போகப் பொருளாய்ப் பயன்படுத்தும் கணவர்களின் குமுறல்கள்
என் மனைவியிடமிருந்து யாரேனும் என்னைக் காப்பாற்றுங்கள். அதன் பின், உலகையே நான் காப்பாற்றுகிறேன்.
பெரும்பாலான தம்பதியரின் பாலுறவு மூன்று நிமிடத்திற்குள் முடிந்து விடுகிறது. இது தான் மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்தும் பேதைமை. இவ்வாறு போகிப்பதற்கான பொருளாக இருக்க மனைவி உறுதியாக மறுக்கும் போது தான், சண்டை துவங்கி விடுகிறது. அது தான் குடும்ப விவகாரச் சண்டை.
இரவு நேரத்தில் தம்பதியரிடையே நடைபெறுகின்ற குடும்ப விவகாரச் சண்டை காரணமாக, பலருடைய இல்லற வாழ்க்கை வெளியில் தெரியாத போர்க்களமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒன்றாய் வாழும் தம்பதியர் பலர் ஒன்றாய் வாழ்வதைப் போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பனிப்போர், நான்கு சுவர்களுக்குள்ளே நடந்து கொண்டிருக்கக் கூடிய இரகசிய பூசல்கள், வெட்கம் துறந்து வெளிப்படையாகவே நடைபெறுகின்ற சண்டைகள், மனைவியின் சித்திரவதைக்கு ஆளாகும் கணவன், கணவனின் கொடுமைக்கு ஆளாகும் மனைவி, ஊரறிய நடைபெறுகின்ற திருமணம் கடந்த உறவு போன்றவை, இன்றைய இல்லற வாழ்வின் அடையாளங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.
குற்றம் சொல்லவே குரல் ஒலிக்கிறது. வருத்தங்களைத் தெரிவிக்கவே வாய் திறக்கிறது. ஒருவரையொருவர் சபித்துக் கொள்ளவே மனம் சிந்திக்கிறது. ஆழ்மனதிலே விரோதம் குடியேறுகிறது. கவலையுறுதலே வாழ்க்கையென்றாகி விடுகிறது. வாழும் நரகமாய் இல்லற வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது.
மூன்று வயதுக் குழந்தையோடு பேசும் வாய்ப்புக்களின் போதெல்லாம், எதைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும், தன் பெற்றோருக்கிடையே நடை பெற்றுக் கொண்டிருக்கும் சண்டையைப் பற்றியே குழந்தை அதிகமாகப் பேசுகிறது. குடும்ப வாழ்க்கையை வாழ்வது குறித்த அற்பத்தனமான வழிமுறையொன்று பிஞ்சு நெஞ்சங்களிலேயே, பதியனிடப் படுகிறது.
பல தம்பதியர் தங்களுக்குக் கிடைத்த வாழ்க்கையை வாழவில்லை. வாழ்வதைப் போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரத் தற்சார் பின்மை காரணமாகச் சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதிச் சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள். சமூக நிர்பந்தம் காரணமாகச் சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள்.
எங்கே செல்வது என்று தெரியாத காரணத்தால், சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள். பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகச் சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள். கூட்டாக எழுதி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் காரணமாகச் சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள்.
தன்னையொத்தவர்களைப் போல் வாழ்ந்தாக வேண்டுமே என்பதற்காகச் சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள். தனி நபராக வாழ்வதற்கு அஞ்சி சேர்ந்து வாழ்கிறார்கள்.
ஆனால், அன்பு காரணமாக மட்டுமே சேர்ந்து வாழும் தம்பதியின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.
குழந்தையின் எதிர்காலம், பொருளாதாரத் தற்சார்பின்மை, கூட்டு முதலீடு, அண்டை அயலாரின் பார்வை, போக்கிடம் இன்மை, தனிமையை எதிர் கொள்ள அச்சம், சட்டத்தைக் கண்டு பயம் போன்றவையே இன்றைய குடும்ப வாழ்க்கையைக் கட்டிக் காக்கும் அரண்களாக உள்ளன.
அதற்கான ஒரே காரணம் அன்பை உருவாக்கக் கூடிய வேதிப்பொருள் தம்பதியரின் மூளையில் போதுமான அளவிற்குச் சுரப்பதில்லை.
நோய்களின் மூலம் தணிக்கப்படாத காமம்.
தொடர் வேதனையில் உழன்று கொண்டிருக்கும் மனம் தான், உடலுக்குள்ளே நோய்களை உருவாக்கக் கூடிய மூலப் பொருள்.
நடு வயதில் வரக்கூடிய மாரடைப்பும், புற்று நோயும் வாழ்ந்த வாழ்க்கையால் வரவழைக்கப் பட்டவை.
பெரும்பாலான தம்பதிகளுக்கு இது தெரியாது.
அதனால், மன வேதனையின் பிறப்பிடமாகத் திருமண வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
திருமண வாழ்க்கையே வாழும் காலத்தைக் குறைக்கக் கூடிய, அகால மரணங்களின் வரவேற்பறையாகி விட்டது.
அற்பாயுளில் ஆண்கள் செத்துப் போகிறார்கள்.
குடும்பங்கள் சிதறிக் கொண்டிருக்கின்றன.
எத்தனையோ தற்கொலைகள் ஏதேதோ காரணங்களின் கீழ் நடந்த தாகக் கணக்குக் காட்டப் படுகிறது.
இல்லற வாழ்க்கை மட்டும் இன்பமாக இருக்குமானால், எளிதில் தற்கொலை நிகழாது என்கிற உளவியல் உண்மை மறைக்கப் படுகிறது.
நீக்கமற இந்நிலையே எங்கும் நிறைந்திருப்பதால், இது தவிர்க்க முடியாதது என்றாகி விட்டது.
மேற்கண்டவையெல்லாம் இல்லாமல் ஒரு குடும்ப வாழ்க்கையா? அது எங்கே விற்கப் படுகிறது? ஒரே ஒரு நாளாவது – வாடகைக்காவது – அது கிடைக்குமா? என்று அதிசயம் போல் கேட்கப்படுகிறது.
குடும்ப வாழ்க்கையில் நிலவும் அவலங்களுக்காகக் கூறப் படுகின்ற காரணங்கள் அனைத்துமே சாக்குப் போக்குகள்.
உண்மையான காரணம் பாலின்ப ஆற்றாமை.
நடைபாதையில் வசிப்பவனின் மனைவியும் சரி, அரசாங்க அதிகாரியின் மனைவியும் சரி, நட்சத்திர விடுதி போன்ற மாளிகையில் வசிப்பவனின் மனைவியும் சரி, மகா கோடீசுவரனின் மனைவியும் சரி தங்கள் கணவனுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்கத் தயங்குகிறார்கள்.
அவர்களைப் பீடித்துள்ள பாலின்ப ஆற்றாமை என்கிற ஆழ்மன நோயும், அந்நோயின் காரணமாக தங்கள் திருமணம் குறித்து ஆழ்மனதில் ஏற்பட்டுள்ள அதிருப்தியும், அந்த அதிருப்தி காரணமாக கணவனின் மீது, அவர்கள் ஆழ்மனதில் குடியேறியுள்ள கோபமும் தான், அவர்கள் வழங்கத் தவறிய மதிப்பெண்களின் வழியே கசிந்து வெளியாகிறது.
சமாதானத் தூதுவர்களும், தலைவர்களும்.
மனித உடலின் அடிப்படைப் பசியான காமம் தணிக்கப் படாத போது, ஆழ்மனதில் ஒரு ஏக்கம் பிறக்கிறது.
ஏக்கம் பூர்த்தியடையாத போது, ஏமாற்றம் உருவாகிறது.
தொடர் ஏமாற்றம், மனநிலையை விரக்தியடையச் செய்கிறது.
நாட்பட்ட விரக்தி, வெறுப்பாக மாறுகிறது.
இறுதியில், அந்த வெறுப்பே, கணவனின் மீதான ஆழ்மனக் கோபமாக மாறி விடுகிறது.
அந்தக் கோபநிலை காரணமாக, கணவனின் ஒவ்வொரு செயலும் தவறாகவே தெரியத் தொடங்குகிறது.
கற்பனையாகவே குற்றங்கள் தெரிகின்றன. நிழலை நிஜம் என்றே மனம் சாதிக்கிறது. அதன் விளைவாக, நிரந்தர விவாத மேடையாக, வீடு உருவாகி விடுகிறது.
நியாயப் படுத்துவதே, வாழ்வின் நிலவரமாகி விடுகிறது. வாதப் பிரதி வாதங்களே, தம்பதியின் உரையாடலாக மாறிப் போகிறது. வெறுப்பு அதிகரிக்கிறது.
உறங்குவதற்கு மட்டுமே, கணவன் வீட்டிற்கு வருகிறான்.
வம்பிழுத்தல் என்பது தணிக்கப்படாத காமத்தின் வெளிப்பாடு.
தாம்பத்ய இன்பங்களைப் பெற முடியாத உடலில் வாழும் மனம் தான் வக்கிர சிந்தனைக்கே மூலம்.
குழந்தையின் முதுகில் பளாரென்று விழும் அறை வேறொன்றுமல்ல. பாலின்ப ஆற்றாமையின் சீற்றம்.
தணிக்கப்படாத காமம் தான் செல்லுபடி யாகக் கூடிய இடம் கிடைக்காத போது குழந்தையின் மீது, தன்னுணர்வற்ற நிலையிலே ஒரு கோபாவேசமாகப் பீறிட்டு வெளியேறுகிறது.
வன்முறைக்குக் காரணம் காமம்.
தணிக்கப் படாத காமமே சமூகக் குற்றவாளியை வார்த்தெடுக்கும் கூடம்.
எதிலுமே அதிருப்தியை மட்டுமே காட்டுமானால், அது தணிக்கப் படாத காமத்தின் வெளிப்பாடு.
