உறவில் சிக்கலை உருவாக்குவது ஒரு மன நோய்.
செல்வந்தர் ஆகும் பயணத்தைத் தொடங்கிய பின் இந்த மன நோயால் தாக்கப்பட்டு, முகவரியற்ற மனிதராய் முடங்கிப் போன திறமைசாலிகள் ஏராளம்.
இந்த மன நோய் தாக்கினால், மூளையின் பெரும் பகுதியை அந்த நோய் தரும் வலியே ஆக்ரமித்துக் கொள்ளும். அதனால், சிந்தனா சக்தியின் கூர்மை மழுங்கி மனிதரின் விழிப்புணர்வு குறைந்து விடும்.
மனிதரின் விழிப்புணர்வு குறைந்து விட்டால், இருப்பதைத் தக்க வைப்பதே சிரமம். செல்வந்தராக உருவாகும் பயணத்தைப் பற்றி யோசிக்கக் கூட முடியாது.
உறவுச் சிக்கலுக்கு எது காரணம்? மற்றவர் உங்களை விமரிசிக்கிறார். அல்லது நீங்கள் மற்றவரை விமரிசிக்கிறீர்கள். விமரிசனத்தால் மனம் காயப்படுகிறது. அக்காயமே உறவுச் சிக்கலை உருவாக்குகிறது. இது தான் பொதுவான கருத்து.
இது சரியான கருத்தா? அல்லது எந்த உறவிலும் சிக்கல் ஏற்பட நாம் மட்டுமே காரணம். மற்றவர் என்பவர் நம் மனைவியாகவே இருந்தாலும், அல்லது நம் எதிரியாகவே இருந்தாலும், உறவுச் சிக்கலுக்கு மற்றவர் காரணம் அல்ல என்று புத்தர், ஏசு, கருத்தினர் போன்றோர் கூறுகிறார்களே. இது சரியான கருத்தா?
எது சரியான கருத்து?
உறவுச் சிக்கலுக்கு யார் காரணம்? அல்லது எது காரணம்? அல்லது உறவில் எவ்வாறு சிக்கல் உருவாகிறது?
உங்கள் மனதுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால், உங்கள் வெளியுலகில் பிரச்சினை இருக்குமா?
உதாரணமாக, உங்கள் மனைவியைப் பற்றி மோசமான கருத்து எதுவும் உங்கள் மனதில் இல்லாவிட்டால், மனைவியோடு சண்டை போட உங்களால் முடியுமா?
அல்லது உங்கள் கணவனைப் பற்றி மோசமான கருத்து எதுவும் உங்கள் மனதில் இல்லாவிட்டால், உங்கள் கணவரோடு உங்களால் சண்டை போட முடியுமா?
உங்கள் கணவர் அல்லது மனைவி வம்புக்கே நிற்கிறார். ஆனாலும் அவரை ஒரு குழந்தையாகவே நீங்கள் கருதுகிறீர்கள். அந்த நிலையிலும் உங்கள் இணையோடு போரிட உங்களால் முடியுமா?
சண்டை என்பது என்ன? ஒருவருடைய செயலையோ, கருத்தையோ உங்களால் ஏற்க முடியவில்லை. அதனால் அவர் மீது உங்கள் மனதில் வெறுப்பு உருவாகிறது.
அந்த வெறுப்பு எதிர்ப்பாய் வெளிப்படுகிறது. அது தான் சண்டை. கணவன் மனைவி சண்டை அவர்களுக்கு இடையே இருக்கும் அன்பின் அடையாளம் என்று சொல்வோர் இருக்கிறார்கள்.
சமூகத்தைத் தவறாக வழி நடத்தும் அபத்தமான கருத்து இது.
இக்கருத்தை ஏற்றுக் கொண்டால், “கூலிப்படை” வைத்துக் கணவனைக் கொல்வது, மனைவியைக் கொல்வது எல்லாம் அன்பின் உச்சம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே, கொஞ்சம் அறிவுபூர்வமாகவே நாம் சிந்தனை செய்வோம்.
உங்கள் மனைவியின் செயலொன்று உங்களைப் பாதிக்கிறது. அப்பாதிப்பால் உங்கள் மனைவியைப் பற்றி ஒரு கருத்து உங்கள் மனதுக்குள் உருவாகி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
உதாரணமாக, ஒரு விழாவுக்குச் “கோட்” போட்டுக் கொண்டு செல்கிறீர்கள். செல்லும் போது, பத்தாயிரம் ரூபாயை, “கோட்” பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்கிறீர்கள். விழா முடிந்து வந்து உங்கள் கோட்டை ஒரு இடத்தில் காற்றாடத் தொங்க விடுகிறீர்கள். ஆனால், அதில் வைத்த பணத்தை எடுக்க மறந்து விட்டீர்கள்.
