fbpx
Course Content
90s Kids Kamasutra
About Lesson
என்னுரை

 

திருமணம் என்பது இரு பாலினத்தின் பாலியல் தேவைகளை முறையான வழிகளில் பூர்த்தி செய்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள களம்.

 

ஆனால், கணவனின் இன்பத்தை ஐந்து நிமிடத்திற்குள்ளும், மனைவியின் இன்பத்தை ஐம்பது நிமிடங்களிலும் நிகழும் படியான ஏற்றத் தாழ்வோடு மனித இனத்தை இயற்கை படைத்திருக்கிறது.

 

இந்நிலையில் ஒரு கணவன் தன்னுடைய மனைவியின் பாலியல் தேவையை நிறைவேற்றுவது எப்படி? அதாவது, தன்னுடைய காமத்தைத் தணித்துக் கொள்வதற்கான போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தாமல், மனைவியின் காம உணர்வையும் தணிப்பது எப்படி?

 

காம உணர்வைத் தணிக்கா விட்டாலோ பாலின்ப ஆற்றாமை என்கிற நோய் நுண்ணிய அளவிலாவது மனைவியைத் தாக்கி விடும். அந்த நோயின் தாக்குதல் காரணமாக மனைவி தன்னுணர்வற்ற நிலையில் கணவனைப் பழியெடுக்கத் துவங்கி விடுவாள். குடும்பம் சிதறாவிடினும் மனோரீதியாகக் கணவன் துன்புறுத்தப் படலாம். அதனால் இல்லற வாழ்க்கை நரகமாகலாம்.

 

மிருகங்களைப் பாதுகாக்கக் கூட சட்டங்கள் உள்ளன. மனைவியைக் காப்பாற்ற பிரத்யேகமான சிறப்புச் சட்டங்களே கூட உள்ளன. ஆனால், மனைவியைப் பீடிக்கின்ற பாலின்ப ஆற்றாமை நோயின் தாக்கத்தால், தன்னுணர்வற்ற நிலையிலே, மனைவியால் குதறப்படும் கணவனைக் காப்பாற்ற எந்த நாதியும், தேசத்தில் இல்லை.

 

ஆகவே இதற்கான ஒரு தீர்வைக் கண்டாக வேண்டும். பாலின்ப ஆற்றாமை என்கிற மனநோயால் ஏற்படும் ஆழ்மன ஆத்திரம் காரணமாக, கணவனின் வாழ்க்கை கொடூரமான முறையில் மனைவியால் தகர்க்கப் படுவதைத் தடுப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?

 

பாலின்ப ஆற்றாமை காரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப விவகாரச் சண்டைகளுக்கு ஒரு தீர்வைக் கண்டு பிடிக்க முடியுமா? பாலியல் காரணமாகச் சிதறும் குடும்பங்களைத் தடுப்பதற்கான மந்திரம் ஏதாவது இருக்கிறதா?

 

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, உயிருக்குயிரான தங்கள் மனைவியைப் பாலின்ப ஆற்றாமை என்கிற மனநோயே அண்ட விடாமல் தடுப்பதற்கு கணவர்களுக்கான வழிமுறை ஏதேனும் இருக்கிறதா?

 

என் தேடல் துவங்கும் முன்பே ஓக்ஷோவின் நூல்கள்  தந்த்ராவின் பேரறிவையும், தாவோக்களின் ஞானத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. அந்த நூல்களைத் தேடி ஓடத் துவங்கினேன்.

 

அந்த ஓட்டத்தின் போது தான், புதிய பார்வையைக் கொடுத்து, வாழ்க்கையைக் கொண்டாடும் படி வலியுறுத்தக் கூடிய, வற்புறுத்தக் கூடிய பண்டைய சித்தர்களின் தத்துவங்கள் ஒவ்வொன்றும் எனக்கு அறிமுகமாயிற்று.

 

நான் அப்போது கற்ற பண்டைய சித்தர்களின் நூல்களின் சாறு தான் இப்போது உங்கள் கையில் இருக்கிறது.

 

அன்னிய மொழியாகவே இருப்பினும் ஆங்கிலப் புலமை உள்ளவர்களே வேலை வாய்ப்பில் முன்னுரிமையைப் பெறுகிறார்கள். அதே போல, தாம்பத்யம் குறித்த ஆழமான அறிவும், தெளிவான புரிதலும் கூட ஆங்கிலப் புலமை உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய நிலைமை தான், தமிழ் நாட்டில் நிலவி வருகிறது.

