ஏமாற்றுக்காரனும் துரோகியும் கடவுளால் தண்டிக்கப் படுவான். நமக்குக் கெடுதல் செய்தவனைக் கடவுள் தண்டிப்பார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் கூறி மனித மனதில் தவறான நம்பிக்கை ஊட்டப் பட்டிருக்கிறது.
இது ஒரு பொய். காட்டுமிராண்டிகளை ஒழுங்கு முறைக்குள் கொண்டு வருவதற்காகத் திட்டமிட்டுச் சொல்லப்பட்ட பொய் இது.
காட்டுமிராண்டிகள் முரடர்கள். முரடனின் இனியொரு பெயர் தான் முட்டாள். முட்டாள் தனமான ஒரு நபரால் பெருந் தன்மையாகச் சிந்திக்க முடியாது. ஆகவே, முட்டாள்கள் அனைவரும் கீழ் மக்களே.
அச்சமே கீழ்களது ஆசாரம். அச்சுறுத்துவதன் மூலம் மட்டுமே ஒரு ஒழுங்கு முறைக்குள் கீழ்மக்களைக் கொண்டு வர முடியும்.
ஆகவே, சமூக அமைப்பை உருவாக்கிய போது, காட்டு மிராண்டிகளை ஒழுங்கு முறைக்குள் கொண்டு வருவதற்காக, அவர்களை அச்சுறுத்த வேண்டியிருந்தது.
மனிதர்களைக் காட்டியெல்லாம் ஆழ்மன அச்சத்தை உருவாக்க முடியாது அதனால், அன்றைய ஞானிகள் கடவுளின் பெயரைப் பயன் படுத்தினார்கள். வஞ்சகனையும், துரோகியையும் கடவுள் தண்டிப்பார் என்கிற கருத்து அவ்வாறு அச்சுறுத்துவதற்காகச் சொல்லப்பட்ட கருத்து.
அது தான் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப் பட்டு நம் காலம் வரையிலும் ஒவ்வொருவர் மனதிலும் பதிக்கப் படுகிறது.
ஒரு நபர் குழந்தையாக இருக்கும் போது இந்த நம்பிக்கை ஆழ்மனதில் பதிக்கப் படுகிறது. ஏனெனில் குழந்தைகளின் ஆழ்மனம் ஏழு வயது வரை திறந்தே இருக்கக் கூடியது. ஏழு வயதிற்குப் பிறகு தான் மேல்மனம் என்கிற காவலாளியை ஆழ்மனம் நியமிக்கிறது.
மேல்மனம் என்கிற காவல்காரனை நியமிக்காத, அப்பாவித்தனமான குழந்தைப் பருவத்தில், குறும்பு செய்தால் கடவுள் மூக்கை அறுத்து விடுவார் என்று மிரட்டத் தொடங்கிய போது ஆழ்மனதில் நுழைந்த தவறான நம்பிக்கை இது.
பெற்றோராலும், சுற்றுப்புறத்தாலும், ஆசிரியர்களாலும் நாம் வளர்க்கப் படுகிறோம். தவறு செய்தவனைக் கடவுள் தண்டிப்பார் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப் பட்டிருந்தது. அதையே அவர்கள் தன்னுணர்வற்ற நிலையில், நமக்கும் ஊட்டி விடுகிறார்கள்.
வாழ்வியல் விவகாரங்களில் நாம் சுயமாகச் சிந்திக்கக் கூடியவர்கள் அல்ல. அடுத்தவர்களுடைய பிரதிகள்.
பெற்றோரால், சுற்றத்தாரால், அண்டை அயலாரால், மற்றும் ஆசிரியர்களால் அவர்களுடைய அறிவிற்கேற்ப பக்குவப் படுத்தப் பட்டுள்ள இயந்திரங்களாகவே நாம் செயல் பட்டுக்கொண்டிருக்கிறோம்.
குழந்தையாயிருந்த போது உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளின் அடிப் படையிலேயே நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். காமத்தைப் பற்றி நம்மிடமுள்ள தவறான கருத்துக்களும் அப்படிப்பட்டவையே.
அடுத்தவர்களால் அவர்களுடைய நம்பிக்கைகளுக்கேற்ப, அனுபவங்களுக்கேற்ப, தகுதிக்கேற்ப நம்முடைய மனம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதனால் தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு தவறான நம்பிக்கை.
துரோகிகளையும், வஞ்சகர்களையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும் கடவுள் தண்டிப்பார் என நம்புவது, வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டுள்ள மனிதனை மென்மேலும் வீழ்ச்சியடையச் செய்கிறது.