அடுத்த நாள் நினைவு வந்து, பணத்தை எடுக்க முனைந்த போது பணத்தைக் காணவில்லை. அடுத்தவர் எவரும் உங்கள் வீட்டுக்கு வரவில்லை. குழந்தைகளுக்கும் “கோட்” எட்டாது.
ஆகவே, உங்கள் மனைவியைத் தவிர, வேறு எவரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பது உங்களுக்கு தெளிவாய்ப் புரிகிறது.
அந்தப் புரிதலின் அடிப்படையில், உங்கள் மனைவியோடு நீங்கள் பேச விரும்புகிறீர்கள். ஆனால் பேசவில்லை. பேசினால் சண்டை வந்து விடுமோ என்று பேசாமல் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் சில நாட்கள் கழித்து, “கோட்”டை உரிய வகையில் அதன் நிரந்தரமான இடத்தில் வைக்க முனையும் போது, கோட்டின் ஒரு பகுதியில் ஏதோ நெருடுகிறது. பார்க்கிறீர்கள்.
அது கோட்டில் இருந்த ஒரு ரகசிய பாக்கெட்.
நீங்கள் வைத்த பணம் அதில் பத்திரமாக இருக்கிறது. பணத்தைத் தேடிய நாளன்று இந்த ரகசிய பாக்கெட்டைக் கவனிக்கத் தவறியது இப்போது நினைவுக்கு வருகிறது.
உங்கள் மனைவி தான் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டார் என்று உருவாக்கி வைத்திருந்த உங்கள் கருத்து முற்றிலும் தவறானது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள்.
அதன்பிறகும் உங்கள் மனைவி குறித்த, உங்கள் கருத்தைப் பற்றி மனைவியோடு விவாதிக்க விரும்புவீர்களா?
உங்கள் உள் உலகில் இருந்த சிக்கல் தீர்ந்து விட்டதால், உங்கள் வெளியுலகில் நீங்கள் தீர்க்க வேண்டிய சிக்கல் தானாகவே தீர்ந்து விட்டது என்பது புரிகிறதா?
உங்கள் மனம் தான் உங்கள் உலகம். உங்கள் உலகில், உங்களைத் தவிர வேறு யாரும் இல்லவே இல்லை. அதாவது உடல் ரீதியாக எண்ணூறு கோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால், உள ரீதியாக உங்களைத் தவிர உங்கள் உலகில் யாரும் இல்லை. மற்றவர் என்கிற கண்ணாடியில் உங்கள் இருப்பைத் தான் நீங்கள் காண்கிறீர்கள்.
உங்கள் மனதுக்குள் எதிரிகளே இல்லையென்றால் உங்கள் புற உலகில் எதிரிகள் இருக்க மாட்டார்கள். ஆகவே மற்றவரோடு உள்ள உறவுச் சிக்கல் உங்கள் மனதில் உள்ள சிக்கல்.
மற்றவரோடு உள்ள உறவு, உங்களோடு உங்களுக்கு உள்ள உறவு.
ஆகவே எந்த உறவுச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றாலும், அதை உங்களுக்குள் தீர்ப்பதே சரியான அணுகுமுறை.
உள் உலகில் ஏற்படும் மாற்றமே புற உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
உங்கள் உள் உலகம் மாறாத வரை புற உலகம் ஒருபோதும் மாறாது.
இந்தப் புரிதலே உறவுச் சிக்கலைத் தீர்ப்பதற்கான இரகசியம்.
சரி. உள் உலகை எப்படி மாற்ற வேண்டும்?
மனதிலிருந்து காழ்ப்பு, வெறுப்பு, எதிர்ப்பு, பகை போன்ற மோசமான உணர்ச்சிகளை யார் மீது நீங்கள் கொண்டிருந்தாலும், அவற்றை உடனே வெளியேற்றி உங்கள் மனதைச் சுத்தப் படுத்த வேண்டும்.
அதன்பின், மேற்கண்ட மோசமான உணர்ச்சிகளால் மாசு அடையாதவாறு உங்கள் மனதுக்கு அரண் அமைக்க வேண்டும்.
இந்த இரண்டையும் செய்தால் போதும்.
உங்கள் வாழ்வில் உறவுச் சிக்கல் எழவே எழாது.
சரி. மோசமான உணர்ச்சிகளை மனதிலிருந்து வெளியேற்றி, மனதைச் சுத்தப் படுத்துவது எப்படி? அதன் பின், மோசமான உணர்ச்சிகளால் மாசு அடையாதவாறு மனதுக்கு அரண் அமைப்பது எப்படி?
மனதைச் சுத்தப்படுத்த வேண்டுமானால், நம் உணர்ச்சிகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, கோப உணர்ச்சி எவ்வாறு உருவாகிறது?
நாம் விரும்பியதைப் போல் மற்றவர் நடந்து கொள்ளாத போது, அல்லது நம் விருப்பத்துக்கு விரோதமாக மற்றவர் நடந்து கொள்ளும் போது, நம் மனதில் கோபம் என்கிற உணர்ச்சி உருவாகிறது.