 

தாய் மொழியை மட்டுமே கற்கும் வாய்ப்பைப் பெற்ற சாமான்யர்களுக்கு, தாம்பத்யம் குறித்த ஆழமான அறிவைப் பெறும் வாய்ப்பு இன்னும் வழங்கப் படவில்லை. ஏனெனில், சமஸ்கிரத மொழியில் இயற்றப்பட்டுள்ள அனைத்து நூல்களும் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற அன்னிய மொழிகளில் பெயர்க்கப் பட்டதைப் போல், இலங்கை, இந்திய மொழிகள் அனைத்திலும் பெயர்க்கப் படவில்லை.

 

தமிழிலேயே சங்க இலக்கியங்கள், திருக்குறள் போன்ற நூல்கள் இருப்பினும் அவற்றின் மொழிநடை இன்றைய வழக்கு மொழியிலிருந்து வெகு தூரம் விலகியிருப்பதால், சாமான்யனுக்கு உதவக் கூடிய வகையில் இல்லை.

 

அதனால் இலங்கை, இந்திய பிராந்திய மொழிகளில் ஒன்றை மட்டுமே அறிந்துள்ள ஆண்கள் மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்தும் இருட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை விடக் கொடுமை, அந்தக் கும்மிருட்டையே பிரகாசமான ஒளியென்றும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அந்தச் சாமான்யர்களின் இல்லற வாழ்க்கை போர்க்களமாக மாறிக் கொண்டிருக்கிறது.

 

ஆண்களுடைய பாலியல் அறியாமை தான் குடும்பங்களில் நிலவும் சண்டை சச்சரவுகள் முதல் கள்ளக் காதல் ஈராக, விவாகரத்து வரையிலான தீமைகள் அனைத்திற்கும் அச்சாரமிடக் கூடிய முதற் காரணியாகி, குடும்ப அமைப்பின் சிதைப்பிற்கு வலிகோலுவதாக இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.

 

எண்ணற்ற ஆண்கள் அனாதைகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆண் அனாதையாக்கப் படுவதன் மூலம், குழந்தைகளின் மீது தாயை மட்டுமே உறவாய்க் கொண்ட வாழ்க்கை திணிக்கப் படுகிறது.

 

இது ஒரு மோசமான மாற்றம். இந்த மாற்றத்தால் தேசத்தின் சட்ட ஒழுங்கு சீர்கெடுகிறது.

 

ஏனெனில், எந்த அளவிற்கு அனாதைகள் பரிதாபத்திற்கு உரியவர்களோ அதே அளவிற்கு ஆபத்தானவர்கள். அதனால் தான், எவ்விதப் பாபமும் அறியாத யாரோ பெற்ற குழந்தைகள், இந்த அனாதையாக்கப் பட்ட ஆண்களால் பாலியல் சித்திரவதை செய்யப் பட்டு கால்வாய்களில் தள்ளிக் கொல்லப் படுகிறார்கள். சமூக சூழலில் நிலவ வேண்டிய அமைதி பறி போகிறது. மேற்கண்ட நிலையை முற்றிலும் அழித்தொழிக்கக் கூடிய சக்தி பெற்ற நூல் தான் இப்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

 

இந்நூலின் அறிவனைத்தும் பண்டைய தமிழ் ஞானிகளால் சொல்லப் பட்ட அறிவு. நூற்றுக்கணக்கான ஞானிகளின் நூல்களைக் கரைத்துக் குடித்ததன் மூலம் பெறப்பட்ட அறிவிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறு. சொந்த அனுபவம் வாயிலாக உண்மை என்று உறுதி செய்யப்பட்ட அறிவு.

 

மேலும், நூலிலுள்ள வார்த்தைகளிலும் ஒன்று கூடப் புதியவையல்ல. ஒவ்வொரு வார்த்தையும் பல்வேறு ஞானியரால் பல்லாயிரக் கணக்கான முறை பயன்படுத்தப் பட்டவை.

 

நான் ஒரு சேகரிப்பாளன். சேகரித்த வார்த்தைகளை என் மொழிப் புலமைக்கேற்ப இன்றைய தமிழில் பெயர்த்து, என் மொழியாளுமைக்கேற்ப, சரமாய்க் கோர்த்திருக்கிறேன். வார்த்தைகள் இடம் மாறியிருக்கலாம். ஆனால், ஞானிகளின் கருத்தில் மாற்றமிருக்காது.