நஞ்சாகவும், மன நோயாகவும் இருப்பது தணிக்கப் படாத காமம்.
காட்டு மிராண்டியாய் மனிதனைச் செயல் படச் செய்வது தணிக்கப் படாத காமம். மனிதப் பிறவியை மிருகமாக மாற்றிக் கொண்டிருப்பது தணிக்கப் படாத காமம்.
தணிக்கப் படாத காமத்தின் வெளிப்பாடுகளே, ஒரு நபருடைய அடிப்படைக் குணங்களாகி விட்டன. ஆனால், இந்த உண்மையை மக்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
தம்பதியர் இருவரும் சேர்ந்திருந்தாலே பிரச்சினை. எதிலும் பிரச்சினை. எப்போதும் பிரச்சினை. தீராத பிரச்சினைகளோடு வாழ்வது தான் வாழ்க்கை. பிரச்சினைகளுக்கு இடையே மின்னல் போலத் தோன்றி மறைவது தான் மகிழ்ச்சி என்கிற நிலைமை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.
குடும்ப வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கும். சண்டைகளும் சச்சரவுகளும் இல்லற வாழ்வில் தவிர்க்கவே முடியாதவை. மேலும் அவை தான் அன்பின் ஆழத்தை அளப்பதற்கான அடையாளங்கள் என்றொரு கருத்து கூறப்பட்டு, ஒருவரையொருவர் சபித்த படியே, ஒரே கூரையின் கீழ் வாழ்வ தென்பது ஒரு பொது விதியாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
வாழ்க்கை ஒரு பரிசு. கொண்டாடி மகிழ்வதற்காக வழங்கப்பட்டுள்ள கொடை. குதூகலமே வாழ்வின் குறிக்கோள். இதை உணர்ந்து வாழ்க்கையை இன்பமாய்க் கொண்டாடி வாழ எத்தனையோ வழிகளைப் பண்டைய தமிழ் ஞானிகள் நமக்கு வழங்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.
கட்டிடத்திற்குரிய மூலப்பொருட்கள் கையருகில் இருக்கின்றன. ஆனால், அதை ஒன்றிணைத்து உருவமாக்கத் தெரியவில்லை.
வீட்டிற்குள்ளேயே விடையிருக்கிறது. ஆனால், கணவனோ வீட்டைத் தவிர, வெளியில் எங்கெங்கோ ஓடி, விடையைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
மூலிகைத் தோட்டமே வீட்டில் இருக்கிறது. ஆனால், மருந்திற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரச்சினக்குள்ளேயே தீர்விருக்கிறது. ஆனால், வேரை விட்டு விட்டு கிளைகளை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். தீர்வைத் தேடியலைந்து, அதைப் பெற முடியாமல், ஒரே வீட்டிற்குள் தீவு வாழ்க்கையைப் பல தம்பதியர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குற்றச்சாட்டுகளும், வாக்கு வாதங்களும், நியாயப் படுத்தல்களும் என இல்லற வாழ்க்கை ஒரு தர்க்க சாலையாக உருவெடுக்கிறது.
ஆயுதங்களைப் பயன்படுத்திச் சண்டையிடுவது உடல் மீது நடத்தப் படும் போர். தர்க்கம் மனதின் மீது நடத்தப் படுகிற போர். இந்த இரு வகைப் போரில், தர்க்கப் போர் தரும் வலியே மிகவும் அதிகம்.
தர்க்கப் போரினால் ஏற்பட்ட காயங்களை வெளியில் காட்டி அடுத்தவர்களின் ஆதரவையும் பெற முடியாது. அல்லது காயப்படுத்திய எதிரியிடமே காட்டி, அவருடைய கருணையையும் கோர முடியாது. ஆகவே, கொடூரமான போர் வகையைச் சேர்ந்த தர்க்கம் காரணமாக, மனதை ரணகளப் படுத்துகின்ற போர்க் களமாக இல்லம் உருவெடுக்கிறது.
தம்பதியரின் கால்களுக்கிடையே தான் சமாதானத் தூதுவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். காதுகளுக்கிடையே தான் சமாதானத்தின் தலைவர்களும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பயன்படுத்தத் தெரியாமல், நண்பர்களையே விரோதிகளாகப் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களை விரோதிகளாகப் பாவிப்பதால், விரோதிகள் அனைவரும் தம்பதியரின் ஆத்ம நண்பர்களாகி விட்டார்கள்.
சலிப்பு, எரிச்சல், கோபம், வெறுப்பு, ஆத்திரம், கவலை, துயரம், பகைமை, மனச்சோர்வு, பயம், பொறாமை, அவநம்பிக்கை, குற்றச் செயல், வன்முறை போன்ற வாழ்க்கையின் பரம விரோதிகளோடு தான் தம்பதியர் கூடிக் குலாவ வேண்டியிருக்கிறது.
அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, உற்சாகம், ஊக்கம், தெளிவு, சக்தி, ஆனந்தம், தன்னம்பிக்கை, சுயமதிப்பு, நேர்மறைச் சிந்தனை போன்ற மனிதனின் பிரத்யேக குணங்களைத் தொலைத்து விட்டார்கள்.
இதோ மேற்கண்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியர் சிலருடைய வாழ்க்கையை நாம் மேலோட்டமாக அறிந்து கொள்ளலாம்.
கணவர்களின் புலம்பல்கள்.
எனக்கு வயது ஐம்பது. என் மனைவிக்கு நாற்பத்தைந்து. திருமணமாகி இருபது வருடங்கள் ஆயிற்று. ஒரே குழந்தை. ஆண் குழந்தை. பொறியியல் படிக்கிறான். நான் அரசாங்க அதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வருகிறது. அது தவிர மேல் வருமானமும் உண்டு.
மூன்று படுக்கையறைகளைக் கொண்ட இரண்டடுக்கு மாளிகையைக் கட்டி, அதில் தான் குடியிருக்கிறேன். இது தவிர, ஆறு குடித்தனங்கள் வாழும் ஒரு குடியிருப்பும் எனக்கு சொந்தமாக உள்ளது. அதன் மூலம் வாடகை வருகிறது. சொந்த ஊரில், வீடும், கொஞ்சம் விவசாய நிலமும் இருக்கிறது. ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் எனக்கு வழங்கப் பட்டிருக்கிறது. ஆயினும் நான் நிம்மதியாக வாழ முடியவில்லை.
காரணம் இது தான். மேற்கண்ட சொத்துக்களைத் தவிர, இனியொரு காலியிடமும் எனக்கு சொந்தமாக இருக்கிறது. அந்தக் காலி மனையிலும் வீடு கட்டி வாடகைக்கு விடும்படி என் மனைவி என்னைப் பாடாய்ப் படுத்துகிறாள்.
அதில் ஒரு வீட்டைக் கட்டுமளவிற்கு என்னிடம் பணமில்லை. மேலும் என் அனுபவப்படி, வாடகைக்கு வீடு கட்டி விடுவது என்பது மிகவும் வேலை பளுவைத் தருவதோடு, முதலீட்டுக்குரிய இலாபம் தரும் தொழிலாகவும் தெரியவில்லை. ஆகவே நான் அதைச் செய்ய மறுக்கிறேன். என் மனைவியோ பயங்கரமாக நிர்பந்திக்கிறாள்.
வீட்டிற்குள் நுழைந்தாலே சண்டையாக இருக்கிறது. சகிக்க முடிய வில்லை. அவ்வப்போது தற்கொலை சிந்தனை கூட வருகிறது. ஆயினும், என் மகனுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
வேறொரு கணவர் கூறுகிறார்
எனக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. என் மனைவிக்கு நாற்பத்தெட்டு. திருமணமாகி இருபத்து மூன்று வருடங்கள் ஆயிற்று. இரண்டு குழந்தைகள். பெண் குழந்தைக்குத் திருமணமாகி விட்டது. ஆண் குழந்தை அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். நான் தனியார் நிறுவன மேலாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். இலட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வருகிறது. எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆயினும் நான் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஒரே சண்டை. எதற்கெடுத்தாலும் சண்டை. எவ்வளவு தான் ஒதுங்கிப் போனாலும், வாய்க்குள் விரலை விட்டு, வார்த்தைகளைப் பிடுங்கி, அதை வைத்து சண்டையிடுகிறாள்.
இனியொரு கணவர் கூறுகிறார்
எனக்கு அறுபத்து நான்கு வயதாகிறது. என் மனைவிக்கு அறுபது. திருமணமாகி முப்பத்து மூன்று வருடங்கள் ஆயிற்று. நாங்கள் இருவருமே ஆசிரியர்களாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இரண்டு குழந்தைகள், இருவரும் ஆண்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. வெளியூரில் தனித்தனியாக வசித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இருவர் மட்டும் தான் வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், எப்போதும் சண்டையாகவே இருக்கிறது. தாங்கவே முடியவில்லை. எவ்வளவு தான் பிள்ளைப் பூச்சியாக நடந்து கொண்டாலும், எப்படியாவது பேசவைத்து வம்பிழுத்து விடுகிறாள். திருமணத்திற்கு முன் நடந்ததை வைத்தெல்லாம் சண்டையைத் துவக்குகிறாள். நான் நிம்மதியாக வாழ முடியவில்லை.
மற்றொரு கணவர் கூறுகிறார்
எனக்கு அறுபது வயது. என் மனைவிக்கும் அறுபது. திருமணமாகி முப்பது வருடங்கள் ஆயிற்று. நான் ஒய்வு பெற்றவன். மனைவி இல்லத்தரசி. எங்களுக்கு ஒரே குழந்தை. அரசு அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகி விட்டது. நானும் என் மனைவியும், அந்தத் திருமணத்தின் போது பேசியதோடு சரி. அதன் பின், சண்டையிட மட்டுமே பேசிக் கொள்கிறோம்.