அப்படியெனில், நம் கோபத்துக்கு மற்றவர் காரணமா? அல்லது நம் மனதில் இருந்த விருப்பம் காரணமா?
நம் உணர்ச்சிகள் எவ்வாறு உருவாகின்றன?
நம் எண்ணங்களால் நம் உணர்ச்சிகள் உருவாகிறதா?
அல்லது அடுத்தவர் செயலால் நம் உணர்ச்சிகள் உருவாகிறதா?
தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு கற்பனை.
இரவு கணவனோடு உறவாட மனைவி மறுத்து விட்டாள். கணவன் கட்டிலிலிருந்து கீழே இறங்கிப் படுத்துக் கொள்கிறான். ஆனால் அவன் உடல் அவனை உறங்க விடவில்லை.
நம்மைப் போல் தானே மனைவிக்கும் உடற் பசி இருக்கும். ஆனால், ஏன் மறுக்கிறாள்? வேறு எவனோ தீனி போடுகிறானோ? என்கிற எண்ணம் அவன் மனதில் எழுவதாக வைத்துக் கொள்வோம்.
அந்த எண்ணம் மனைவியின் மீது கோபம், சந்தேகம் போன்ற உணர்ச்சிகளை முதலில் உருவாக்கும். பிறகு காழ்ப்பு, வெறுப்பு உணர்ச்சிகளாக அது மாறும். அப்படியே அவன் தூங்கி விடுகிறான்.
எந்த உணர்ச்சியோடு உறங்கச் செல்கிறோமோ, அந்த உணர்ச்சியோடு தான் காலையில் விழித்தெழுவோம்.
உணர்ச்சிகளை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் சாதனம் உடல்.
அதனால் அந்தக் கணவனின் உடல் அடுத்த நாள் முழுவதும் கோபம், காழ்ப்பு, வெறுப்பு, சந்தேகம் போன்ற உணர்ச்சிகளை, உச்சரிக்கும் வார்த்தை, பார்வை, குரல், முகத்தின் கருமை போன்ற உடல் மொழி வாயிலாக விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கும்.
உள்ளத்தில் இருப்பதை மறைக்க உடலுக்குத் தெரியாது.
அகத்தை மறைக்க யாராலும் முடியாது.
அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தே தீரும்.
பொய் பேச உடலுக்கு அறவே தெரியாது.
கற்றுக் கொடுத்தாலும் உடலால் பொய் பேச முடியாது.
உளவியல் கற்றவராயினும் உடல் மூலம் தகவல் கசிந்தே தீரும். அதனால், அவனைச் சுற்றியுள்ள அனைவருமே உடல் மொழி மூலம் அவன் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் அவனுடைய அந்தரங்க செய்தியைக் கவனிப்பார்கள்.
கவனிப்போர் அனைவரும் சிறிதளவேனும் பாதிக்கப் படுவார்கள். அவனுடைய மனைவி நிச்சயம் பாதிக்கப் படுவாள். அந்த பாதிப்புக்கு ஏற்ப அவள் எதிர்வினை ஆற்றுவாள். குழந்தையை அடிக்கலாம். பாத்திரங்களை உருட்டலாம். அவன் பெற்றோரைத் திட்டலாம். அல்லது உணவில் சற்றே உப்பை அதிகரிக்கலாம்.
ஏற்கெனவே கோபத்தில் உள்ள கணவன், மனைவியின் எதிர் வினைக்கு ஏற்ப அதிகமாகப் பாதிக்கப் படுவான். அது ஆத்திரம் என்கிற உணர்ச்சியை அவன் மனதில் உருவாக்கும்.
ஆத்திர உணர்ச்சி ஒரு மோசமான போதை. ஆதாரம். சாத்தான் குளம்.
மதுப் பிரியர் தன் மனதில் இருப்பதை எல்லாம் உளறி விடுவார் என்று சொல்கிறார்கள். இது பொய். ஆனால், ஒருவரை ஆத்திரப் படுத்தினால், அவர் இரணகளப் படுத்தி விடுவார். நம்மைப் பற்றி அவர் மனதில் மறைத்து வைத்துள்ள கருத்துக்கள் அனைத்தையும் அவர் கக்கி விடுவார் என்பது உண்மை. ஆத்திர உணர்ச்சி ஒரு மோசமான போதை.
ஆத்திர போதைக்கு ஆளான கணவன், தன் சந்தேகத்தை அவனுக்கே தெரியாமல் கசிய விட்டு விடுவான்.
அதாவது கள்ளத் தனமாய்த் தன்னோடு உறவாடும் அடுத்தவன் மனைவியைக் கூட கற்புக்கரசி என்று கருதுவதும், தன்னோடு உறவாட மறுப்பவள் தன் மனைவியாகவே இருந்தாலும் அவள் நடத்தையைப் பழிப்பதும் ஆணின் இயல்பு.
