கள். கல்லூரிப் பருவத்திலோ, போலிக் காதலில் ஈடுபடாத குழந்தைகள், “பத்தாம் பசலிகள்” என்று கருதப் படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
கல்லூரிக்குள் நுழைந்த மூன்றாம் நாளே காதல். முப்பதாம் நாளே பாலுறவு. மூன்றாம் மாதமே இரகசியத் திருமணம். ஆறே மாதத்தில் பெற்றோருடன் ஜென்மப் பகை. அடுத்த வருடமே கல்வியைக் கைவிடல் என்பதே “முற்போக்கான பகுத்தறிவாளர்” என்பதற்கான அடையாளமாக மாறிக் கொண்டிருக்கிறது.
ஆகவே கல்லுரிக்குச் செல்வது எதற்காக? கல்வி கற்கவா? அல்லது பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் புரியவா? அல்லது ஏக காலத்தில் இரண்டையும் செய்யவா? என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, விழிப்புணர்வூட்டி, கல்லுரிக்கு அனுப்ப வேண்டிய கால கட்டத்தை, இலங்கை சமூகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளும், மதுக் குடுவைகளும் பல்கலைக் கழக விடுதிகளின் சுற்றுப் புறங்களிலிருந்து, தினம்தோறும் அப்புறப் படுத்தப் படுகின்றன. கல்லுரிகளின் சுற்றுப் புறங்களில் மகப்பேறு நிலையங்கள் கூட அமைக்கப் படுகின்றன என்பது, கல்வித் தரத்துக்கு மட்டுமின்றி, இலங்கைக் குடும்ப அமைப்புக்கும், விடப்படும் மிகப் பெரும் சவால்.
கல்லுரிக்குள் நுழைந்ததும், காதல் நிகழ்கிறது. மீசையே முளைக்காத மாணவனும், குழந்தை முகம் மாறா மாணவியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பெண்ணின் பிறந்தக எதிர்ப்பு, இரண்டு பேரைக் கல்லுரியில் படிக்க வைக்க முடியாத புகுந்த வீட்டின் பொருளாதாரம், பதின் வயதில் நிலவும் மோகம், அதனால் நிகழும் இள வயது கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்ப்பு எனப் பெண்ணின் கல்வி, தடைபட்டுப் போகிறது.
மேலும் ஒரு விபத்தை போல உருவாகி விட்ட தன் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பணமீட்டியாக வேண்டிய நெருக்கடியில், அந்த மீசை முளைக்காத பையன் சிக்கிக் கொள்கிறான். அதனால், அவன் வேலைக்குப் போயாக வேண்டிய சூழல் எழுகிறது.
இவ்வாறாக, கனவுகளோடு கல்லுரிக்குள் நுழைந்த, இருவருடைய கனவுக் கோட்டைகள் தகர்ந்து போகின்றன.
ஆனால், உயர்கல்வி வாய்ப்பைப் பறித்து விட்ட, அவர்களுடைய திருமணமாவது நிலைத்து நிற்கிறதா?
குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் அதுவும் தகர்ந்து போகிறது. போலிக்காதல் தன் கொடூர முகத்தைக் காட்டி விடுகிறது. அதனால், பெண்ணின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடுகிறது.
பெற்றோர், உற்றார், உறவினர் எனத் தன்னுடைய மொத்த உலகத்தையும் பகைத்துக்கொண்ட பெண், இறுதியில் ஆதரவின்றி, குழந்தையோடு வறுமையில் வாட நேர்கிறது.
கல்வியில்லாத காரணத்தால், ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ஆண்களின் அடிமையாய், விழ நேர்கிறது.
திருமண விவகாரத்தில், பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தையும், சிறப்பதிகாரத்தையும் பயன்படுத்தியே, பெண் மீண்டும் அடிமைப் படுத்தப் படுகிறாள். இதற்குக் காரணமாயிருப்பது பதின் பருவத்தில் உருவாகும் போலிக் காதல்.
பெரும்பாலான பதின் பருவப் போலிக் காதல், திருமணம் வரை நீடிப்பதில்லை. பாலுறவு சுகத்தை மட்டும் பழக்கி விட்ட கையோடு, போலிக் காதலின் ஒப்பனை அலங்காரம் கலைந்து போகிறது.