இனியொரு கணவர் கூறுகிறார்
நான் வீட்டிற்குள் நுழையும் போது, மனைவி டி.வி.பார்த்துக் கொண்டி ருப்பாள். அவளுக்கும் டி.வி.க்கும் இடையில் நுழைந்து தான், நான் போயாக வேண்டும். அப்படிப் போகும் போது, தன்னையும், டிவியையும் தவிர மூன்றாவதாக ஒரு உயிரினம் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறது என்கிற பிரக்ஞை கூட இல்லாதவளாக என் மனைவி அமர்ந்திருக்கிறாள்.
மற்றொரு கணவர் கூறுகிறார்
எனக்கு சேலைகளே எடுத்துத் தருவதில்லை என்று மனைவி சொல்கிறாள். போய் எடுத்துக் கொடுத்தால், விலை குறைவு. வடிவமைப்பு சரியில்லை. இரண்டாம் தரமானவை என்று ஏதோ ஒரு குற்றம் கூறுகிறாள். நீயே போய் எடுத்துக்கொள் என்று கூறினால், நான் போய் எடுத்துக் கொள்வதெனில், “கணவன் நீ எதற்காக இருக்கிறாய்” என்கிறாள்.
எந்த வண்ணம் பிடிக்கும்? என்ன விலையில் தேவை? எப்படிப்பட்ட வேலைப்பாடுகளோடு வேண்டும்? காஞ்சீபுரம் வேண்டுமா? பனாரஸ் அல்லது காஷ்மீர்? எது வேண்டும்? சோளியோடு, சோளியில்லாமல், எப்படி வேண்டும்? என்று கேட்டால், “உன் விருப்பம்” என்கிறாள்.
எடுத்துக் கொடுத்த பின், “எதுவுமே சரியில்லை. உனக்கு என்மீது அன்பில்லை. அதனால் தான் எனக்கு இப்படி எடுத்துக் கொடுக்கிறாய். எனக்கு மட்டும் வாழ்வில் “எதுவுமே” அமையவில்லை” என்கிறாள். சித்திரவதையாக இருக்கிறது என் வாழ்க்கை. எங்காவது ஓடிப் போய் விடலாமா என நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு காதல் கணவர் கூறுகிறார்
என் திருமணம் காதல் திருமணம். ஓடிபோய்த் திருமணம் செய்து கொண்ட காதல் எங்கள் காதல். திருமணமாகி இருபதாண்டுகள் ஆகிறது. மனைவி இல்லத்தரசி. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் மனைவியின் பெயரில் வீடு கட்டியிருக்கிறேன். நகைகள், சேலைகள் என பத்து இலட்ச ரூபாய்க்கும் மேல் செலவளித்திருக்கிறேன்.
என் தரப்பு உறவுகள் விழாக் காலங்களிலும், மனைவி தரப்பு உறவுகள் அடிக்கடியும் வீட்டிற்கு வந்து போகும் சூழல் இருக்கிறது. சிறப்பாகக் கல்வி பயிலும் வாய்ப்பை குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன்.
எனினும், நான் தான், என் மனைவியை மயக்கிக் காதலித்து திருமணம் வரை கொண்டு வந்து, அவளை ஏமாற்றி விட்டதாக, இப்போது கூறுகிறாள்.
காதலித்தவளைக் கை விடுவது தான் ஏமாற்றும் செயல் எனக் கருதப்படும் சூழலில், திருமணம் செய்து இருபதாண்டுகளாகக் கூடி வாழ்ந்து கொண்டிருப்பதை “ஒரு ஏமாற்றுச் செயல்” என்று என் மனைவி கூறுவதைக் கேட்பது மிகவும் துயரளிப்பதாக உள்ளது. உயிர் வாழும் விருப்பத்தை, கொஞ்சம் கொஞ்சமாக நான் இழந்து கொண்டிருக்கிறேன்.
பணக்காரக் கணவர் கூறுகிறார்
செலவுக்கு, பத்தாயிரம் கேட்டால் இருபதாயிரம், இருபதாயிரம் கேட்டால் ஐம்பதாயிரம் கொடுக்கிறேன். பணம் ஏராளமாக என்னிடம் இருக்கிறது. இலட்ச ரூபாய் செலவழித்தால் கூட, எனக்கு வலிக்காது. ஆனாலும் குடும்பத்தில் நிம்மதியில்லை. இருவருக்கும் இடையே நடைபெறும் எப்படிப் பட்ட உரையாடலையும் சண்டைக் களமாக்கவே என் மனைவி முயற்சிக்கிறாள். பணமீட்டுவதில் உள்ள ஆர்வத்தைக் கூட நான் இழந்து கொண்டிருக்கிறேன். சாமியாராகப் போய் விடலாமா என்று தோன்றுகிறது.
இனியொரு பணக்காரக் கணவர் கூறுகிறார்
நான் ஒரு தொழிலதிபர். என் மனைவி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். மூவாயிரம் ரூபாய் சமபளத்திற்கு என் நிறுவனத்தில் வேலை செய்தவள். காதல் திருமணத்தின் போது, அவள் உடுத்தியிருந்த ஆடைகள் மட்டுமே அவள் கொண்டு வந்த சீதனம். நான் தான் அவளுக்குரிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்து பராமரித்திருக்கிறேன். அவளது பஸ் பயணத்தைக் கார்ப் பயணமாக மாற்றி யிருக்கிறேன்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அவள் பெயரில் உருவாக்கி வைத்திருக்கிறேன். உலகத் தரம் வாய்ந்த பள்ளியில் குழந்தை படித்துக் கொண்டிருக்கிறான். வேலைக்குப் போய்க் கொண்டிருந்த அவளுடைய பெற்றோர், மற்றும் உடன் பிறந்தவர்களுக்குக் கூட தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்து, உயர்த்தி விட்டிருக்கிறேன். எனினும் தன் திருமண விசயத்தில் தவறாக முடிவெடுத்து விட்டதாக, என் மனைவி என்னிடமே கூறுகிறாள்.
மற்றொரு கணவர் கூறுகிறார்
என் மனைவி இல்லத்தரசி. காபி கேட்டால், கொண்டு வந்து கொடுக்கும் போது கொஞ்சமாவது சிதறித் தெறிக்கும் படியாகத் தான் கொடுக்கிறாள்.
சில சமயங்களில் கூடத்திலிருக்கும் போது தேநீர் கேட்டு விட்டு, கொண்டு வருவதற்குள் படுக்கையறைக்குச் சென்று என் கணிணியில் மூழ்கி விடுவேன். தேநீர் கேட்டதைக் கூட மறந்தும் விடுவேன்.
ஆனால், ஏதோ ஒரு நேரத்தில் நினைவு வந்து கேட்டால், அதெல்லாம் கேட்ட போதே கொடுக்கப் பட்டாகி விட்டது என்பாள். எப்போது கொடுத்தாய் எனக் கேட்டால், நீ கேட்ட போது எங்கே அமர்ந்திருந்தாயோ அங்கே போய்ப் பார் என்கிறாள். தேநீர் கேட்கப்பட்ட போது நான் எங்கிருந்தேனோ, அங்கே கோப்பை இருக்கிறது.
சில தினங்களில் தான் கொடுத்ததை நிரூபிக்க வேண்டுமென்பற்காக, அந்தத் தேநீர்க் கிண்ணம் நாள் முழுவதும் கூட அங்கேயே இருக்கிறது. நான் வீட்டிற்குள் வந்தவுடனே அந்த தேநீர்க் கிண்ணத்தை காட்டிய பின் தான் அப்புறப் படுத்துகிறாள். ஏன் இவ்வளவு குரோதம்?
சமகால சாக்ரடீஸ் கூறுகிறார்
என் மனைவி முதலில் உறவுகளோடு சண்டையிட்டாள். அவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். பின், அண்டை அயலாரோடு சண்டையிட்டாள். அவர்கள், இவளை ஒதுக்கி விட்டனர். பின், என்னைத் தேர்ந்தெடுத்தாள். நான் விடிந்ததும் வெளியேறி, இரவு பத்து மணிக்கு வீட்டுக்குச் செல்வதை வழக்கப் படுத்திக் கொண்டேன்.
அதனால், இப்போது குழந்தைகளோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாள். இதனால் குழந்தைகளுடைய கல்வியின் பேரிலான கவனம் சிதறுகிறது. அவர்களும் சண்டைக் கோழிகளாக வாழப் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வார்களோ என அஞ்சுகிறேன்.
இத்தனைக்கும் அடிதடி, குடி, பணப் பிரச்சினை, மாமியார் தொல்லை, நாத்தனார் தொந்தரவு என எதுவுமே இல்லை. டி.வி. பார்ப்பதற்கு கூட இடையூறு இல்லை. என் மனைவிக்கென்று தனியாக ஒரு தொலைகாட்சிப் பெட்டி ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. மேலும், அவள் வேலைக்குச் செல்பவளும் அல்ல. மனநல மருத்துவரிடம் போய் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும் அவள் மறுக்கிறாள்.
இனியொரு கணவர் கூறுகிறார்
ஆறுதலான பார்வை, பிரமிப்பான பார்வை, தழுவலான பார்வை, ஒரு காமம் நிறைந்த பார்வை என ஒரு அன்பு நிறைந்த பார்வையை, கடந்த பத்தாண்டுகளில் ஒரு நாள் கூட என் மனைவி என் மீது வீசியதேயில்லை. பார்த்தாலே எரித்து விடுகிற மாதிரித் தான் பார்க்கிறாள்.
மற்றொரு கணவர் கூறுகிறார்
நான் ஒரு தீர்வைச் சொல்கிறேன். அது நிராகரிக்கப் படுகிறது. அதே தீர்வை வேறொரு நபர் கூறும் போது அது ஏற்கப்படுகிறது. ஏன் இந்தப் பாகுபாடு?
