பல பெயர்களில் காதல்
காதல் என்பது பல பெயர்களில் நிகழ்கிறது. அவற்றின் பட்டியலும், அவை உருவாவதற்கான சூழலும் பின்வருமாறு.
விபத்தைப் போல், சந்தித்த அடுத்த நொடியே உருவாகும் காதல், கன்னிக் காதல்.
ஒருவரை மற்றவர் பாராட்டிக் கொள்வதால் உருவாகும் காதல், பள்ளிக் காதல். பாராட்டும் போது, பாராட்டலுக்கு ஆளானவர் மனதில் காதல் தோன்றும். அப்படி உருவாகும் காதலே, பள்ளிப் பருவக் காதல்.
இனக்கவர்ச்சியால் உருவாகும் காதல், இளவயதுக் காதல். பதிமூன்று முதல் பதினெட்டு வயதுக்குள் நிகழும் காதல் இது.
பாலுறவில் ஈடுபட்டால் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வக் கோளாறால் உருவாகும் காதல், விடை தேடும் காதல். பதினாறு முதல் இருப்பது வயதுக்குள் உருவாகும் காதல் இது.
ஒருவரிடமிருந்து ஏதேனும் ஒன்றைப் பறிக்கும் நோக்கில் உருவாக்கப் படும் காதல், நாடகக் காதல். திட்டமிட்டுக் கவிழ்க்கும் பண்புடையது இது.
நண்பர்களாகத் துவங்கி, பாலுறவில் கொண்டு போய் நிறுத்தும் காதல், நட்பால் உருவான காதல் எதிர்ப்பாலினத்தோடு ஏற்படும் நெருக்கமான நட்பு இறுதியாகச் சென்றடையும் இடமே இது.
ஒருவருடைய நற்பெயரைச் சிதைக்கும் நோக்கில், திட்டமிட்டு அவரைக் காதலில் வீழ்த்தும் செயல் தான், நாசகரக் காதல்.
பாலுறவால் கிடைக்கக்கூடிய இன்பத்தை நுகர்வதற்கென்றே உருவாகும் காதல், காமக் காதல். கள்ளக் காதல்களுக்கு இதுவே மூலம்.
“இன்னாரைக் கவிழ்த்து விட்டேன் பார்” என்று மார்தட்டிக் கொள்ளவே உருவாகும் காதல், கண்காட்சிக் காதல். உருவான வேகத்தில் மறையும் இயல்புடையது இது.
இவரை கவிழ்த்தால் செல்வந்தராகி விடலாம் என்கிற நோக்கில் உருவாக்கப்படும் காதல், பொருள் தேடும் காதல். இந்தக் காதலை உருவாக்கும் போக்கு இருபாலரிடமும் உண்டு.
வயதான செல்வந்தர் மீது உருவாகும் காதல், ஆதாயக் காதல். கிடைக்கப்போகும் செல்வத்தை மனதிற்கொண்டே இது உருவாகிறது.
ராக்கிங்கிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள கல்லூரிக்குள் நுழைந்ததும் உருவாகும் காதல், கல்லூரி காதல்.
சிறு வயது முதல் ஒன்றாகவே வளர்ந்த குழந்தைகளிடையே உருவாகும் காதல், குழந்தைப் பருவக் காதல்.
பேராசிரியர்-மாணவர், பூசாரி-பக்தர், மருத்துவர்-நோயாளி ஆகியோரிடையே தோன்றும் காதல், பிரமிப்பால் தோன்றும் காதல்.
முதுமை காலத்தில் தன்னை பராமரிப்பவர் மீது உருவாகும் காதல், முதுமை காதல்.
முப்பது வயதுக்கு மேல் வரக்கூடிய இரண்டாம் இளமைக் காலத்தில் உருவாகும் காதல், பேரிளம் பருவக் காதல்.
பாலுறவு கொள்வதோடு, பணத்தை அபகரிக்கும் நோக்கத்தையும் கொண்டு உருவாக்கப்படும் காதல், கயமைக் காதல்.
காதல் இணையை எப்போதும் கீழ்த்தரமாக இம்சித்துக் கொண்டே இருக்கும் காதல், புண்படுத்தும் காதல்.