 

ஏறக்குறைய பதினெட்டு ஆண்டு கால இடையற்ற தேடலின் மூலம் பெற்ற அறிவையே நான் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். உணர்ந்தவற்றைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள, முடிந்தவரை எளிமையாக, எதார்த்தமாக எழுத்து மூலமாய் விரித்துரைக்க முயற்சித்திருக்கிறேன்.

 

அதன் காரணமாக, பேருண்மைகளில் பலவற்றைப் பகிர்ந்து கொள்வதாக இந்நூல் இருக்கும். எண்ணற்ற மக்களுக்கு என்றென்றும், மனித குலம் உள்ள வரை, பயனளிப்பதாக இந்நூல் இருக்கும்.

 

எளிதில் மறக்க முடியாததாக, தேவைப்படும் சமயங்களில் தயங்காமல் உதவக் கூடியதாக, படித்த பின் தூக்கியெறிந்து விடாமல் பாதுகாக்கப் படும் நூல்களில் ஒன்றாக, நிச்சயம் இந்நூல் இருக்கும்.

 

மேலும், ஒருவர் சொல்ல விரும்பும் தகவலை, (அதே சமயத்தில் ஏதோ ஒரு காரணத்தால் சொல்ல முடியாமல் தவிக்கும் தகவலை) அவர் சார்பாக வெளிப்படையாகவும், விவேகமாகவும் சொல்லி, அவரைத் தர்ம சங்கடத்தி லிருந்து முழுமையாக விடுவிக்கக் கூடிய, பிரதிநிதியாக இந்நூல் இருக்கும். குடும்பத்தை நோக்கி தாக்குதல் வரும் போது, அதை உக்கிரமாகத் தடுத்திட இந்நூல் பயன்படும்.

 

வழி தெரியாமல் தடுமாறும் சூழலில் வரை படமாக, ஆயுதம் தேவைப்படுகிற போது தயங்காமல் உதவக்கூடிய போராயுதமாக, பாதுகாப்புத் தேவைப் படுகிற போது கேடயமாக, ஆறுதல் தேவைப் படும் போது தாயின் மடியாக, ஆதரவு தேவைப் படும் போது தந்தையின் தோளாக இந்நூல் இருக்கும்.

 

இல்லற வாழ்வில் வன்பாலுறவு, சிறுமியிடம் பலாத்காரம், பணியிடத்திலே  பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் விமரிசனங்கள் மற்றும் நள்ளிரவில் தம்பதியிடையே நடைபெறக் கூடிய குடும்ப விவகாரச் சண்டை, கள்ளக் காதல் போன்ற நெறிமீறல்கள் அனைத்திற்கும் ஆணின் பாலியல் அறியாமையே காரணம். அந்த அறியாமையை இந்நூல் அகற்றும்.

 

இப்படிப்பட்ட ஒரு நூலை தாய்மொழி மட்டுமே அறிந்துள்ள சாமான்யர் களுக்கு அளித்திட பிரபஞ்சம் விரும்பியது. அதற்குரிய கருவியாக, என்னைத் தேர்வு செய்தது. அளிக்கக் கூடிய செய்தி, உண்மையானதாக, நிரூபணத்திற்கு உட்படுத்தப் படக் கூடியதாக, அனவருக்கும் பெரும் பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பிரபஞ்சம் விரும்பியது. அதனால், அதற்குரிய பரி சோதனைகளை என் வாழ்வில் நடத்திப் பார்த்தது. என் வாழ்க்கை ஜீவிதத்தின் விளையாட்டுக் களமாக ஆயிற்று.

 

பரிசோதனையில் என்னை வறுத்தெடுத்த போது ஏற்படக்கூடிய மன வலிகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மன வலிமையையும் தவறாமல் அளித்தது. முக்கியமாக ஒவ்வொரு பேரதிர்ச்சிக்குள்ளும் ஒளிந்திருந்த ஞானத்தை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய அறிவையும் அளித்தது.

 

நான் கண்டுணர்ந்த ஞானத்தைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளத் தேவையான மொழிப் புலமையையும், எழுத்தாற்றலையும் எனக்கு வழங்கியது. அதன் விளைவாக, இந்த நூல், இப்போது உங்கள் பார்வையில் இருக்கிறது.