பாலுறவுக்குப் பின் சில நாட்கள் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்ளும் என் கணவர், மறுத்தால் மட்டும், “வே…..” என்று திட்டுகிறார் என்று பல பெண்கள் என்னிடம் கூறியுள்ளார்கள்.
“வே…”என்கிற ஒரு வார்த்தை போதும்.
அவன் மனைவியும் ஆத்திர உணர்ச்சிக்குள் விழுந்து விடுவாள்.
ஆகவே, “ஆமாடா. நான் வே….. தாண்டா. கையாலாகாத நாயே” என்று தன் கணவனைப் பற்றி தன் மனதில் உருவாக்கி வைத்துள்ள கருத்தைக் கசிய விட்டபடியே பாத்திரத்தைத் தூக்கி வீசுவாள். கணவனின் ஆத்திரம் அதிகரிக்கும்.
அதனால், “யாரைப் பார்த்து என்ன சொன்னாய்? நானா கையா லாகாத நாய்? எத்தனை பேர் என் முன் கை கட்டி நிற்கிறார்கள் தெரியுமா? தெரு நாய் மாதிரி, நீ தான் அலைகிறாய். எவனிடமோ போய்த் தொலை” என்று ஏசிய படியே கையையும் நீட்டி விடுவான்.
அதன் விளைவாய் ஆறு மாதம் அவன் கை வேலை செய்ய நேரலாம்.
சில நேரங்களில் நிரந்தரப் பிரிவையும் இது உருவாக்கி விடலாம்.
இனி வேறோரு வகையில் கற்பனை செய்து பார்க்கலாம்.
எண்ணங்களை மாற்றினால் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
இது நல்ல கற்பனை. அதனால், இந்தக் கற்பனையில் உங்களையே நாயகனாக நினைத்துக் கொள்ளுங்கள்.
கேட்கிறீர்கள். மறுத்து விட்டார். வழக்கம் போல் என்னவோ செய்கிறீர்கள். அப்போது, நம்மைப் போல் தானே உடற்பசி இருக்கும். ஆனால் ஏன் மறுக்கிறாள் என்கிற சிந்தனை எழுகிறது.
விருந்தை யாரேனும் அருந்த மறுப்பரா? ஆனால், என் படைப்பு விருந்தாக இல்லாமல் மருந்தாக இருக்கிறதோ? அடங்கிக் கிடக்கும் காமத்தைத் தூண்டி விட்டு விட்டு, தணிக்காமலே நான் தூங்கி விடுகிறேனோ? ஒரு பொருளைப் போல் என் மனைவியை நான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறேனோ? அதனால் தான் மறுக்கிறாளோ?
அவள் உடல் வேறு. என் உடல் வேறு. உடலில் என்ன பிரச்சினையோ?
பணிப் பளுவால் களைப்பாக இருக்கலாம்.
மன உளைச்சல் இருக்கலாம். அவள் பெற்றோரின் உடல்நிலை பற்றிக் கவலை இருக்கலாம். அவள் பிரச்சினை அவளுக்கு.
கொடுக்கும் போது இணையாக, மறுக்கும் போது தனியாக நாம் அனுபவித்துக் கொள்வோம். திருமணத்துக்கு முன் பெண் வாடையே இல்லாமல் சுயத்தைத் தானே நம்பிக் கொண்டிருந்தோம்.
ஆனால், இப்போது வாடையை நுகர முடிகிறது. அருகில் படுத்து உறங்க முடிகிறது. அவ்வப்போது பெண் அளிக்கும் சுகமும் கிடைக்கிறது.
ஆகவே, திருமணத்துக்கு முன் இருந்ததை விட, சிறப்பாகத் தானே இருக்கிறோம் என்று எண்ணுவதாய் வைத்துக் கொள்வோம்.
இப்படிப்பட்ட எண்ணங்கள் அனுதாபம், பரிதாபம், கருணை போன்ற உணர்ச்சிகளைத் தான் உருவாக்கும்.
இவை அன்பின் மூல உணர்ச்சிகள்.
அன்பின் மூல உணர்ச்சிகளோடு உறங்கத் தொடங்கிய நீங்கள் காலையில் அன்பானவராகத் தான் விழிப்பீர்கள். அதனால் உங்கள் உடல் அன்பை ஒளி பரப்பும் கேந்திரமாய் இருக்கும்.
உச்சரிக்கும் வார்த்தை, பார்வை, குரலின் தொனி, முகத்தின் செழுமை போன்ற உடல் மொழி வாயிலாய், நாள் முழுதும் உங்கள் அன்பைத் தான் நீங்கள் ஒளி பரப்பிக் கொண்டிருப்பீர்கள்.