இவர் எப்படிப்பட்ட நபர் எனத் தெரிந்து கொள்ள நடத்தப்பட்ட முயற்சியின் போது உருவாகும் காதல், எடைபோடும் காதல்.
பிரபலங்களின் மீது உருவாகும் காதல், கற்பனைச் சிந்தனையால் உருவாகும் காதல்.
பணக்காரர்களின் மீது உருவாகும் காதல், செழுமையைக் கண்டு உருவான காதல்.
சிரமத்தில் இருந்த ஒருவருக்கு உதவப் போய் உருவான காதல், உதவப் போய் உருவான காதல்.
உதவி செய்தவர் மீது உருவாகும் காதல், செய்நன்றிக் காதல்.
அலைக்கழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப் படும் காதல், பிறரைக் காயப்படுத்தி இன்புறும் காதல்.
உடமை மனப்பான்மையோடு உருவாகும் காதல், தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதில் இன்புறும் காதல்.
ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர், எனப் பலரோடு மேற்கொள்ளப்படும் காதல், பொழுது போக்குக் காதல்.
தன்னைக் கைவிட்ட எதிர்ப்பாலினத்தின் பிரதிநிதியெனக் கருதி, எதிர்ப்பாலினத்தைச் சேர்ந்தோரைத் திட்டமிட்டுக் காதலித்துக் கைவிடும் காதல், பழிவாங்கும் காதல்.
இரகசியமாக நிகழும் காதல், கள்ளக் காதல். அடுத்தவருடைய சட்டப் படியான இனையோடு மட்டுமல்ல, இரகசியமாக எவரோடும் நிகழ்ந்தாலும் அது கள்ளக் காதலே.
மண வாழ்வில் குழந்தைப் பேறு இல்லாமல் போகும் போது, செயற்கை வழிக் கருத்தரிப்புச் சிகிட்சைக்கு தேவைப்படும் பணமும் இல்லாத சூழலில், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வோம் என்கிற நோக்கில் திருமணம் கடந்து ஒரு உறவை உருவாக்கிக் கொள்ளும் காதல், இனத்தைத் தழைக்க வைக்கும் காதல்.
உரிய வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ள முடியாதவர்கள், அதாவது, பெண் கிடைக்காத நடு வயது ஆண்கள், அதே போல் ஆண் கிடைக்காத பேரிளம் பெண்கள், எப்படியாவது தங்களுக்கென ஒரு துணையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், வேறு வழியே இல்லாமல், உருவாகிக் கொள்ளும் காதல் கட்டாயக் காதல்.
நாற்பது வயதுக்கு மேலான ஆண்களின் வாழ்விலும், முப்பது வயதிற்கு மேலான பெண்களின் வாழ்விலும் நிகழும் காதல் இது.
பொதுச் சொத்தாக இருப்பதால் உருவாகும் தொல்லைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் குறிப்பிட்ட ஒருவரோடு உருவாக்கிக் கொள்ளும் காதல் தற்காப்பு காதல். புதிதாகப் பணிக்குச் சேர்ந்த இடத்தில் நிகழ்வது இது.
பணி சார்ந்த உதவிகளை உரிமையோடு பெற்றிடவும், சிறப்புச் சலுகைகள் சிலவற்றைப் பெற்றிடவும், திட்டமிட்டுத் தன் நிர்வாகிகளோடு உருவாக்கப் படும் காதல், அலுவலகக் காதல்.
பாலுறவு கொள்வதற்காகவே உருவாக்கப்படும் காதல், பாலுறவுக் காதல். பேரிளம் பருவமே இதற்கான பொற்காலம்.
ஒருவருடைய நேர்மையைக் கண்டு உருவாகும் காதல், நம்பிக்கையால் உருவாகும் காதல். குறிப்பிட்ட காலம் பழகிய பிறகு தான் இந்தக் காதல் உருவாகும்.
பெற்றவர்களுக்குத் துன்பத்தைத் தந்து விடக் கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வோடு நிகழும் காதல், பண்பாடான காதல். கற்றோர் வாழ்வில் மட்டுமே நிகழும் காதல் இது.
இவ்வாறாக, ஏதேதோ பெயர்களில், எண்ணற்ற காதல்கள், நம் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.