 

ஒரே ஒரு தகவலை மட்டும் குன்றின் மீது ஏறி நின்று, நான் உரத்த குரலில் கூவ விரும்புகிறேன். யாருடைய வாழ்விலும் எதுவுமே தானாக நிகழ்வதில்லை: ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால், மிகச் சரியான காரணம் இருக்கிறது.

 

கடவுளா, அல்லது பிரபஞ்ச சக்தியா, அல்லது ஜீவிதமா, எதுவென்று தெரியவில்லை. ஆனால் அந்த சக்தி ஒரு போதும் தவறிழைப்பதும் இல்லை. மேலும், காரணமில்லாமல் எதையும் செய்வதில்லை.

 

மானிட சமூகத்திற்கு இந்த நூலை அளிக்கும் பொருட்டே ஜீவிதம் என்னைப் படைத்திருக்கிறது. அதன் நிமித்தமாகவே யாருக்கும் நேராத விசித்திரமான அனுபவங்களை எனக்குக் கொடுத்திருக்கிறது. மேலும், அவற்றையெல்லாம் யாருக்கோ நிகழ்ந்ததைப் பார்க்கும் ஒரு வழிப் போக்கனாகப் பார்க்கக் கூடிய மனப் பக்குவத்தைக் கொடுத்திருக்கிறது.

 

நான் என் ஜீவிதத்தோடு முழுமையாக ஒத்துப் போயிருக்கிறேன். ஜீவிதத்திடம் நிபந்தனையின்றி நான் சரணடைந்திருக்கிறேன். ஜீவிதத்தின்  திட்டப் படி, என் சம கால சமூகத்திற்கு பிரபஞ்ச சக்தியால், தரப் படுகின்ற செய்தி தான் உங்கள் கையில் உள்ள இந்த நூல்.

 

தமிழ் சமூகத்தில் ஏற்படத் தொடங்கியுள்ள சீரழிவுப் போக்கை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு ஆயுதத்தை -எழுத்தாயுதத்தை – என் மூலமாக, ஜீவிதம் விருப்பப் படி, ஒரு நற்காரியத்தை நிகழ்த்துவதற்கான கருவியாக வழங்கியிருக்கிறது. நான் கருவியாக இருந்திருக்கிறேன். பிரபஞ்ச சக்தியின் மூலம், என் பிறவிப் பயன் நிறைவடைகிறது.

 

வெற்றிகரமான வாழ்க்கைக்கான மிகச் சிறந்த வழிகாட்டியாக, இல்லற வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்குவதற்குரிய நெறிகளைக் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு ஆசானாக இந்த நூல் விளங்கும்.

 

தம்பதியரின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதுகாக்கின்ற தாம்பத்ய இன்பத்திற்கான அகராதியாக, இல்லற வாழ்வின் இன்பச் சாளரத்தைத் திறந்து வைப்பதாக, ஆங்கிலப் புலமையற்ற மனிதர்களுக்கான பாலறிவுக் களஞ்சியமாக, மறக்க முடியாத ஞானப் புதையலாக இந்த நூல் இருக்கும்.

 

தமிழ் ஞானிகளின் இணையற்ற பேரறிவின் சுருக்க உரையாக உள்ள இந்த நூல் கணவர்களின் பாலியல் அறியாமையை முழுமையாகக் களையும். இன்றைய காலத்திற்கேற்ற பார்வையைக் கணவர்களுக்கு வழங்கும்.

 

மனைவிக்குரிய பாலின்பங்களைத் தவறாமல் வழங்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக, (அதாவது வெறும் உராய்வின்பம் பாலின்பம் ஆகாது.) குடும்ப வாழ்க்கையில் தம்பதியிடையே நிலவும் பல பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும்.

 

இவற்றை விட முக்கியமாக ஒரு தார உறவை உறுதியாக நிலைபெறச் செய்கின்ற மன வலிமையை இருபாலருக்கும் அளிக்கும். அதன் மூலம் நிம்மதியை மட்டுமின்றி, குடும்ப அமைப்பையே பாதுகாக்கும் அரணாகத் திகழும். மேலும், தாம்பத்திய வாழ்க்கைக்குத் தேவைப்படும் ஆத்திசூடியாக, அற்புதப் புதையலாக உருவாக்கப் பட்டிருக்கிற இந்த நூல் இல்லற வாழ்க்கையை ஒரு அற்புதப் பரிசாக மாற்றிக் காட்டும்.