இனியொரு கணவர் கூறுகிறார்
பள்ளிப் படிப்பை மட்டுமே பெற்றிருந்த நான் திருமணத்திற்குப் பின் முதுகலைப் பட்டம் வாங்கியவன். என் மனைவி பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டாதவள். அதனால் என்னைக் கண்டால் என் மனைவிக்கு இப்போது பிடிப்பதில்லை. என் மீதுள்ள வெறுப்பின் காரணமாக, கற்றோர் சமூகத்தைக் கண்டாலே அவளுக்குப் பிடிப்பதில்லை. குழந்தையின் ஆசிரியையோடு அல்லது டியூசன் மாஸ்டரோடு, அல்லது பள்ளி நிர்வாகத்தோடு, அல்லது குழந்தைகளோடு அல்லது என்னோடு என ஏதேனும் ஒரு பிரச்சினை செய்தபடியே இருக்கிறாள். பிறரோடு அவள் உருவாக்கும் பிரச்சினையின் மையம் பெரும்பாலும் காமம் சார்ந்ததாகவே இருக்கிறது. அதனால், மன நல ஆலோ சனைக்குப் போய் வரலாம் என்று கூறினால், உனக்குத் தான் காமப் பைத்தியம். எனக்கென்ன வந்தது என்கிறாள்.
கணவர்களின் பொதுவான கருத்துக்கள்.
1) பாலுறவின் போது என் மனைவி பிணம் போல் கிடக்கிறாள். திருமணம் என்கிற பெயரில், ஒரு மரக்கட்டையை நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.
2) என் மனைவி ஒரு புத்தகப்புழு அல்ல. ஆயினும் நான் பாலுறவில் ஈடுபட விரும்பும் போது, ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கி விடுகிறாள். நான் பாலுற்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அவள் படித்துக் கொண்டிருக்கிறாள். என் உயிர்நீர் வெளியேறியதும், “முடிந்து விட்டதா? சரி. சரி. போய்ப் படு” என்கிறாள். என்னால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. என் மனம் சுக்கு நூறாக உடைந்து கிடக்கிறது.
3) நான் பாலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, என் மனைவி தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். நான் மிகவும் அவமதிக்கப் படுவதாக உணர்கிறேன்.
4) நான் பாலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, என் மனைவி அன்றாட விவகாரங்கள் பற்றி விவாதிக்கத் தொடங்கி விடுகிறாள். என் மனம் பாலுறவிலிருந்து விலகி விடுகிறது. பாலுறுப்பு தன் விரைப்புத் தன்மையை இழந்து விடுகிறது.
5) கால்களை அகற்றுவதைத் தவிர, என் மனைவி வேறு எந்தச் செயலிலும் ஈடுபட்டதேயில்லை. கணவனின் பாலுறுப்பைத் தன் கைகளால் தொடுவது அவளுடைய பிறப்புக்கே அவமானம் எனக் கருதுகிறாள்.
6) எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இரவு எத்தனை மணிக்கு நான் மனைவியை நெருங்கினாலும், உடனே வீறிட்டு அலறியபடி தன்னை ஏதோ கடித்து விட்டதாகக் கூறி, என் குழந்தை அழுத படி விழித்துக் கொள்கிறான். ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்த மாதிரி இது நடக்கிறது. குழந்தை சுட்டிக் காட்டும் இடம் யாராலோ கிள்ளப் பட்டதன் காரணமாக சிவந்து போய்க் கிடக்கிறது. குழந்தையை அவ்வளவு குரூரமாகக் கிள்ளி, ஏன் என் மனைவி எழுப்பி விடுகிறாள்?
7) என் மனைவி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, சாப்பாடு போடு எனக் கேட்டு விட்டால், ருத்ர தாண்டவம் ஆடுகிறாள்.
8) என் வயது ஐம்பது. கடந்த பத்தாண்டுகளாக பாலுறவே கொள்வதில்லை. ஏனெனில், நாற்பது வயதைக் கடந்த பின், என்னால் கற்பழிக்க முடிவதில்லை.
9) தனியாக நாங்களிருவர் மட்டும் இருக்கும் போது, மனிதக் கழிவைப் பார்ப்பதைப் போல், என் மனைவி என்னைப் பார்க்கிறாள்.
10) என்னுடைய விரல் பட்டு விட்டால் கூட என் மனைவி குளிக்கச் செல்கிறாள். இத்தனைக்கும் அவள் என் அத்தை மகள்.
11) மனைவிக்கும் எனக்கும் இடையே சண்டையில்லாமல் ஒரு நாள் கூட கழிந்ததில்லை. எனக்குத் திருமணமாகிப் பத்தாண்டுகள் ஆகிறது.
12) என் வீட்டிற்குள் நுழைய என் தரப்பு உறவினர்கள் யாரையும் என் மனைவி அனுமதிப்பதேயில்லை. என் உறவினர் என்கிற போர்வையில் முன் பின் தெரியாத நீங்களே வந்தாலும் உங்களுக்கும் இதே கதி தான்.
13) என் மனைவி நாட்காட்டிகளில் குறிப்பிட்டுள்ள விரத தினங்களில் பாலுறவில் ஈடுபட அனுமதிப்பதில்லை. அதன்படி விரத தினம் இல்லாத நாளே என் வாழ்வில் இல்லை. ஏனெனில், ஐந்து மதங்களின் நாட்காட்டிகளை என் மனைவி அனுசரித்துக் கொண்டிருக்கிறாள். எங்கள் திருமணமோ ஜாதிகளைக் கடந்த கலப்புத் திருமணம்.
14) குடியில்லை, பணப் பிரச்சின இல்லை. தனிக் குடித்தனம். எனினும், வாழ்க்கை போர்க் களமாகவே இருக்கிறது.
15) என் சுய இன்ப அட்டவணையின் படி, திருமணத்திற்கு முன்னால் அனுபவித்ததை விட, திருமணத்திற்குப் பின்னால் அனுபவித்ததே அதிகம். என் வயது நாற்பது.
16) அகாலமான முறையில் எனக்கு மரணம் நேர்ந்தால், அதற்கு என் மனைவி தான் காரணம் என ஒரு கடிதத்தை, என் கைப்பட எழுதி என் நண்பனிடம் கொடுத்து வைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு அவளுடன் வாழ்வது அச்சமூட்டுவதாக இருக்கிறது.
17) குறிப்பிட்ட நடிகரின் புகைப்படங்களால் என் வீடு மட்டுமன்றி என் மனைவியின் கைப்பையும் நிரம்பி வழிகிறது. என் குழந்தைகள் கூட இதை வெறுக்கிறார்கள்.
18) என் மனைவி எனக்கிழைக்கும் கொடுமையைப் பற்றிச் சொல்லவே என் நா கூசுகிறது. ஆனால், தொடைகளின் இடுக்குகளிலேயே நான் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. மேலும், இந்த உண்மை எனக்குத் தெரியாது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
19) யாரேனும் பதினோராயிரத்து ஐநூறு ரூபாயை, நூறு ரூபாய்த் தாள்களாக என்னிடம் கொடுத்து விட்டால், அதை எண்ணி முடிக்க எனக்கு ஒரு மணி நேரம் ஆகிறது. ஏனெனில், எண்ணிக் கொண்டிருக்கும் போது இடையில் நுழைந்து ஏதாவது வம்பிழுப்பாள். அந்த வம்புப் பேச்சிற்குள் போய் வந்து மீண்டும் எண்ணத் துவங்கினால், அதை எண்ணி முடிப்பதற்குள் மீண்டும் வந்து வம்பிழுப்பாள். கவனம் சிதறாமல் எண்ணவே முடியாது. இவ்வாறு என் கவனத்தை என் மனைவி திசை திருப்பிக் கொண்டேயிருக்கிறாள். நச்சரிப்பாயிருக்கிறது வாழ்க்கை.
20) காதல் திருமணம் மூலம் என்னுடன் இணைந்த என் மனைவி, குழந்தை பிறந்த பிறகு, பார்வையாலேயே என்னை மிக மோசமாக அவமதிக்கிறாள். வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லவே, அவமானமாக இருக்கிறது. ஆனால், குழந்தைக்காகச் சென்று கொண்டிருக்கிறேன்.
21) மது வாடை இல்லாமல் போனால், பேசியே வதைக்கிறாளே என்று குடிக்கத் தொடங்கினேன். மூன்று மாதங்கள் அமைதி காத்த அவள் வழக்கம் போல் பேசத் தொடங்கி விட்டாள். ஆனால், நான் தான் மதுவுக்கு அடிமையாகி விட்டேன்.
22) இல்லத்தரசியான என் மனைவி பகலில் குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது உறங்கி விட்டு, இரவில் இரண்டு மணி வரை டீ.வீ. பார்த்துக் கொண்டிருக்கிறாள். எனக்கும் குழந்தைகளுக்கும் உள்ள இடையூறைப் பற்றிச் சொன்னாலும் அவளுக்குப் புரிவதில்லை.
23) உறவினர், நண்பர், தெரிந்தவர் என யார் மறைந்தாலும், அந்த ஈமச்சடங்கில் கலந்து கொள்ள என் மனைவியை நான் அனுப்புவதேயில்லை. ஏனெனில், மரணமடைந்தது யாராக இருப்பினும், ஈமச் சடங்கில் கலந்து விட்டு வந்ததும் முதல் வேலையாக, “எவ்வளவு நல்ல மனிதர் இறந்து விட்டார். அவருக்குப் பதில் நீங்கள் கூட இறந்திருக்கலாம்” என்று கூறுகிறாள்.
24) என் மனைவி வெளியூரில் வேலை பார்க்கிறாள். நான் கைபேசியில் அழைத்தால் எடுக்கவே மாட்டாள். குழந்தையின் எண்ணிலிருந்து அழைத்தால் வினாடிகளில் எடுத்து விடுவாள். ஆனால், பேசுவது நான் என்பது தெரிந்ததும், உன் மரண சேதி எப்போது வருமெனக் காத்திருக்கும் சூழலில் நீயே பேசிக் கொண்டிருக்கிறாயே என்கிறாள். குழந்தை கூட என் மீது பரிதாபப் படுகிறான்.