நம்மை ஏமாற்றியவனுக்கு தண்டனை கிடைக்கும், கெட்டது நடக்கும் என்று நம்புவது மிகப் பெரிய ஆபத்து. தவறான நம்பிக்கைகளிலேயே தலையாயது.
ஒரு வஞ்சகச் செயலுக்கோ, துரோகத்திற்கோ நாம் ஆளாகும் போது, அதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஏதேனும் ஒரு வகையில் மோசமாகத் தண்டிக்கப் படுவார்கள் என்று நாம் நம்புகிறோம்.
இந்த நம்பிக்கை முதலில் ஒரு எதிர் பார்ப்பாக இருக்கிறது.
அதன் பின் அந்த எதிர்பார்ப்பு வஞ்சகனுக்கும், துரோகிக்கும், ஏமாற்றுக் காரனுக்கும் கெட்டது நடக்க வேண்டும் என்கிற ஆசையாக தன்னுணர்வற்ற நிலையிலே மாறி, அந்த ஆசையே தொடர் சிந்தனையாகவும் நடைபெறத் தொடங்கி விடுகிறது.
துரோகத்திற்கு ஆளான வலியோடு சிந்திப்பதால் அது உணர்ச்சிகரமான சிந்தனையாகி, நம்முடைய பிரார்த்தனையாக மாறி விடுகிறது.
இறுதியில் கெட்டது நடக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை இம்மி பிசகாமல் நம்முடைய வாழ்விலேயே நிறைவேறுகிறது.
ஏனெனில், பிரபஞ்சத்திற்கு பெயர்ச் சொற்கள் தெரியாது. உணர்ச்சிகரமான வினைச் சொற்கள் மட்டுமே புரியும்.
அதனால் தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும் எண்ணம் போல் வாழ்வு என்றும் ஞானிகள் கூறியுள்ளனர்.
ஏமாற்றுக்காரர்கள் ஒருபோதும் தண்டிக்கப் படுவதில்லை.
ஏமாற்றுக்காரனோ, பெரும் துரோகியோ, வஞ்சகனோ வாழ்வில் ஒரு போதும் கெட்டுப் போவதில்லை. குறிப்பிட்ட வஞ்சகச் செயலுக்காகத் தண்டிக்கப் படுவதில்லை. இது ஒரு பேருண்மை. மனித வரலாறே இதற்கான ஆதாரம்.
இரக்கமற்ற கொலைகாரர்களும், பெருந் துரோகிகளும், மகா சூழ்ச்சியாளர்களும், கடைந்தெடுத்த வஞ்சகர்களும், சண்டாளப் படுபாவிகளும் தான் மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஏக போக சுகத்துடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்.
ஆகவே, தவறு செய்தவன் கடவுளால் தண்டிக்கப் படுவான் என்கிற கருத்தை நம்பாதீர்கள். கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை. தண்டிக்கும் மனோபாவம் உடையவர் ஒரு போதும் கடவுளாக இருக்க முடியாது.
கடவுளுக்குத் தெரிந்த மொழி கருணை மட்டுமே. மன்னித்தலே கடவுளின் தண்டனை. கேட்டதைக் கொடுப்பது மட்டுமே கடவுளின் வேலை. இதைத் தவிர வேறெந்த கெடுதலையும் செய்யத் தெரியாத அப்பாவி தான், கடவுள்.
மனிதர்களை நல்லவன், கெட்டவன் என்றெல்லாம் பாகு படுத்திப் பார்க்க கடவுளுக்குத் தெரியாது.
மேலும் வஞ்சகனையோ, துரோகியையோ, நம் வழியில் கொண்டு வந்து கடவுள் தான் நிறுத்துகிறார்.
அதாவது, குடும்ப விவகாரச் சண்டையின் போது நம் ஆழ் மனதில் நுழைந்து விட்ட மோசமான எண்ணத்தின் படி, காரியங்களை நிகழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஆழ்மனம் இருந்தது.
தன்னால் முடிந்த வரை செய்தது.
தன்னந்தனியே தன்னால் நிறைவேற்ற முடியாத எண்ணங்களைத் தொடர்ச்சியாகப் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது.
அதனால் அந்த எண்ணத்தை நம் பிரார்த்தனையாக ஏற்றுக் கொண்டு, அந்தப் பிரார்த்தனையைச் செவ்வனே, உடனடியாக நிறைவேற்றிட பிரபஞ்சம் முடிவெடுத்தது.
அந்த முடிவின் படி, ஒரு மனிதனின் நெஞ்சில் வஞ்சக சிந்தனையை உருவாக்கி நம்முடைய வழியில் கொண்டு வந்து நிறுத்தி, வஞ்சகச் செயல்களில் ஈடுபடும் படி அவனை இயக்குகிறது.