 

காமம் வாழ்வின் நாதம். அந்நாத ஒலி இனிய இசையாய் இருக்கலாம். நாராசமாகவும் ஒலிக்கலாம். இது மீட்டுபவருடைய அறிவின் ஆழத்தைப் பொறுத்தது. அதற்குரிய விசாலமான அறிவை வழங்குவதே நூலின் நோக்கம்.

 

நிம்மதியாக வாழ விரும்பும் குடும்பத்திற்கான ஒரு ஆலோசனைக் கையேடாக, வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கான ஒரு பேராயுதமாக, குடும்ப நிம்மதியைக் கொல்ல வரும் எந்தவொரு இரகசிய எதிரியையும் முன்கூட்டியே இனம் கண்டு அழித்தொழிக்கும் வல்லமையுடைய ஆயுதமாக இந்நூல் நிச்சயமாகச் செயலாற்றும்.

 

மேலும் இந்த நூல் பகிர்ந்து கொள்ளும் சம கால உதாரணங்களைத் தவிர, மற்றவையனைத்தும் புராதனமானவை. பண்டைய தமிழ் ஞானிகளால் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டவை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரை தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டவை. அன்னியர்களுடைய ஆதிக்கம் காரணமாகக் கைவிடப் பட்டவை. காலத்தின் தேவையால் மீண்டும் உயிர் பெற்று எழுந்திருப்பவை.

 

அந்த ஞானப் புதையல்களில் ஒன்று தான் தந்த்ரா! கலாச்சார ரீதியாகப் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் வாழ நேர்ந்துள்ள ஆணுக்கு அவசியமாகத் தேவைப் படுகின்ற ஞானம் தந்த்ரா! அந்த ஞானத்தைக் கற்காத ஆண்களால் இனிமேல் குடும்ப வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது.

 

பெண்களுக்கான சுதந்திரமும், பிரத்யேகமான சிறப்புச் சலுகைகளும் அளிக்கப் பட்டுள்ள அதே சமயத்தில் ஆண்களின் பாலியல் அறிவு வளர்க்கப் பட வேண்டும். மனைவியை போகப் பொருளாகப் பயன் படுத்தும் போக்கு முற்றிலுமாக ஒழித்துக் கட்டப் பட வேண்டும். பெண்களைப் பற்றிய அடிப்படைப் பார்வையை மாற்றி, உள்ளதை உள்ளபடி பார்க்கும் திறனை இன்றைய ஆண் பெற்றாக வேண்டும். இல்லாவிட்டால், குடும்ப அமைப்பு முறை தகர்க்கப் பட்டு விடும். அதனால், சமூகத்தின் சமநிலை தவறிப் போய் விடும்.

 

மனைவியின் தணிக்கப் படாத காமம், பெண்ணுக்கு வழங்கப் பட்டுள்ள சிறப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி அவளுடைய ஆணின் வாழ்க்கையைப் பலி கிடாவாக்கி விடும். கொண்டானின் கேளிர் பிறர் இல்லை என்கிற உண்மையை மறக்கச் செய்து விடும்.

 

ஒற்றைப் பெற்றோரால் குழந்தைகள் வளர்க்கப்படும் சூழல் உருவாகி விடும். அதனால் குழந்தைகளின் மனநிலையும், வாழ்க்கை குறித்த மனோபாவமும் ஆரோக்யமற்றதாகி விடும்.

 

எதிர்கால சமூகத்தினருக்கு இது மிகப் பெரிய கெடுதலாகி விடும். திருமண முறிவு, குடும்பச் சிதைவு, தனித்தே வாழ்தல், பல தார உறவு போன்ற விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளை தமிழர்களால் பின்பற்ற முடியாது.

 

ஏனெனில் அவர்கள் இனரீதியாக, மத ரீதியாக ஒன்று பட்டிருக்கிறார்கள். ஆனால், இன, மொழி, மத, பிராந்திய, கலாச்சார ரீதியாகவும், அரசியல் கட்சிகள் காரணமாகவும் பல்வேறான பன்முகத் தன்மைகளைக் கொண்ட இலங்கை, இந்தியாவில் குடும்ப அமைப்பு தகர்க்கப் படுவது ஆபத்தான விளைவுகளை உருவாக்கி விடும்.