ஒருவர் மீது மற்றவர் கொள்ளும் சந்தேகம், ஒருவரை மற்றவர் செய்து கொள்ளும் காதல் சித்திரவதைகளால், போலிக்காதல் செத்துப் போகிறது.
அந்தச் சிதைவு, நுண்ணிய அளவிலான மன நோயாளிகளாக குழந்தைகளை மாற்றி விடுகிறது அந்த மனநோயால், தூக்கமின்மை, பசியின்மை, எதிர்மறைச் சிந்தனை, தன்னம்பிக்கை இழத்தல், சுயவதை, பிறரோடு சுமுகமாகப் பழக முடியாமை, எதிர்ப்பாலினத்தை வெறுத்தல் போன்ற பாதிப்புகள் உருவாகி, கல்வியின் பேரிலான கவனம் சிதறி விடுகிறது.
அதனால், போலிக் காதலில் விழுந்த குழந்தைகள் கல்லூரியை விட்டு வரும் போது, எதுவுமே தெரியாத மந்திகளாக வெளியே வருகிறார்கள். அதனால், உயர் கல்வி வாய்ப்பு பறி போகிறது.
மேலும், போலிக்காதல் தோல்வியில் முடியும் போது, தீக்குளிப்பு, தூக்கிட்டுக் கொள்ளல், இரயில் முன் பாய்தல், விசமருந்துதல், நீரில் சாதல் எனப் பல வடிவங்களில், பதின் பருவத் தற்கொலைகள் நிகழ்கின்றன.
அது தவிர, கருக்கலைப்பு, கலைப்பால் மரணம், குப்பைத் தொட்டியில் குழந்தை, அமில வீச்சு, கௌரவக் கொலை, ஆணவக் கொலை என்கிற பெயர்களில் வன்செயல்களும், நாட்டில் நடைபெறுகின்றன.
சாதிக் கலவரங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றன
இவ்வாறாகக் குழந்தைகளின் அறிவாற்றல் மேன்மைக்கும், உயர் கல்விக்கும், தனிமனித உயிருக்கும், சமூக அமைதிக்கும், குந்தகம் விளைவித்துக் கொண்டிருப்பது பதின் பருவப் போலிக் காதல்.
ஆனால், பதின் பருவத்தில் உருவாகும் போலிக் காதலை ஆதரிப்பது தான் முற்போக்குவாதம், எதிர்ப்போர் பிற்போக்காளர்கள், பழமைவாதிகள் என்று உருவாக்கப் படும் கருத்தால், பதின் பருவப் போலிக் காதலில் ஈடுபடும் ஆர்வம், குழந்தைகளிடையே அதிகரிக்கிறது.
“காதலியுங்கள். காதலியுங்கள்” என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் குழந்தைகள் ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
“போலி காதலில் விழுந்து விடாதீர்” என குழந்தைகளை எச்சரிக்கும் குரலைப் பொது வெளிகளில் கேட்கவே முடியவில்லை.
ஏனெனில், எது காதல் என்கிற தெளிவு, மக்களிடம் மட்டுமல்ல, கருத்துருவாக்கச் சிற்பிகளிடமும் இல்லை.
“இந்த வயதில் காதலிக்காமல், வேறு எந்த வயதில் காதலிப்பதாம்?” என்று கூறிப் “பதின் பருவம் மட்டுமே காதலிப்பதற்கான பருவம்” என்கிற மூடத்தனமான கருத்தை பரப்பிக் கொண்டிருக்கும் காரணிகளால், பதின் பருவத்தில் காதலித்தல் சரியான செயலே, நியாயமானதே என்கிற உளவியல் சார்ந்த துணிச்சலைக் குழந்தைகள் பெறுகிறார்கள்.
ஊரான் பிள்ளையைக் கிணற்றில் தள்ளிக் கிணற்றாழம் பார்க்கும் கூட்டத்தின் கயமைப் பிரச்சாரத்தால், குழந்தைகள் எளிதாக வழி தவறிப் போய், வாழக் கிடைத்த வாய்ப்பைப் பரிதாபமாகப் பறி கொடுத்து விடுகிறார்கள்.