25) நான் ஒரு தொழில் அதிபர். என் மனைவி வங்கியொன்றில் தணிக்கை அதிகாரியாகப் பணியாற்றுகிறாள். பணிநிமித்தமாக அவள் வெளியூர் சென்றிருக்கும் போது, எந்த எண்ணிலிருந்து, யார் அழைத்தாலும் கேபேசியை எடுத்துப் பேசும் மனைவி, என் எண்ணிலிருந்து வரும் அழைப்புக்களை மட்டும் ஏற்பதேயில்லை. கேட்டால் “பணிச் சுமை” என்கிறாள்.
26) நீ இல்லாத போது அம்மா அமைதியாக டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், நீ இருக்கும் போது, டி.வி. நிகழ்ச்சிகளைக் கவனிக்க முடியாத அளவிற்கு உன்னோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாள். என்னால் டி.வி.பார்க்க முடியவில்லை. அதனால் நீ வீட்டிற்கு வராதே என்று தன் ஆறு வயதுக் குழந்தை கூறுவதாக ஒரு கணவர் கூறுகிறார்.
27) எனக்கு குடிப்பழக்கம் இல்லை. என் மனைவியை நான் திட்டியது கூட இல்லை. பெரிய அளவில் சண்டைகளும் வந்ததில்லை. ஆனால், என்னோடு பேசுவதை விட்டு விடு. உன் குரலைக் கேட்கவே எனக்குப் பிடிக்கவில்லை என்று என் மனைவி சொல்கிறாள். நாங்கள் பிரிய முடியாத அளவிற்கு குழந்தை வேறு இருக்கிறது.
1) வயிற்று வலி,
2) அமாவாசை,
3) குழந்தை விழித்துக் கொண்டுள்ளது,
4) தலைவலி,
5) வெள்ளிக்கிழமை,
6) உடல்வலி,
7) மூடு இல்லை,
8) உறக்கம் வருகிறது,
9) என் தாய் வந்திருக்கிறார்,
10) கொசுத்தொல்லை,
11) நாளை அதிக வேலை இருக்கிறது,
12) குழந்தை வளர்ந்து விட்டது,
13) இன்று என் பாட்டியின் நினைவு நாள்,
14) உடம்பு கெட்டுப் போய் விடும்,
15) இன்று வேலை அதிகம்.
16) ஓய்வு தேவை,
17) வயதாகி விட்டது போதும்,
18) போரடிக்கிறது,
19) உறவினர்கள் வந்துள்ளனர்,
20) கரு உருவாகி விடும்,
21) சிகரெட் நெடி,
22) உன் அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏன் திட்டினாய்,
23) நாளை மாத விடாய் துவங்கப் போகிறது,
24)25)26)27)28) மாதவிடாய் என ஐந்து நாட்கள்,
29) இதற்கு மட்டும் நான் வேண்டுமாக்கும்,
30) இன்று பண்டிகை தினம். ஒரு மாதத்தில், இத்தனை காரணங்களைக் கூறி பாலுறவை என் மனைவி நிராகரிக்கிறாள். மேற்கண்டவை அனைத்தும் பகிர்ந்து கொள்ள முடிந்த சில மாதிரிகளே.
மனைவியின் கற்பு பற்றிய புலம்பல்கள்
மனைவியின் கற்பு பற்றிப் புலம்பியழுகின்ற கணவர்களின் குமுறல்கள் காது கொடுத்துக் கொடுத்துக் கேட்க முடியாதவையாக இருக்கின்றன. முழுமையான தகவல்கள் அடுத்த நூலில் வரவுள்ளன.
நாற்பது வயதான ஒரு கணவர் கூறுகிறார். என் மனைவி நாள் தவறாமல் வேறொரு ஆணுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறாள். யாரும் எதுவும் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டார்களா எனக் கேட்டால், “மற்றவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை” என்று திருப்பி கேட்கிறாள். அவன் பிரேக் போடும்போது உன் மார்புகள் அவனுக்குப் படாதா எனக் கேட்டால், “பட்டால் என்ன தவறு” என்று என்னைத் திருப்பிக் கேட்கிறாள்.
ஒரு ஆணின் ஸ்பரிசம் மார்புகளின் மீது படும் போது பெண்ணின் பாலுணர்வு கிளர்ந்தெழும் எனச் சொல்லப் படுகிறதே எனக் கேட்டால், “உயிரோடு இருந்தால் தானே உணர்வுகள் கிளர்ந்தெழும். உன்னைத் திருமணம் செய்து கொண்ட நாளன்றே என் உணர்வுகளெல்லாம் செத்துப் போய் விட்டது” என்று கூறுகிறாள். ஊரே சிரிக்கிறது. என்ன செய்வது?
முப்பத்தைந்து வயதான கணவர் கூறுகிறார். என் மனைவியின் அலுவலகம் மாலை ஆறு மணியுடன் முடிகிறது. அங்கிருந்து முக்கால் மணி நேரத்தில் வந்து விடலாம். ஆயினும் என் மனைவி எட்டு மணிக்குத் தான் வீட்டிற்கு வருகிறாள்.
வாய் திறந்து கேட்டாலே, என்ன? சந்தேகமா? என்று சண்டைக்கே வருகிறாள். மூச்சு விட முடியவில்லை. வெளியில் தெரிந்து விடக்கூடாதே என நான் அடக்கி வாசிக்கும் போது என் மனைவியே இறைந்து பேசி, ஊரைக் கூட்டுகிறாள். நான் தினமும் தற்கொலையைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.
வேறொரு கணவர் கூறுகிறார். என் காதலனை என்னால் மறக்க முடியாது. அவனுடன் வாழ்வதைக் கைவிட முடியாது. விருப்பப் பட்டால், நீயும் என்னுடன் வாழலாம். இல்லா விட்டால் சந்தோசமாகப் பிரிந்து விடலாம் என்று என் மனைவி கூறுகிறாள். பள்ளிக்குச் செல்லும் வயதில் இரண்டு குழந்தைகள் எங்களுக்கு உள்ளன. நான் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன்.
இனியொரு கணவர் கூறுகிறார். நான் காதலனுடனும் வாழ்க்கை நடத்துவேன். நீயும் என்னை விட்டுப் பிரிந்து போகக் கூடாது. இதற்கு இடையூறு செய்தால், என் மரணத்திற்கு கணவனின் கொடுமை தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டுக் குழந்தையைக் கொன்று விட்டு, நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மனைவி மிரட்டுகிறாள்.
இப்படிப்பட்ட பெண்ணோடு சேர்ந்து வாழாதே. உன்னைக் கொலை செய்து விடுவாள். உடனே தப்பித்து ஓடி விடு என்று மற்றவர்கள் கூறுகிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்.
வேறொரு கணவர் கூறுகிறார். என் மனைவி முதலில் என் தம்பியுடன் பழகினாள். அதனால், தனிக்குடித்தனம் போனேன். போன இடத்தில் அடுத் திருந்த வீட்டில் வசித்துக் கொண்டிருந்த ஒரு பையனோடு தொடங்கி விட்டாள். அதனால், தனி வீடாகப் பிடித்து குடியேறினேன். அங்கே போன ஒரே மாதத்தில் வீட்டின் உரிமையாளரோடு பழக்கத்தை உருவாக்கி விட்டாள். அவர் பகல் நேரத்தில் வந்து போய்க் கொண்டிருக்கிறார். என்னால் சகிக்க முடியவில்லை.
கள்ளக் காதலை உருவாக்கிக் கொள்வதில் கைதேர்ந்த பெண்ணை மனைவியாகப் பெற்றுள்ள ஆண்கள் ஒட்டு மொத்தமாக சமூகத்தையே சாடுகிறார்கள். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டை, கள்ளக் காதலுக்கான பொற்காலம் என்று வர்ணிக்கிறார்கள். கைபேசிகளும், கணிணிகளுமே அந்தப் பெருமைக்கான காரணமென்று புலம்புகிறார்கள்.
பெண்ணின் காமத்தைத் தணிக்கத் தெரியாத தங்கள் அறியாமையை விட்டு விட்டு, இன்றைய புதுமைப் பெண்ணுக்குள்ள பல்வேறு வாய்ப்புக்களைப் பற்றிச் சாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கள்ளக் காதலில் ஈடுபடும் பெண்களோ, நான் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். அப்போது என் காதலர் மிகவும் வாஞ்சையாகப் பேசினார். அதனால் காதல் உருவாகி விட்டது. அதன் பின் என்னால் காதலனை மறக்க முடியவில்லை என்றே கூறுகிறார்கள். ஆனால், இது தன்னுடைய செயலை நியாயப் படுத்திக் கொள்வதற்காகச் சொல்லப் படுகின்ற பொய்.
அதே போல கள்ளக் காதலுக்குப் பணம் தான் காரணம் என்கிற கருத்தும் நிலவிக் கொண்டிருக்கிறது. ஆனால் கள்ளக் காதலுக்குப் பணம் முதன்மையான காரணமல்ல. தணிக்கப் படாத காமமே காரணம்.
முதலில் தணிக்கப் படாத காமம் காரணமாகக் கள்ளக் காதல் ஏற்படுகிறது. அதன் மூலம் கணவன் அல்லாத ஆணின் உள்ளங் கவர்ந்த பெண்ணாக கள்ளக் காதலி உருவாகி விடுகிறாள்.
தன் உள்ளங் கவர்ந்த பெண்ணுக்கு அனைத்தையும் அள்ளி வழங்குவது ஆணின் மரபணு போடுகிற வித்தை. அதனால் பணப்பரிவர்த்தனை துவக்க மாகிறது. ஆகவே, கள்ளக் காதலை உருவாக்கியதற்காகச் சொல்லப் படுபவை அனைத்தும் சாக்குப் போக்குகள்.