உங்களைச் சுற்றியுள்ள அனைவருமே உங்கள் அன்பை உணர்வார்கள். மனைவியும் உணர்வார். உணர்ந்ததன் எதிர் வினையாக முத்தம் கிடைக்கலாம். இரவு விருந்தும் கிடைக்கலாம்.
எண்ணங்கள் எவ்வாறு உங்கள் உணர்ச்சிகளை உருவாக்குகின்றன? உணர்ச்சிகள் எவ்வாறு அனுபவங்களை உருவாக்குகின்றன? உங்கள் உள் உலகம், உங்கள் வெளி உலகை எவ்வாறு பாதிக்கிறது? என்பதற்கு இது தான் தெளிவான விளக்கம்.
“செக்ஸ்” விவகாரத்தை உதாரணமாகப் பயன்படுத்தினால், சொல்லப் படும் கருத்து எளிதாய் உங்கள் ஆழ் மனதைச் சென்றடைந்து விடும் என்கிற ஒரே காரணத்துக்ககத் தான், “செக்ஸ்” விவகாரத்தை நான் உதாரணமாய்ப் பயன் படுத்தி இருக்கிறேன்.
நம் எண்ணங்களால் நம் மனதில் உணர்ச்சிகள் உருவாகின்றன. அந்த உணர்ச்சிகளின் அடிப்படையில் நாம் இயங்கிறோம். அந்த இயக்கம் குறிப்பிட்ட வகையான அனுபவத்தை நமக்கு வழங்குகிறது.
ஆனால், நாம் நம் எண்ணத்தை மாற்றும் போது வேறு வகை உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவற்றின் அடிப்படையில் இயங்கும் போது, அந்த இயக்கம் வேறு வகையான அனுபவத்தை வழங்குகிறது. என்பதை நாம் தெளிவாகப் பார்த்து விட்டோம்.
உள் உலகை மாற்றும் போது, அதாவது உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றும் போது, அந்த மாற்றத்தின் விளைவாக உங்கள் வாழ்வியல் அனுபவங்கள் மாற்றமடைகின்றன என்பது இப்போது தெளிவாகப் புரிகிறது அல்லவா?
இதிலிருந்து, உங்கள் உள் உலகை மாற்றுவதன் மூலம் உங்கள் வெளியுலகில் நீங்கள் விரும்பும் வாழ்வியல் மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதும் புரிகிறதல்லவா?
ஒரு விசயத்தைப் பல கோணங்களில் சிந்தித்துப் பார்த்துச் சரியான கருத்தை மனதில் உருவாக்குபவரே மேதை.
சிந்திக்கும் கோணத்தை பல்வாறாகத் திருப்பிப் பாருங்கள். செழுமையான எண்ணங்கள் பிறக்கும். செழுமையான எண்ணங்களின் விளைச்சலே நல்ல உணர்ச்சிகள். உங்கள் உணர்ச்சிகளே உங்கள் புற உலகைத் தீர்மானிக்கும் காரணிகள்.
உங்கள் மன உலகில் சிக்கல் இல்லையென்றால், உங்கள் புற உலகில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. உங்கள் எதிரியை மனதுக்குள் நீங்கள் உருவாக்குகிறீர்கள். அதன் நீட்சி தான் புற எதிரிகள்.
ஆகவே, உங்கள் மனதுக்குள் உள்ள சிக்கலைத் தீர்ப்பது தான், உறவுச் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரே வழி.
உங்கள் மனதில் ஒருவரைப் பற்றிக் கருவிக் கொண்டிருந்தால், உடல் மொழி மூலம் உங்கள் வெறுப்பு அவரைச் சென்றடைந்து விடும். விழிப்போடு செயல் பட்டாலும் உடல் காட்டிக் கொடுத்து விடும்.
உங்கள் உள்ளத்தைக் கண்ட எதிராளி, உங்களிடமிருந்து வந்ததை உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பார். மேலும், தான் பெற்றதைப் பன் மடங்காக அதிகரித்தும் கொடுப்பார். அப்படிக் கொடுக்கும் போது தான் உறவில் சிக்கல் உருவாகிறது.
ஆகவே, மற்றவருடன் உள்ள உறவுச் சிக்கல், உங்கள் மனதுக்குள் உள்ள பிரச்சினையால் உருவாகிறது. மற்றவரால் போர் உருவாவதில்லை. உங்கள் மனதுக்குள் ஒரு போர் நடக்கிறது. அந்தப் போர் தான், மற்றவரோடு சிக்கலை உருவாக்குகிறது.
ஆகவே, உறவுச் சிக்கலைப் பேசியெல்லாம் தீர்க்க முடியாது.
உங்கள் உள் உலகில் உள்ள சிக்கலைத் தீர்க்காமல் பேசும் போது, சிக்கல் அப்போதைக்குத் தீர்கிற மாதிரி தெரியும். ஆனால், எதிர்பாரா நாளில் அது பூகம்பம் போல் வெடிக்கும்.