ஆகவே, காதலைப் பற்றி, விஞ்ஞான பூர்வமாக, விளக்கிச் சொல்லி, விழிப்புணர்வூட்ட வேண்டியது இப்போது மிகவும் அவசியமாகிறது.
அறிவுஜீவிகளும், உளவியல் அறிஞர்களும், நுண்ணறிவாளர்களும், வாழ்வியல் மேதைகளும், எது காதல் என்று மக்களுக்கு விளக்கிச் சொல்லியாக வேண்டிய காலம் வந்துவிட்டது.
அந்தப் பணியை இந்த நூல் துவக்கி வைக்கிறது.
பெற்றோருக்குத் தெரியாமலேயே காதலித்து, திருமணம் செய்து குடும்பம் நடத்தி, அதில் தோல்வியுமடைந்து, பெற்றோருக்குத் தெரியாமலே தற்கொலையும் செய்து, மலரும் முன்பே கருகிப் போகின்ற ஒரு கலாச்சாரம் குழந்தைகளிடையே வேகமாகப் பரவி வருகிறது.
முளையிலேயே இதைக் கிள்ளியெறிய வேண்டும். அவ்வாறு கிள்ளி யெறிய நிர்வாணப் படுத்திய காதலைக் குழந்தைகளிடம் காட்ட வேண்டியது அவசியமாகிறது.
இந்நூல் அதை செய்கிறது.
போலிக் காதலைப் பற்றிய ஒரு “பரிசோதனை அறிக்கை” தான் இந்த நூல். பரிசோதனை அறிக்கையில் வருகிற தகவல்களுக்கு, பரிசோதனையைச் செய்யும் மருத்துவர் காரணம் அல்ல.
“பிரேதப் பரிசோதனை” செய்யும் மருத்துவர், கொலைகாரர் அல்ல.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவே, அவர் மனித உடலை அறுக்கிறார். கிழிக்கிறார். வெட்டுகிறார். அவ்வாறு செய்ய வேண்டியது அவருடைய கடமை. அத்தகைய கடமையைச் செய்யும் போது, அவர் எந்தவொரு இரகசியத்தையும் மறைக்க முடியாது. ஆபாசப் பகுதிகளை ஆராய மாட்டேன் என்று கூற முடியாது.
கொலையுண்ட பெண்ணின் உடலைப் பரிசோதிக்கும் போது, அந்தப் பெண்ணின் பிறப்புறுப்புக்குள் என்னவெல்லாம் இருக்கிறது? கடந்த கால எச்சங்கள் ஏதேனும் கருப்பைக்குள் இருக்கிறதா? என்பதையெல்லாம் ஆராய வேண்டியது மருத்துவரின் தலையாய கடமை.
ஆராய்ச்சி கூடத்தில், ஆபாசம் என்கிற பேச்சுக்கோ, சுய விருப்பு வெறுப்புக்கோ கடுகளவும் இடமில்லை. அந்த அடிப்படையில் தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
எது காதல்? எது இனக்கவர்ச்சி? எது காதலைப் போல் காட்சியளிக்கின்ற காமம்? எது காதலைப் போல் காட்சியளிக்கின்ற போலிக் காதல்? ஏன் தற்கொலைகள்? இவை ஒவ்வொன்றும் எவ்வாறு உருவாகிறது? என்பதைத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் இந்த நூல் வரையறுத்துக் கூறுகிறது.
இனக்கவர்ச்சி என்கிற வார்த்தைக்குரிய மிகச் சரியான பொருளை இந்நூல் வரையறை செய்கிறது.
நூலில் சொல்லப்பட்டுள்ள தகவல்களைப் படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கலாம். உண்மையாக இருக்குமா என்கிற ஐயமும் தோன்றலாம். ஆனால், நிரூபிக்கப் படாத ஒரு தகவல்கள் கூட, நூலில் இடம் பெறவில்லை. ஐயமிருப்போர், “தந்த்ரா இரகசியங்கள்” என்கிற நூலைப் படித்து, ஐயத்தைப் போக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தங்கள் குழந்தையை வெற்றியாளராய் உருவாக்க விரும்பும் ஒவ்வொரு பெற்றோருக்கும். மற்றும் பிறரை விடப் பெற்றோரையே சிறந்த வழிகாட்டியாய்க் கருதுகின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் சமர்ப்பணம்.
Reviews
There are no reviews yet.