இங்கே ஒரு கதை நினைவிற்கு வருகிறது. ஒரு கப்பல் ஆறாயிரம் பயணிகளோடு அமெரிக்காவிலிருந்து இந்தியா நோக்கிப் புறப்பட்டது. பயணிகளிடையே பதினெட்டு வயதுடைய அழகிய பெண் ஒருத்தியும் தனியாகப் பயணிப்பதைக் கப்பலின் தலைவர் காண நேர்ந்தது.
முதல் நாள் அவளைப் பார்த்து புன்முறுவலித்தார். அவளும் புன்னகை புரிந்தாள்.
அடுத்த நாள் அவளோடு பேச்சுக் கொடுத்தார்.
அதற்கடுத்த நாள் சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்று, தின் பண்டங்கள் வாங்கிக் கொடுத்தார்.
அதற்கு மறுநாள் தன்னுடைய அறைக்கே அழைத்துச் சென்று, விருந்து கொடுத்து அனுப்பினார்.
அதற்கடுத்த நாளும், அவளைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், திருப்பி அனுப்பவில்லை.
கப்பலின் தலைவரோடு அவருடைய அறையில் தங்கிய அந்தப் பெண் கப்பல் இந்தியாவை நெருங்கிய போது தான் தன் இருப்பிடத்திற்கு வந்தாள்.
அப்போது அவளுடைய சக பயணிகள் அவளை ஏளனமாகப் பார்த்தார்கள். சிறிய பெண், முதியவனோடு போய்ப் பல நாட்கள் தனியாகத் தங்கி விட்டு வந்திருக்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லயா? என்று சிலர் வாய் விட்டே கூடக் கேட்டு விட்டனர்.
அப்போது அந்தப் பெண் சொன்னாள். “எனக்கு வேறு வழி தெரியவில்லை. சக பயணிகளான உங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே நான் அவருடன் தங்கினேன்” என்றாள்.
எல்லோருக்கும் அதிர்ச்சி.
என்ன உளறுகிறாய்? உன் நடத்தைக்கும் எங்கள் உயிருக்கும் என்ன சம்பந்தம்? என்று அவர்கள் கேட்டனர்.
பெண் சொன்னாள். “ஆம். என்னுடன் வந்து தங்கா விட்டால், அட்லாண்டிக் சமுத்திரத்திலேயே கப்பலை மூழ்கடித்து பயணிகள் அனைவரையும் கொலை செய்து விடுவேன் என்று கப்பலின் தலைவர் என்னை மிரட்டினார். ஆகவே, உங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக, என்னையே நான் தியாகம் செய்ய வேண்டி வந்தது” என்றாள்.
தங்கள் செயலை நியாயப் படுத்துவதற்காக, இது போன்ற காரணங்களைத் தான் ஒவ்வொருவரும் கூறுவார்கள்.
கணவன் குடிக்கிறான்; சந்தேகப் பட்டான்; அல்லது பணமீட்டு வதில்லை; அடிக்கிறான்; அல்லது ஆண்மையற்றவன்; அல்லது கள்ளக் காதலில் ஈடுபட்டிருக்கிறான்; அல்லது மாதக் கணக்கில் தொடுவதே இல்லை என்பன போன்ற காரணங்கள் அனைத்தும் சாக்குப் போக்குகள்.
கள்ளக் காதலுக்கான முழு முதற் காரணம், தணிக்கப் படாத காமம்.
மேலும் கள்ளக் காதலில் ஈடுபடும் பெண்கள் தங்கள் கணவனின் மீது கொண்டுள்ள அன்பைக் காட்டிலும் கள்ளக் காதலனின் மீது ஏராளமான அன்புடன் இருப்பார்கள். ஏனெனில், எந்தக் கள்ளக் காதலனும் மனைவியை வதைப்பதைப் போல், கள்ளக் காதலியை மனோ ரீதியாக வதைப்பதில்லை.
கூடியிருப்பதே கொஞ்ச நேரம். ஆகவே, கொஞ்சலுக்கும், குலாவலுக்குமே நேரமில்லாத போது, சண்டையிட்டுக் கொள்ள, அங்கே வாய்ப்பே இல்லை. மேலும், கேட்காமலே ஆணுக்குரியவை அனைத்தும் கிடைத்து விடுவதால், கள்ளக் காதலியின் பெற்றோரைத் திட்டுவதற்கான வாய்ப்பும் ஏற்படுவதில்லை.
மேலும், அவளுடைய குழந்தையை அடித்ததற்காகக் கள்ளக் காதலியைத் திட்டுவதற்கோ, சமையலின் சுவை பற்றிக் குறை கூறுவதற்கோ கூட அங்கே எவ்வித வாய்ப்புக்களும் இல்லை.
அது தவிர காதலனின் தாய் மூலமாக மாமியாரின் தொல்லைகளும் இல்லை. ஆகவே, கள்ளக் காதலியின் மனதைக் காயப்படுத்தும் எந்தச் செயலும் கள்ளக் காதலனால் நிகழ்வதில்லை. மேலும், கள்ளக் காதலில் பெண்ணாக விரும்பியே பாலுறவில் ஈடுபடுகிறாள். அதனால், அவளே அனைத்தையும் துவக்குபவளாக இருக்கிறாள்.
தன்னுடைய காம உணர்வைக் கண்டு, கள்ளக் காதலன் தவறாக நினைத்துக் கொள்வானோ, சந்தேகப் பட்டு விடுவானோ, என்கிற அச்சம் துளியளவும் ஏற்படுவதில்லை. ஒருக்கால், “இதையெல்லாம் எங்கே கற்றுக் கொண்டாய்” எனக் காதலன் கேட்டு விட்டாலும் கூட, கணவன் தான் கற்றுக் கொடுத்ததாகக் கூறித் தப்பித்துக்கொள்ள ஒரு வாய்ப்பிருக்கிறது. அதனால் காதல் விளையாட்டுக்களில் அவள் தன்னுடைய விருப்பம் போல் விளையாடுகிறாள்.
மனமுவந்த பங்கேற்பால், அவளுடைய உடலில் நிகழ வேண்டிய உச்ச கட்ட பாலின்பங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அதனால், அவளுடைய காமம் தணிக்கப் படுகிறது. ஆகவே, காமத்தைத் தணித்துக் கொள்ளக் காரணமாயிருந்த கள்ளக் காதலனின் மீது ஏராளமான அன்பு ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான், கள்ளக் காதலின் சுவை அறிந்த பின், ஒரு பெண்ணால் அந்தப் பழக்கத்தை எளிதில் விட முடிவதில்லை.
சூழ்நிலை காரணமாகக் கள்ளக் காதலனை நிரந்தரமாகப் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டால், உடனுக்குடன் புதியவன் ஒருவனைக் கள்ளக் காதலனாக உருவாக்கி விடுவாள். இதன் காரணமாகத் தான் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கள்ளக் காதலர்கள் உருவாகி, கொலை வரை கூட செல்கிறது.
மேலும், கல்வி, பணம், சமூக மதிப்பு, ஆணின் தோற்றம் போன்ற தகுதிகளின் அடிப்படையில் கள்ளக் காதல் உருவாவதில்லை. ஏனெனில் பாலின்ப ஆற்றாமை என்கிற நோயால் பாதிக்கப் படும் மூளை தன்னுடைய பகுத்தறியும் திறனை இழந்து விடுகிறது.
கள்ளக் காதலில் ஈடுபடுவது உட்ச பட்ச போதையைத் தரக் கூடியது. பழகி விட்டால் எளிதில் விட முடியாது. மது போதையை விடக் கொடிய போதையான கொகேய்ன் போதையைப் போன்ற போதையைக் கொடுப்பது கள்ளக் காதல்.
தன்னைச் சுற்றியே பைத்தியமாக அலையச் செய்யும் வல்லமை மிக்கது கொகேய்ன் போதை. அதில் சிக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்களால் எளிதில் மீள முடிவதில்லை. அதைப் போன்ற போதையைக் கள்ளக் காதலும் தருவதால், கள்ளக் காதலை உருவாக்கக் கற்றுக் கொண்டவர்களால் எளிதில் அந்தப் பழக்கத்திலிருந்து மீள முடிவதில்லை.
குடும்ப நிம்மதி, குழந்தைகளின் எதிர்காலம், மதிப்பு மரியாதை, தன் முதுமைக் காலம் என எதைப் பற்றியும் கவலைப் படாதது கள்ளக் காதல், அதனால், போதைகளிலேயே அனைத்தையும் அழித்தொழிப்பதில் முதலிடம் வகிக்கின்ற போதை தான் கள்ளக் காதல். இந்த போதைக்கு ஆளாகி விட்டால், குடும்ப வாழ்க்கையே அழிந் தாலும் சரி, குழந்தைகளின் எதிர்காலம் பாழானாலும் சரி, இளமை இருக்கும் வரை மீள முடியாது. ஆகவே, பாழும் கிணற்றில் விழும் முன், ஆயிரம் முறை யோசிப்பது நல்லது.
கள்ளக் காதல் போன்ற அனுபவத்தை எதிர் கொள்ளாத கணவர்கள் கூடக் கை நிறையச் சம்பாதிக்கின்ற நிலையிலும், நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்க வில்லை. தங்கள் திருமண இணையைத் தேர்வு செய்த போது தவறு செய்து விட்டதாக, இருபதாண்டுகள் வாழ்ந்த பின் பல கணவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இங்கே ஒரு தகவலை மறைக்காமல் சொல்ல வேண்டியது மிகவும் அவசியம்.