வெளியுலகில் உள்ள பிரச்சினையை அதோடு நேராக மோதித் தீர்க்க முடியாது. நமக்கு உள்ளே புகைந்து கொண்டிருக்கும் தீயை முதலில் அணைக்க வேண்டும்.
உள்ளிருந்து வெளிப்புறம் நோக்கிப் பயணிப்பதே, உறவுச் சிக்கலை நிரந்தரமாய்த் தீர்ப்பதற்கான ஒரே வழி.
மனதுக்குள் உள்ள சிக்கல் தீர, நம் சிந்தனையில் மாற்றம் நிகழ வேண்டும். சிந்தனை மாற்றமே வெளியுலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
நம் மன மாற்றமே மற்றவர்களை மாற்றும் மந்திரம்.
இனியொரு கோணத்திலும் உறவுச் சிக்கலைப் பார்க்கலாம்.
உங்கள் வாழ்வில் உறவுச் சிக்கல் இருந்தால், பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியாய் அதை நீங்கள் பார்க்க வேண்டும்.
“உன் உளவியல் திறன் சற்றே பலவீனமாக இருக்கிறது. ஆகவே, உன்னை உளவியல் ரீதியாக வளர்த்துக் கொள்.” என்று பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பிய இரகசிய தகவல் தான் உறவுச் சிக்கல்.
சிந்தனையின் கோணத்தை மாற்றினால், கருத்துக்கள் மாறும்.
கருத்துக்கள் மாறும் போது சிக்கல், சிக்கலாய்த் தெரியாது. வளர்வதற்கான வாய்ப்பாய்த் தெரியும். மற்றவர் தவறுகள் தவறுகளாகத் தெரிவதற்குப் பதில், நமக்கான கல்வியாகத் தெரியும்.
மனதுக்குள் உள்ளார்ந்த இணக்கம் இருப்பதால், மற்றவர்களின் தவறுகளால் உங்கள் மனம் பாதிப்படையாது.
எதிர் மறைக்குப் பதில் நேர்மறைச் சிந்தனை தோன்றும்.
நேர்மறையாளர்கள் வாழ்வில் உறவுச் சிக்கலே உருவாகாது.
நாம் நேர்மறையாகி விடுகிறோம். ஆனால் எதிர்மறைச் சிந்தனையாளர் வம்புக்கு வந்தால் நாம் என்ன செய்வது? அப்போது உறவுச் சிக்கல் ஏற்படுமே என்று நீங்கள் கேட்கலாம்.
அனைத்தும் நன்மைக்கே என்று கருதுபவரை யாராலும் அவமதிக்க முடியாது. வம்புக்கு இழுக்கவும் முடியாது. ஏனெனில், உங்கள் மனதில் இல்லாத ஒன்றைப் பிறரால் ஒருபோதும் பிரதிபலிக்க முடியாது.
மேலும், நம்மோடு வம்புக்கு வருபவர் நமக்கு இழப்பை ஏற்படுத்த விரும்புகிறார் அல்லது நாம் வைத்திருக்கும் ஒன்றைப் பறிக்க அல்லது தடுக்க முயல்கிறார் என்று எண்ணுகிறோம். அது உண்மையல்ல.
அவர் மனதில் மோசமான உணர்ச்சி உள்ளது. அதன் காரணமாகத் தான் அவர் வம்புக்கு நிற்கிறார். அவர் சிந்திக்கத் தெரியாத மன நோயாளி.
ஆகவே, அவர் மீது அனுதாபம் தான் கொள்ள வேண்டும். அவரோடு வாதாடக் கூடாது. பைத்தியத்துக்குத் தேவை வைத்தியம். வம்புக்கு வருபவர் வாழ்க்கைத் துணையாக இருந்தால், அவருக்கான ஒரே வைத்தியம் தந்த்ரா வழியில் தாம்பத்யம்.
யாருக்குப் பைத்தியம் பிடித்தாலும் அதன் மூலம் காமமே. வேறு எந்தக் காரணத்தாலும் மனிதர்க்குப் பைத்தியம் பிடிக்காது.
வம்புக்கு வருபவர் வேறு உறவாக இருந்தால், மனதை வருடிக் கொடுக்கும் அன்பான வார்த்தைகளே சரியான மருந்து.
உணர்ச்சி வசப் படாமல் உரையாட வேண்டும். தேவைப் பட்டால், எந்த உறவையும் நாம் கட்டித் தழுவலாம். கட்டிப் புடி வைத்தியத்தால் அரை குறைப் பைத்தியங்களைக் குணப் படுத்த முடியும். இவ்வாறு செயல் பட்டால் உறவுச் சிக்கல் காணாமல் போய் விடும்.