ஆகவே, நமது எண்ணங்களின் படி, நமக்குக் கெடுதல் உண்டாக வேண்டுமே என்கிற நோக்கத்தில் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள் தான் மோசக்காரர்கள்.
ஆகவே, நம் பிரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு, தானே முன்னின்று சிலரைத் தேர்ந்தெடுத்து, தானே அவர்களை மோசக்காரர்களாக உருவாக்கி, தானே முன்னின்று, நம் வாழ்க்கைக்குள் அனுப்பிய, தன்னுடைய தூதர்களையே தண்டிக்க கடவுளால் எப்படி முடியும்?
ஆகவே தவறு செய்தவர்களைக் கடவுள் தண்டிப்பார் என்கிற கருத்தை நம்பாதீர்கள். ஒருக்கால் அந்த நம்பிக்கையை விட முடியாத போது, பசுவையும் சிங்கத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள்.
பசு ஒரு சாதுவான சைவப் பிராணி. எவ்வகையிலும் சிங்கத்திற்குக் கெடுதலை இழைக்காத ஒரு உயிரினம். சிங்கத்தின் உணவிற்குக் கூட பசு போட்டியாக இல்லை. எனினும் அப்பாவிப் பசுவை முரட்டுச் சிங்கம் உயிரோடு பிடித்து உண்கிறது.
இது மிகவும் கொடூரமான செயல். ஆனால், இத்தகைய கொடூரச் செயலுக்காக இதுவரை எந்தச் சிங்கமும் கடவுளால் தண்டிக்கப் பட்டதில்லை.
இங்கே குழப்பத்தை உருவாக்கக் கூடிய ஒரு எண்ணம் தோன்றலாம்.
சிங்கம் என்பது பிற விலங்குகளைக் கொன்று வாழும் வகையில் தான். இயற்கையாலேயே படைக்கப்பட்டுள்ளது. அதனால் அது தண்டிக்கப் படுவதில்லை என்கிற கருத்து உருவாகலாம்.
அந்தக் கருத்து சரியானதே. சிங்கத்தைத் தண்டிக்க முடியாது தான். ஆனால், சிங்கத்தைப் போலவே தான் மனிதர்களும் படைக்கப் பட்டுள்ளனர்.
ஒருவனை மற்றவன் மிஞ்ச வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல் படும் படியாகத் தான் மனிதப் பிறவிகளும் படைக்கப் பட்டுள்ளனர்.
ஆகவே, ஒருவனை மிஞ்சுவதற்காக மற்றவன் செய்கிற வஞ்சகங்களையும், துரோகங்களையும், ஏமாற்று வித்தைகளையும் அவனுடைய போர்த் தந்திரங்களாகத் தான் இயற்கை எடுத்துக் கொள்கிறதே தவிர, குற்றமாகப் பார்ப்பதில்லை.
ஆகவே, எந்தக் கொடியவனும் இயற்கையால் தண்டிக்கப் படுவதில்லை. அதை விட முக்கியமாக இயற்கையின் பார்வையில், நல்லவன், கெட்டவன் என்கிற பேதங்கள் இல்லை.
மேலும், கயவர்களைத் தண்டிப்பது என்கிற முடிவைக் கடவுள் எடுக்கின்ற நாளில், இந்தப் பூமியில் உள்ள குழந்தைகளைத் தவிர மற்ற அனைவரும் தண்டிக்கப் படுவார்கள்.
ஏமாளியே மென்மேலும் தண்டிக்கப் படுவான்.
கொலைகாரச் செயலுக்காக எந்தச் சிங்கமும் தண்டிக்கப் படுவதில்லை. அதேபோல, எந்தவொரு மோசக்காரனும், வஞ்சகனும், துரோகியும் ஏமாற்றுப் பேர்வழியும் தத்தம் செயலுக்காகக் கடவுளால் தண்டிக்கப் படுவதில்லை.
அதற்கு மாறாக, துரோகத்திற்கு ஆளானவனே மென்மேலும் தண்டிக்கப் படுவான். மென்மேலும் துரோகங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருப்பான். மென்மேலும் ஏமாற்றப் படுவான்.
ஏனெனில், துரோகத்திற்கு ஆளாகும் நபர் தான் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருப்பான். குமுறி அழுது கொண்டிருப்பான். மனதிற்குள் மறுகிக் கொண்டிருப்பான். தனியாய் அமர்ந்து கதறிக் கொண்டிருப்பான். மனமொடிந்து மூலையிலே போய் முடங்கி கிடப்பான்.