ஆண்களுக்கு அழத் தெரியாது என்றொரு கருத்து நிலவுகிறது. அது பொய். ஏனெனில், ஆணுக்கு இணையாக எந்தவொரு பெண்ணாலும் அழ முடியாது என்று கூறும் அளவிற்கு, இன்றைய குடும்பத் தலைவர்களில் பலர் அழுது கொண்டிருக்கிறார்கள்.
கணவர்களின் தவறான அணுகு முறைகள்
மனைவியின் பிடாரித்தனம் குறித்துப் புலம்பியழுகிற ஆண்களிடம் பேசும் போது, பொதுவான கருத்தொன்று தெரிய வருகிறது. அவர்கள் அனைவருமே மனைவியை பொருளாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பாலுறவை தூக்க மாத்திரையாகவே அவர்கள் உபயோகித்திருக்கிறார்கள். பாலுறவிற்குப் பின் மனைவி உறங்கி விட்டாளா எனப் பார்த்ததில்லை. மனைவியை உறங்க வைப்பது தங்களுடைய கடமை என்பதை உணர்ந்திருக்கவில்லை. தனக்குரிய உறக்கத்தை வழங்குகின்ற கருவியாகவே மனைவியைப் பாவித்திருக்கிறார்கள்.
முன் விளையாட்டுக்கள் பற்றி, முக்கிய விளையாட்டுக்கள் பற்றி, தீவிர விளையாட்டுக்கள் பற்றி, பின் விளையாட்டுக்கள் பற்றி, பெண்ணின் உடலமைப்புப் பற்றி, பெண்ணின் பாலுணர்வு மையங்களைப் பற்றி அவர்கள் கடுகளவு கூட அறிந்திருக்கவில்லை.
பாலுறவிற்காக பத்து நிமிடங்களுக்கு மேல் அவர்கள் ஒதுக்கியதேயில்லை. பத்தே நிமிடங்களிலெல்லாம் பெண்ணுக்குரிய இன்பம் நிகழாது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
சராசரி ஆணிடம் மலிந்து கிடக்கிற அதே அறியாமை இவர்கள் அனைவரிடமும் மலிந்திருக்கிறது.
புணர் புழை வேறு, சிறுநீர் துவாரம் வேறு. பெண்ணின் பாலுறுப்பு வேறு. என்கிற தகவலைக் கூட அறிந்து கொள்ளாமலே இருபதாண்டுகள் குடும்ப வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.
ஆணின் விந்து வெளியேற்றமும், உச்சகட்ட இன்பமும் ஒன்று என்றே கருதுகிறார்கள். மனைவிக்குரிய பாலின்ப சுகங்களை பற்றி அவர்கள் சிந்தித்ததே இல்லை.
ஆணை விடப் பத்து மடங்கு கூடுதலாகப் பெண்ணைத் துடிக்கச் செய்கின்ற, இன்பக் கதறலில் ஈடுபடச் செய்கின்ற பாலின்ப சுகங்கள் மனைவிக்கு உண்டு என்கிற தகவலை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
மனைவியைத் தாய்மையுறச் செய்ததே அவர்களுடைய ஆண்மைக்கான அடையாளமாகக் கருதுகிறார்கள்.
குழந்தை பிறந்த ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், பெரும்பாலும் மனைவியை வற்புறுத்திப் பணிய வைத்திருக்கிறார்கள்.
தவறான அணுகுமுறை என்பது தெரியாமல், மனைவியின் உறக்கத்தைக் கலைத்து பாலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பாலுறவில் ஈடுபட மறுத்தபோது, குடும்ப விவகாரச் சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். தொடர்ந்து பேசாமல் இருந்திருக்கிறார்கள். உணவருந்த மறுத்திருக்கிறார்கள். மனைவியின் செலவிற்குப் பணம் தர மறுத்திருக்கிறார்கள்.
வெளியில் அழைத்துச் செல்ல மறுத்திருக்கிறார்கள். விழாக்களுக்கு உடன் செல்ல மறுத்திருக்கிறார்கள். வாங்கிக் கொடுத்ததைச் சொல்லிக் காட்டி ஏசியிருக்கிறார்கள். வளர்த்த விதம் சரியில்லை என்று மனைவியின் பெற்றோரைக் குறை கூறியிருக்கிறார்கள். இவ்வாறாகப் பல்வேறு வழிகளில் மறைமுகமாக மனைவியோடு ஒத்துழைக்க மறுத்திருக்கிறார்கள்.
குடும்பத்தைத் துறந்து செல்ல முடியாத, குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டுமே என்கிற மனைவியின் நிர்க்கதியான நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்தியிருக்கிறார்கள்.
குடிப்பது, அடிப்பது இல்லையென்றாலும், மனோ ரீதியாக தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டி, பாலின்பத்தை அனுபவித்திருக்கிறார்கள்.
பாலுறவு சுகத்தைப் பெறுவதற்காக எல்லா வகையான போர்த் தந்திரங்களையும் பயன் படுத்தியிருக்கிறார்கள்.
வன்பாலுறவிலும் அவ்வப்போது ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஒரே வரியில் சொன்னால், பாலுணர்வுள்ள உயிரினமாகத் தங்கள் மனைவியை இவர்கள் நடத்தவே இல்லை.
குழந்தைகள் தானாகப் பல் துலக்கி, பள்ளிக்குச் செல்லும் வரை, மேற்கண்ட சூழல் நிலவியிருக்கிறது. குழந்தைகளின் பராமரிப்பிற்குக் கணவனின் பங்கு தேவையில்லை என்கிற சூழல் உருவானதும், நிலைமை மாறி விட்டது. தன்னை போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணவனோடு, மல்லுக்கு நிற்க, மனைவியும் தயாராகி விட்டாள்.
அவ்வாறு மல்லுக் கட்டிய போது தான், கணவன் அடங்கியிருக்கிறான். ஆனால், அவன் அடங்கினாலும் இப்போது மனைவி விடுவதாக இல்லை. தான் வாங்கிய அனைத்தையும் திருப்பித் தரத் தொடங்குகிறாள்.
திருமணமான முதல் இருபதாண்டுகளில் கணவன் தன் மனைவிக்கு எதையெல்லாம் வழங்குகிறானோ, அவையனைத்தும் இம்மி பிசகாமல், அடுத்த இருபதாண்டுகளில் கூட்டு வட்டியோடு அவனுக்கு திருப்பி வழங்கப்படும் என்பது பழைய மொழி.
ஆனால் கணவனால் வழங்கப் பட்டவை அனைத்தும் குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே, பன்மடங்காகத் திருப்பிச் செலுத்தும் படலம் துவங்கி விடும் என்பது தான், இன்றைய உண்மையாக இருக்கிறது. பெண்களுக்கான சிறப்புச் சட்டங்கள் அதற்கான காரணங்களில் ஒன்று.
தன்னைக் கொடுமைப் படுத்தியவர்களுக்கு அதே கொடுமையைத் திருப்பிக் கொடுக்கும் போது, இரக்கம், கருணை, பரிதாபம், மனிதாபி மானம், நன்றி போன்ற உணர்ச்சிகள் எல்லாம் மனித மனதிலிருந்து விடை பெற்று விடுகிறது.
ஏனெனில், மனிதர்களின் ஆழ்மனம் உணர்ச்சிகளிடையே வித்தியாசத்தைப் பார்க்கக் கூடிய திறனற்றது. ஆகவே, கணவனைப் பழியெடுக்கும் விவகாரத்தில் பெண்ணின் ஆழ்மனம் இரக்கம் காட்டுவதில்லை.
பாலின்ப ஆற்றாமை என்னும் நோய் ஒரு பெண்ணைப் பிடாரியாக மட்டுமல்ல, கொலைகாரியாகக் கூட மாற்றும் வல்லமை மிக்கது.
கணவனைக் கொலை செய்த மனைவியைப் பற்றியும், குழந்தையைத் தண்ணீர்த் தொட்டிக்குள் மூழ்கடித்துக் கொலை செய்த தாயைப் பற்றியும், எத்தனையோ செய்திகளைப் படிக்கிறோமல்லவா?
அவையெல்லாம் பெண்களைப் பீடித்திருந்த பாலின்ப ஆற்றாமை என்கிற மன நோயின் ருத்ர தாண்டவங்கள்.
அதேபோல, தன் மனைவியைத் தானே கொலை செய்த, அல்லது ஆள்வைத்துக் கொலை செய்த கணவனைப் பற்றியும், தன் குழந்தைகளைத் தானே கொலை செய்த தந்தையைப் பற்றியும், தன் ஆணுறுப்பைத் தானே அறுத்தெரிந்த ஆணைப் பற்றியும் கூட செய்திகள் வருகிறதல்லவா?
அவையெல்லாம் ஆடவனைப் பீடித்த பாலின்ப ஆற்றாமை நோயின் ருத்ர தாண்டவங்கள்.
மேலும், இரயில் முன் பாய்ந்து அற்பாயுளில் கணவன் செத்துப் போவதும், தீயில் குளித்து ஒரு குடும்பத்தலைவி தன் உடலின் வெம்மையை நிரந்தரமாகத் தணித்துக் கொள்வதும் கூட, அதே பாலின்ப ஆற்றாமை என்கிற நோயின் உட்சபட்ச ருத்ர தாண்டவங்களே.
பாலின்ப ஆற்றாமையே தற்கொலைக்கான முழு முதற் காரணம்.
பெண்ணும் பாலுணர்வுள்ள ஒரு உயிரினமே.
ஒரு பெண் கூறுகிறார். என் கணவனை என்னிடம் நெருங்க விடவே அஞ்சுகிறேன். ஏனெனில், சிறிது நேரம் சரச சல்லாப விளையாட்டுக்களில் ஈடுபடலாம் என்றெண்ணி, நெருங்க விட்டால் கூட, அதை உடனடி உடலுறவாக மாற்றவே கணவன் முயற்சிக்கிறான்.