 

இனக் கவர்ச்சியின் அடிப்படையில் ஒரு கிராமத்தில் உருவான விடலைப் பருவக் காதலொன்று, அந்தக் கிராமத்தை உள்ளடக்கிய மாவட்டத்தில் வாழும் கோடிக் கணக்கான மக்களின் நடமாடும் உரிமையை வாரக் கணக்கில் பறிக்க முடியும் என்கிற சூழல் கொண்ட இலங்கை, இந்திய தேசத்தில், குடும்ப அமைப்பு சிதையுமானால், நாட்டின் முன்னேற்றம் மட்டுமல்ல, ஒருமைப்பாடே கூடக் கேள்விக் குறியாகி விடும்.

 

மேற்கண்ட நோக்கத்தின் அடிப்படையில், ஆண்களின் பாலியல் அறிவை வளர்ட்பதோடு, பெண்ணைப் பற்றிய நவீன பார்வையையும் வழங்கக் கூடிய நூல் இது.

 

இது உடலுறவு குறித்து பேசும் நூல் அல்ல. அது ஒரு எந்திரச் செயல். எந்த ஆணுக்கும் உடலுறவில் ஈடுபடத் தெரியும். தன்னுடைய காமத்தை மட்டும் தணித்துக் கொள்ளத் தெரியும். அவ்வாறு மனைவியை போகப் பொருளாக நடத்திக் கொண்டிருக்கும் செயல்தான்இல்லற வாழ்க்கையை நரகமாக மாற்றி அவனுடைய ஆயுளையே கூட குறைக்கக் கூடிய பாதகத்தைச் செய்கிறது என்கிற தகவல் தெரியாது.

 

மேற்கண்ட உண்மையை இந்த நூல் ஆதாரங்களோடு விளக்குவதோடு, மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நடை முறைக்கு நிரந்தரமாக முடிவுரை எழுதுகிறது.

 

பெண்களுக்கான சுதந்திரமும், பிரத்யேகமான சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்பட்ட பிறகும் கூட, ஒரு தார உறவு நிலைத்திருக்க வேண்டுமானால்,   மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்தும் போக்கு முற்றிலுமாக ஒழித்துக் கட்டப் பட வேண்டும்.

 

பெண்ணின் காமம் குடும்பத்திற்குள்ளேயே தணிக்கப் பட்டாக வேண்டும். அவ்வாறு தணிப்பதற்காக, ஆணின் பாலியல் அறிவு வளர்ந்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஒரு தார உறவு, விரைவில் வழக்கொழிந்து போகும். குடும்ப அமைப்பு தழைத்திருக்க முடியாது.

 

இலங்கை, இந்தியா போன்ற பன்முகத்தன்மையும், மிதமிஞ்சிய மக்கள் தொகையும் கொண்ட ஒரு தேசத்தில் குடும்ப அமைப்பு சிதைவது ஒரு நல்ல அறிகுறி அல்ல. குற்றவாளிகளின் கூடாரமாக நாடு மாறிப் போய் விடும்.

 

ஆகவே, மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வழக்கமான பாலுறவு முறைக்கு முடிவுரை எழுதி விட்டு, மனைவிக்குரிய பாலின்பங்களைத் தவறாமல் வழங்கக் கூடிய பண்டைய தமிழ் ஞானிகளின் வழிமுறைகளை ஒவ்வொரு கணவனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த நூல் ஆண்களை வலியுறுத்துகிறது.

 

வலியுறுத்துவதோடு மட்டும் நூல் நின்று விடுவதில்லை. திருவிழாக் கூட்டத்தில் ஒரு தாய் தன் குழந்தையின் கையை இறுக்கமாய்ப் பிடித்து அழைத்துச் செல்வதைப் போல, மனைவிக்குரிய இன்பங்கள் அனைத்தையும் வழங்கிய பின் கணவனுக்குரிய இன்பத்தை முடித்துக் கொள்ளும் வெற்றிகர மான வழிமுறைகளைத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கிறது.

 

ஆழ்மன நிம்மதியோடு ஒவ்வொரு இரவும் ஆழ்ந்து உறங்கக் கூடிய, குடும்ப விவகாரச் சண்டைகளற்ற அற்புதமான வாழ்க்கையை நோக்கி, ஆண்களை அழைத்துச் செல்கிற ஒரு வழிகாட்டியாக, நூல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

 

தன் பேரக்குழந்தையின் கையைப் பிடித்து நடைபாதையில் மெதுவாசு நடத்திச் சென்று தாத்தா நடை பழக்குவதைப் போல, பள்ளி ஆசிரியை மழலைகளுக்கு கணித வாய்ப்பாட்டைச் சொல்லிக் கொடுப்பதைப் போல, குடும்ப வாழ்க்கைக்குத் தேவைப் படுகின்ற உளவியல், பாலியல் அறிவை சாமான்ய குடும்பத் தலைவனுக்குத் தெளிவாகப் புரியும் படியாக, மிக எளிமையாக, அதே நேரத்தில் உளவியல் நுணுக்கங்களோடு, இந்த நூல் சொல்லிக் கொடுக்கிறது.