உறவுச் சிக்கல்களிலிருந்து நாம் மீளும் போது, கவலைப்படுவது, கறுவுவது அல்லது பிறரை வெறுப்பது போன்றவற்றின் மூலமாக வீணாகும் ஆற்றலை நாம் முழுமையாகத் தடுத்து விடலாம். அதனால் நம் சிந்தனா ஆற்றல் நம் இலக்கை நோக்கித் தடங்கலின்றிப் பயணிக்கும்.
“நீங்கள் எதை வெறுக்கிறீர்களோ அது வளரும்.” உங்களால் வெறுக்கப் படுபவர் உங்களை விட உயர்வாய் வளர்வார்.
ஆனால், வெறுப்பு உணர்ச்சிகளை உங்கள் மனதிலிருந்து நிரந்தரமாக நீங்கள் அகற்றி விட்டதால், நீங்கள் பிரபஞ்ச விதியைப் பின்பற்றி நடக்கும் மனிதராகி விடுகிறீர்கள்.
பிரபஞ்ச விதியைப் பின்பற்றி நடப்போர், பிரபஞ்சத்தால் பாதுகாக்கப் படுவார்கள் என்று மற்றொரு பிரபஞ்ச விதி இருக்கிறது. அதனால் நீங்கள் பிரபஞ்சத்தால் பாதுகாக்கப் படுவீர்கள்.
பிரபஞ்சத்தின் பாதுகாப்பு இருக்கும் போது, அச்ச உணர்வே உருவாகாது. அச்சமற்றவராக நீங்கள் மாறும் போது, உங்களைப் பாதிக்கும் விசயங்களைச் செய்யும் துணிச்சல் பிறருக்கு வராது.
ஒருக்கால், அடுத்தவர்கள் உங்களிடமிருந்து எதையேனும் தட்டிப் பறித்துக் கொண்டாலும் பிரபஞ்சம் அதைச் சரிக் கட்டி விடும்.
நீங்கள் விரும்பும் ஒன்றை மற்றவர்கள் தடுத்து நிறுத்தினால், மற்றவர்களால் நெருங்க முடியாத வேறொரு வழி மூலமாக, பிரபஞ்சம் அதை உங்களுக்கு அனுப்பி வைக்கும்.
ஆகவே உங்கள் வாழ்வில் நிலவும் உறவுச் சிக்கல்கள் அனைத்தும் உங்கள் மனதுக்குள்ளே உள்ள சிக்கல்களின் பிரதிபலிப்பே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அந்தப் புரிதலின் அடிப்படையில், உங்கள் வாழ்வில் நிலவும் உறவுச் சிக்கல் காணாமல் போக, உங்கள் உள் உலகத்தின் கருத்துகளை நேர்மறையாக மாற்றுங்கள்.
உறவுச் சிக்கலுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதற்காகப் பிறரிடம் இருந்து பாராட்டை எதிர் பார்க்காதீர்கள். எதிர் பார்ப்பது உடனே கிடைக்காத போது வருத்தம் உருவாகும். வருத்தம் ஒரு மோசமான உணர்ச்சி. மனதின் அருகே அதை அண்ட விடாதீர்கள்.
ஆனால், நீங்கள் பாராட்டுங்கள். பாசாங்கின்றிப் பாராட்டுங்கள்.
பிறரைப் பாராட்டும் போது பாராட்டுபவரின் மனோ சக்தி பலம் அடையும். வெறுக்கும் போது மனோ சக்தி பலவீனமடையும்.
மனோ சக்தி தான் சாதிக்கும் ஆற்றல்.
உறவில் சிக்கல் அகல இனியொரு வழி, அன்பைப் பொழியுங்கள். நிபந்தனையின்றி நீங்கள் அன்பைப் பொழியும் போது மற்றவர் உங்களை நேசித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருக்கால் மற்றவர் நேசிக்கா விட்டாலும் கூட, நீங்கள் அன்பைப் பொழியுங்கள்.
நம்மை நேசிக்காதவர் மீதும் அன்பைப் பொழிவதற்குப் பெயர் தான், “ஆன்மீக விழிப்புணர்வு.”
உங்கள் ஆன்மீக விழிப்புணர்வால் உங்கள் உறவு செழித்தே தீரும். ஏனெனில், ஆன்மீக விழிப்புணர்வுடைய மனிதரை யாராலும் தொடர்ந்து வெறுக்க முடியாது. மற்றவர் உங்களை நேசித்தே தீர்வார்.
ஆகவே உறவு மலர்ந்தே தீரும்.
சிக்கலான உறவு மீண்டும் மலரும் போது அதன் மலர்ச்சி மிகவும் அழகாகவும், அனுபவிப்பதற்கு அதிக சுகமானதாகவும் இருக்கும்.
உறவுச் சிக்கலுக்கு நாம் பொறுப்பேற்கும் போது, மற்றவர் குறித்துத் தீர்ப்பளிக்க மாட்டோம். தீர்ப்பின் அடிப்படையில் குறை கூற மாட்டோம். அதனால், குறை கூறல் மூலம் வீணாகும் சக்தி பாதுகாக்கப் படும்.