நேரிடையாகப் பாலுறவில் ஈடுபடுவதன் மூலம் எனக்குரிய இன்பங்கள் எதுவுமே நிகழாது என்பது எனக்குத் தெரியும். இயந்திரத்தனமான பாலுறவால் என் மனநிலை மாசடைவதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.
மேற்கண்ட தகவலைச் சொன்னாலும் என் கணவனுக்குப் புரிவதில்லை. அதனால் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விடாத அளவிற்கு மட்டுமே என்னை அண்ட விடுகிறேன்.
பாலுறவு என்பது உடல் மூலமாக அன்பைப் பரிமாறிக் கொள்ளும் செயல். ஆனால், அன்பேயில்லாத இயந்திரத்தனமான பாலுறவு தான், பாலுறவே இல்லாத வாழ்க்கையை நோக்கிப் பெண்ணைத் தள்ளுகிறது.
எந்த அளவிற்கு போகப் பொருளாக மனைவி பயன்படுத்தப் படுகிறாளோ, அதற்கேற்ப, அவள் பாலுறவின் மீது வெறுப்படைகிறாள். மோசமான பாலுறவை காட்டிலும், பாலுறவே இல்லாமல் வாழ்வதையே ஒரு பெண்ணின் உடலும் மனமும் விரும்புகிறது.
மேலும், கணவனின் உடற் பசிக்கான தீனியாக மட்டுமே தன்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கணவனின் மீது மனைவியின் ஆழ் மனம் பெருங் கோபத்தில் இருக்கிறது. அதனால் தான், பாலுறவு விளையாட்டில் ஈடுபட மனைவி மறுக்கிறாள்.
இந்த மறுப்பைச் சந்திக்கின்ற ஆண்கள், தங்கள் மனைவிக்குப் பாலுணர்வு மிகவும் குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள்.
எனினும் அதே ஆண்கள் பொதுக் கருத்தாகச் சொல்லும் போது, இன்றைய கால கட்டத்தில், பெண்களின் பாலின்ப ஆர்வம் கூடியிருப் பதாகவே தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய முரண்பட்ட கருத்தின் வாயிலாக, அவரவர் மனைவியைத் தவிர பிற பெண்களெல்லாம் பாலுணர்வு மிக்கவர்கள் என்று சொல்கிறார்கள்.
பாலுறவில் ஈடுபடுவதே என் மனைவிக்குச் சுத்தமாகப் பிடிக்காது என்று சொல்லப் படுவது எப்படிப் பட்ட கருத்தென்றால், என் மனைவிக்கு நல்ல உணவு பிடிக்காது, பட்டுச்சேலைகள் கட்ட, பிடிக்கவே பிடிக்காது, நகைகளை அணிய பிடிக்காது, வைர நகைகள் அறவே பிடிக்காது, சுற்றுலா செல்வதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது, அரட்டையடித்தல் பிடிக்கவே பிடிக்காது என்று சொல்வதைப் போன்றது.
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும், பாலுறவால் உருவானவை, அந்த உயிரினங்களின் உணவும் கூட பாலுறவால் உருவானதே.
தாவர உணவுகள் மகரந்தச் சேர்க்கையால் விளைந்தவை.
மாமிசமும், பாலும் பாலுறவின் நேரிடையான விளை பொருட்கள்.
ஆகவே, அந்த உணவுப் பொருட்களை உண்ணும் போது, உண்பவர்கள் உடலில் பாலுணர்வு உருவாகியே தீரும்.
மேலும், நகச்சாயம் பூசி விரல்களை அலங்கரிப்பது முதல், தலையில் பூ வைப்பது ஈறாக, கவர்ச்சியான ஆடையைத் தேர்ந்தெடுப்பது வரையிலான பெண்ணின் மிகையலங்காரம் அனைத்துக்கும் காரணம் பாலின்ப ஆர்வம்.
மனைவியாக மாறிய உடனே, அந்த ஆர்வம் அற்றுப் போகாது.
அதோடு, சின்னத் திரை, திரைப்பட காட்சிகள், வசனங்கள், பாடல்கள், வார, மாத இதழ்கள், காதல் நவீனங்கள், தினசரிகளில் வரக் கூடிய கள்ளக் காதல் விவகாரங்கள், அண்டை அயலில் நடைபெறும் திரை மறைவுக் காரியங்கள், நண்பனின் மோகனப் புன்னகை, பயன் படுத்திக் கொள்ள விரும்பும் ஆணின் பசப்பல்கள் எனப் பல்வேறு தாக்கங்களால், பெண்ணின் பாலுணர்வு தூண்டப் படுகிறது.
பெண்ணின் மடந்தைப் பருவம் தான் கன்னிக் காதல் உருவாகும் பருவம்.
கவனம் தவறினால், கல்வியை நாசப் படுத்திக் கொள்ளும் ஆபத்து மடந்தைக்கு உண்டு.
அதே போல, பெண்ணின் பேரிளம் பருவம் இரண்டாம் காதல் உருவாகும். பருவம். இதை இரண்டாம் இளமை என்று கூறுவர்.
பதினெட்டு வயது ஆணுக்குரிய ஆர்வமும், துணிச்சலும் பேரிளம் பெண்களுக்கு இருக்கும் என உலகப் புகழ் பெற்ற ஒரு ஆய்வாளர் தன் நூலில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பாலுணர்வை உருவாக்கக் கூடிய வேதி பெண்ணின் உடலிலும் சுரக்கிறது. அதோடு, கருமுட்டையின் பருவ காலமான மாதவிடாய்க் காலத்தின் பத்தாம் நாள் முதல் பதினாறாம் நாள் வரை பெண்ணின் காமம் தன்னுணர்வின்றி பெருமளவில் அதிகரிக்கும். ஆணின் காமத்தைக் கூடத் தோற்கடிக்கும் அளவிற்குத் தறிகெட்டுக் கிளம்பி விடும்.
அந்த நேரத்தில் அடையாளமே தெரியாத ஆணுடன் கூட பெண் இணை சேர்ந்து விடுவதாகவும், அதன் பின் இது எவ்வாறு நிகழ்ந்தது என அந்தப் பெண்ணே குழம்பித் தவிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
காமம் தணிக்கப்படாத போது ஒரு சராசரி மனிதனின் சிந்தனை மிருக சிந்தனையாக மாறத் தொடங்கும். இத்தகவல் பெண்ணுக்கும் பொருந்தும்.
மேலும், இயற்கையான உணர்வுகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததான காமம் தணிக்கப்படாத போது, மனிதப் பிறவியின் எண்ணங்கள் நச்சுத் தன்மையுடையதாக மாறும். அதனால், மனநிலை சீற்றமுடையதாக மாறும். சிந்தனை எதிர் மறையாகும். இந்த உண்மையும் பெண்ணுக்குப் பொருந்தும்.
மேலும், பெண் என்பவள் மரக்கட்டை அல்ல. உணர்வுகளும், உணர்ச்சிகளும் கொண்ட ஒரு மனித உயிரினமே. ஆகவே என் மனைவிக்குப் பாலுணர்வு குறைவு என்று சொல்வது மகா அபத்தம்.
இப்படிச் சொல்பவர்களின் மனைவி தான், பெரும்பாலும் கள்ளக் காதல் என்கிற படுகுழியில் விழுந்து விடுகிறாள்.
“உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூஉர் வது.”
என் காதலன் பிரிந்து செல்கிறான். உடனே என் உடல் நிறம் மாறி வெளிறிப் போகிறது. என் ஏக்கத்தைப் பறைசாற்றும் இந்தப் பசலை நிறத்திற்கு இவ்வளவு அவசரமா? என்று ஒரு திருக்குறள் பெண் புலம்புகிறாள்.
ஆகவே, ஒவ்வொரு பெண்ணுக்கும் பாலுணர்வு உண்டு. ஆனால் பெரும்பாலான பெண்களின் காமம் தாம்பத்ய வாழ்வில் தணிக்கப் படுவதில்லை.
அவ்வாறு, போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப் பட்ட பின், தணிக்கப்படாத காமத்தோடு உறங்கச் சென்ற காரணத்தால் தான், தன்னுணர்வற்ற நிலையிலே கணவனின் பரம விரோதியாக மனைவி மாறிப் போகிறாள். அதன் காரணமாகவே கணவன் பழியெடுக்கப் படுகிறான்.
அவனை நேரிடையாகத் தாக்க முடியாத காலத்தில் மறைமுகமான வழிகளிலும், நாட்படும் போது சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் மனைவியின் சீற்றம் வெளிப் படத் தொடங்குகிறது.
தணிக்கப் படாத காமத்தால் உருவாகும் சீற்றத்தை வெளிப்படுத்த மனைவிக்கு வாய்ப்பே அமையாத போது, வலுக்கட்டாயமாகக் கணவனோடு பேச்சுக் கொடுத்து, சீற்றத்திற்குரிய சூழல்களை உருவாக்குகிறாள். கணவனோடு உருவாக்க முடியவில்லையா? மாமியாரோடு உருவாக்குவாள்.
மாமியார் அருகிலேயே இல்லையா? இருக்கவே இருக்கிறது குழந்தை. எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத, தப்பி ஓடவும் முடியாத ஒரே உயிரினமான குழந்தையை வதைப்பதன் மூலம் தனது சீற்றத்தை வெளிப்படுத்துவதற்குரிய சூழலை உருவாக்குவாள்.
கணவனோடும், கணவனைச் சேர்ந்தவர்களோடும், குழந்தையோடும், இவர்களைத் தவிர இன்னும் செல்லுபடியாகக் கூடிய இடங்களிலும், தனது சீற்றத்தை வெளிப் படுத்துவதற்குரிய சூழல்களை உருவாக்கும் முயற்சி, தணிக்கப் படாத காமத்தோடு உறங்கச் சென்ற மனைவியால், சுய உணர்வின்றி மேற்கொள்ளப் படுகிறது.
மேற்கண்ட தகவலை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க முடியும்.