அவனுடைய கனவுகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, அவனை வஞ்சித்த வஞ்சகர்களையும், அவனுக்கு துரோகம் இழைத்த துரோகிகளையும், அவையெல்லாம் இழைக்கப்பட்ட விதத்தையும் நெஞ்சம் நிறைய வைத்துக் கொண்டு, ஒரு ஒளிப்படக் காட்சியாகத் திரும்பத் திரும்ப மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டு, அரைப் பைத்தியமாகச் சுற்றிக் கொண்டிருப்பான்.
கழிவிரக்கமும், சுயபச்சாதாமும், அவனைத் தான் வாட்டு வாட்டென்று வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும்.
மேற்கண்டவாறு நிகழக்கூடிய எண்ணங்கள் அனைத்தும் மிகவும் உணர்ச்சிகரமானவை.
அதனால் அவனுடைய ஆழ்மனதிற்குள் மிக எளிதில் நுழையக் கூடியவை.
ஆழ்மனதிற்குள் நுழைகின்ற சிந்தனை மட்டுமே தொடர்ச்சியாக நடைபெறக் கூடிய சிந்தனை.
தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய சிந்தனை தான் பிரபஞ்ச சக்தியின் முன் வைக்கப்படுகின்ற பிரார்த்தனை.
யாருடைய பிரார்த்தனையையும் பிரபஞ்ச சக்தியால் நிராகரிக்க முடியாது. எப்படிப்பட்ட பிரார்த்தனையாக இருந்தாலும், எதிர்க் கேள்வியின்றி நிறைவேற்றப் படும்.
துரோகத்திற்கும், வஞ்சகத்திற்கும், ஏமாற்றுச் செயலுக்கும் ஆளான அப்பாவி, மனதிற்குள் குமுறிக் கொண்டிருப்பதும், மருகிக் கொண்டிருப்பதும், கதறிக் கொண்டிருப்பதும் அவனுடைய பிரார்த்தனையாக ஏற்கப்படும்.
அதனால் மென்மேலும் பன்மடங்கு கூடுதலாக அவன் குமுறிக் கொண்டிருக்கவும், மருகிக் கொண்டிருக்கவும், கதறிக் கொண்டிருக்கவும் என்ன செய்ய வேண்டுமோ அதைப் பிரபஞ்ச சக்தி நிகழ்த்திக் கொண்டிருக்கும்.
மென்மேலும் அதே போன்ற அனுபவங்களையே தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பான். வாழ்க்கை நரகமாக மாறிக் கொண்டிருக்கும்.
இது தான் பட்ட காலிலே படும், கெட்ட குடும்பமே கெடும் என்கிற பழமொழிக்கான விஞ்ஞான பூர்வ விளக்கவுரை.
ஆனால், வஞ்சித்தவன் ஒளியுடன் இருப்பான். வெற்றி பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டிருப்பான்.
அவனுடைய சூழ்ச்சி வலைகளையெல்லாம் தன்னுடைய தனித் திறமையெனக் கருதிக் கொண்டிருப்பான். அதனால் அவனுடைய மூளை அற்புதமாக வேலை செய்யும். அவனுடைய தன்னம்பிக்கை மிதமிஞ்சிய அளவிற்கு அதிகரித்திருக்கும்.
நெருங்கிய நண்பனையே நம்ப வைத்துக் கழுத்தறுத்தவன்.
இரத்த உறவையே வீழ்த்தி விட்டவன்.
ஆகவே சந்திக்கும் யாரையும் எளிதாக வெல்ல முடிந்தவன்.
எதையும் சாதிக்கப் பிறந்தவன் என்றெல்லாம் தன்னைப் பற்றிப் பெருமிதமாக எண்ணிக் கொண்டிருப்பான்.
அவனுடைய தன்னம்பிக்கை வலுப்பட்டிருக்கும்.
மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
அதனால் மகிழ்ச்சி நிறைந்த எண்ண அலைகளையே பிரபஞ்சத்திற்கு அவன் அனுப்பிக் கொண்டிருப்பான்.
அந்த மகிழ்ச்சிகரமான எண்ண அலைகளே அவனுடைய பிரார்த்தனையாக பிரபஞ்ச சக்தியால் ஏற்கப்படும்.
அதனால், அவனுடைய மகிழ்ச்சியை மென்மேலும் அதிகரிக்கக் கூடிய அனுபவங்களையே பிரபஞ்சம் அவனுக்கு வழங்கிக் கொண்டிருக்கும்.
அவன் மென்மேலும் வளர்ந்து கொண்டிருப்பான்.
ஆகவே, கொலைகாரச் செயலுக்காக சிங்கம் எப்படித் தண்டிக்கப் படுவதில்லையோ, அதே போல எந்த மனிதனும் தன் வஞ்சகச் செயலுக்காக, செய்த துரோகத்திற்காகத் தண்டிக்கப் படுவதில்லை.