மற்றவர்களோடு பிரச்சினை வராது. சண்டையிடவோ, வாதாடவோ நேரம் ஒதுக்கத் தேவையிருக்காது. தற்காத்துக் கொள்ள வேண்டிய அழுத்தம் குறையும். அதனால், உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.
மற்றவரை ஏற்றுக் கொள்வது சுலபமாக இருக்கும். மற்றவரை ஏற்றுக் கொள்ளும் போது மனதில் எதிர்ப்பு இருக்காது. மற்றவரை எதிர்க்காத போது மற்றவர் மாறத் தொடங்குவார்.
ஆகவே மற்றவர்க்கு எதிரான எதிர்ப்பையோ, வெறுப்பையோ, கோபத்தையோ, காழ்ப்புணர்வையோ உங்கள் மனதில் உணரும் போது, நீங்கள் எச்சரிக்கையாக அவற்றை அகற்றி விட வேண்டும். உங்கள் மனதில் எந்த எதிர்ப்பும் இருக்கக் கூடாது.
உங்கள் மனதில் எதிர்ப்பு இருந்தால், மற்றவரிடமிருந்து எதிர்ப்பையும் நிராகரிப்பையும் தான் நீங்கள் சந்திப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் அறியாத நிலையிலேயே மற்றவர்களை எதிர்ப்பீர்கள். நிராகரிப்பீர்கள். அதனால், அதைத் தான் மற்றவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.
ஆகவே, உங்கள் மனதில் இருந்து எதிர்ப்பு, வெறுப்பு, காழ்ப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை நிரந்தரமாக அகற்றி விடுங்கள். அவற்றை நீங்கள் அகற்றும் போது, மற்றவர் உங்களை ஏற்றுக் கொள்வார்.
மேலும், உறவுச் சிக்கல்கள் அனைத்துக்கும் மூலம், உங்கள் அன்பு நிபந்தனை அற்றதாய் இல்லை. உங்கள் தரப்பில் நிபந்தனை உள்ளது. அந்த நிபந்தனையைக் கண்டு பிடித்து உதறுங்கள். நெருங்கிய உறவுகளோடு உள்ள உறவுச் சிக்கல் முடிவுக்கு வந்து விடும்.
நிபந்தனையின்றி அன்பு செலுத்துவதே, “உண்மையான அன்பு.” உண்மையான அன்பு இருக்கும் மனதில் தான் உறவு மலரும். அந்த உறவில் சிக்கல் எழ வாய்ப்பே இல்லை. ஆகவே நிபந்தனையின்றி அன்பு செலுத்தும் நபராக மாறுங்கள். உறவுச் சிக்கல் இருக்காது.
அதனால், வீண் விதண்டா வாதங்கள், நியாயப் படுத்தல்கள், வெட்டிச் சண்டைகள், அதன் பின் அவற்றை எண்ணிக் குமுறிக் கொண்டிருத்தல் போன்றவற்றால் உருவாகும் வலிகளைத் தவிர்த்து விடலாம். அதனால், மனம் நிம்மதியாக இருக்கும்.
மனம் நிம்மதியாய் இருக்கும் போது ஆற்றல் கூர்மையாக இயங்கும். ஆற்றலின் கூர்மையான இயக்கமே செறிவான சிந்தனைக்கு மூலம். செறிவான சிந்தனையே செல்வந்தராய் ஆக்கும் சிந்தனை. ஆகவே, உங்கள் வாழ்வில் உறவுச் சிக்கலே உருவாகாமல் இருக்க, கீழ்க்கண்ட சூளுரையை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.
எந்த உறவோடு சிக்கல் ஏற்பட்டாலும், அதற்கு என் எண்ணங்களே பொறுப்பு. எனக்குள் நடக்கும் போரே அதற்குப் பொறுப்பு. ஆகவே, உறவுச் சிக்கலுக்கு நானே பொறுப்பு என்று நான் பிரகடனம் செய்கிறேன்.
இவ்வாறு கூவி, “உறவுச் சிக்கலுக்கு நாமே காரணம்” என்கிற கருத்தை ஆழ் மனதில் பதித்து விட்டால் போதும். செல்வந்தராக உருவாகும் பயணத்திலிருந்த ஒரு மன நோய் அகன்று விடும்.
அதனால், எளிதாக நீங்கள் செல்வந்தராக மலர்வீர்கள்.
பிறப்பால் அல்லாமல், திட்டமிட்டு செல்வந்தராக உருவாக
விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பிரபஞ்ச விதிகள் செல்வத்தை ஈர்க்கும் இரகசியம் சொல்லாத இரகசியம் எனும் நூலில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது படித்து பயனடைய வாழ்த்துக்கள்.
உங்கள் உறவினர், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.