 

நூலில் காணப்படும் சில கருத்துக்கள், உங்கள் மனம் பக்குவப்படுத்தப் பட்டுள்ள விதத்திற்கு எதிராகக் காட்சியளிக்கலாம். உங்கள் கருத்துக்களை வலுப்படுத்தக் கூடிய ஆதாரங்கள் நினைவிற்கு வரலாம். அவை விதி விலக்குகள். உதாரணமாக, ஆண்களுக்கும் மார்பகங்கள் உண்டு என்பதும் அவற்றில் பால் சுரக்காது என்பதும் ஒரு பொதுத் தகவல். ஆனால், கல்லீரல் தன் கவனத்தைத் தவற விடும்போது, ஆண்களுக்கும் கூட பால் சுரக்கும் என்பது ஒரு விதிவிலக்கு. விதி விலக்குகள் ஒரு போதும் பொது விதியாகாது. விதிவிலக்குகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசத் துவங்கினால், வறட்டுத் தனமாக வாதிடுவதற்கும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்கும் அவை உதவுமே தவிர, அறிவை வளர்த்துக் கொள்ள உதவாது.

 

பாலியல் அறிவை வளர்த்துக் கொள்ளாத வரை, மனைவிக்குரிய இன்பங் களை வழங்க முடியாது. இன்பங்களை வழங்காத வரை போகப் பொருளாகப் பயன் படுத்தும் கொடூரத்திலிருந்து வெளியேற முடியாது. அதிலிருந்து வெளியேறாத வரை, இல்லற வாழ்வை நிம்மதியாக வாழ முடியாது. வாழக் கிடைத்த வாய்ப்புக் கூட பறி போக நேரலாம். இது தான் இன்றைய நிலைமை.

 

ஆகவே காமம் குறித்து இதுவரை ஊட்டப் பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு படிக்கத் துவங்கினால், ஒவ்வொரு கணவனையும் அசாதாரணமான காதலனாக உண்மையான, சுயநலமற்ற தவறாமல் மனைவிக்குரிய இன்பத்தை அளிக்கின்ற வெற்றிகரமான கணவனாக இந்த நூல் மாற்றியமைக்கும்.

 

மனைவியின் உடல் நலத்தையும், மன நலத்தையும் சிறப்பாகப் பேணக்கூடிய மருத்துவனாகக் கணவனை மாற்றும். அடைத்துக் கிடக்கின்ற அன்பின் ஊற்றுக்கள் அனைத்தையும் தூர்வாறி, பெண்ணின் மென்மையை உச்சபட்ச அளவிற்கு மிளிர வைக்கும் கணவனாக ஆணை உருவாக்கும். மொத்தத்தில் இல்லற வாழ்க்கையை சொர்க்க வாழ்க்கையாக மாற்றிக் காட்டும்.

 

சொர்க்கமும் நரகமும் எங்கோ வானுலகில் இருப்பவையல்ல. அவை உருவகங்கள். அகத்தால் உருவாக்கப் படுபவை. அந்த அடிப்படையில் ஒவ்வொரு வருடைய இல்லற வாழ்வையும் சொர்க்கமாக மாற்றிக் காட்ட இந்த நூலால் நிச்சயம் முடியும். அந்த வல்லமை இந்த நூலுக்கு நிச்சயம் உண்டு.

 

இதோ இனி அந்த ஞானப் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்கத் துவங்குங்கள். கடலிலிருந்து கரையேறும் போது, ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டிய அளவிற்கு முத்தெடுத்து விடுவீர்கள் என்பதில் கடுகளவல்ல, அணுவளவு கூட எனக்கு ஐயம் இல்லை.

 

மனைவியை ஒரு போகப் பொருளாகப் பயன்படுத்தாமல், ஈடுபடும் ஒவ்வொரு முறையும் உரிய இன்பங்களை வழங்கி, மகிழ்ந்து குலாவிக் கொண்டாடி மகிழ, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

0% Complete