Day: December 26, 2024

  • Selfishness

    Selfishness

    கேளுங்கள். பெறுவீர்கள்! தேடுங்கள். கண்டடைவீர்கள்! எண்ணம் போல் வாழ்க்கை! தீதும் நன்றும் பிறர் தர வாரா! இவையெல்லாம் பிரபஞ்சப் பேருண்மைகள். ஆனால், பலர் வாழ்விலே பிரபஞ்சப் பேருண்மைகள் பொய்த்துப் போகின்றன.

    ஏனெனில், கேட்கத் தெரியாமல் பலர் கேட்கிறார்கள். அதனால், அவர்கள் கேட்பதைப் பெற முடிவதில்லை. எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், தேடுவதையும் பெற முடிவதில்லை. தானியங்கி முறையிலே எண்ணுகிறார்கள். சிந்திப்பதே இல்லை. அதனால், அவர்கள் எண்ணம் போலவே வாழ்க்கை அமைந்தும், அவர்களுக்கு அது புரிவதில்லை. சிந்திக்காமல், எண்ணங்களை நிகழ விட்டதால், தீமைகளை இவர்களே ஈர்த்து விட்டுத் தீமைக்குப் பிறரே காரணம் என்று புலம்புகிறார்கள்.

    மேற்கண்ட உண்மையை நிரூபித்த பின், செல்வந்தராக உங்களை உருவாக்கும் நூலுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன்.

    உங்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? வாழ்வில் எதை அடைய விரும்புகிறீர்கள் என்று கேட்டால் ஒருவர் சொல்கிறார். “பெரிய ஆள் ஆகி, மக்கள் சமூகத்துக்கு உதவ வேண்டும்”

    இந்த நோக்கத்தை, “ஒரு நல்ல நோக்கம்” என்றே எவரும் சொல்வர். ஆனால் இந்த நோக்கத்தில் இரண்டு பழுதுகள் உள்ளன. முதல் பழுது, நோக்கத்தில் தெளிவில்லை. “பெரிய ஆள்” என்றால் என்ன பொருள்? இது குறித்துத் திட்டவட்டமான தகவல் இல்லா விட்டால் பிரபஞ்சத்துக்குப் புரியாது. அதனால், பிரபஞ்சம் உதவாது.

    அதாவது, சிலருக்குப் பியூன் கூட “பெரிய ஆள்.” ஒருவருக்கு ஏ.எஸ்.பி “பெரிய ஆள்.” இனியொருவருக்குப் பிரதமர் தான் “பெரிய ஆள்.” மற்றொருவருக்கோ அமெரிக்க ஜனாதிபதி தான், “பெரிய ஆள்.” ஆகவே, உங்கள் “பெரிய ஆள்” என்பதன் பிம்பம் எது?

    “பெரிய ஆள்” என்கிற இடத்தில் ஒரு நபரை உருவகப் படுத்திக் கொள்வதே நோக்கத்தைத் தெளிவு படுத்தும். உதாரணமாக, தினம் பத்து கோடி ரூபாய் சம்பாதிக்கிற சுந்தர் பிச்சை மாதிரி ஆக வேண்டும் என்பது தெளிவான தகவல். அடுத்து, எந்த வகையில் மக்களுக்கு உதவ வேண்டும்? எந்த துறையில் உதவ வேண்டும்? இது குறித்த தகவலும் தெளிவாக இல்லை. இதையும் தெளிவு படுத்த வேண்டும்.

    இரண்டாம் பழுது, இந்த நோக்கத்தில் வெற்றி பெறத் தேவையான உந்து விசை இல்லை. மக்களுக்கு உதவுவதன் மூலம் நீங்கள் அடைய விரும்புவது என்ன? உதவுவதன் பின்னால் உள்ள உங்கள் சுய நல நோக்கம் என்ன? பணமா? பணமெனில், எவ்வளவு? புகழா? புகழெனில், எதற்காகப் புகழ்? யார் மெச்ச வேண்டும் என்பதற்காகப் புகழ் அடைய விரும்புகிறீர்கள்? மேற்கண்ட உங்கள் சுயநலம் சார்ந்த ஆசைகளைப் பற்றி விழிப்புணர்வோடு சிந்தனை செய்யுங்கள்.

    சுயநலத்துக்கு முன்னுரிமை அளிக்காத நோக்கம் விருப்பமாக மட்டுமே இருக்குமே தவிர, “கொளுந்து விட்டு எரிகிற நெருப்பாக” மாறாது. “எரிகிற நெருப்பாக” மாறாத நோக்கம் நிறைவேறாது. ஆகவே, விருப்பத்தை நெருப்பாக மாற்றக் கற்றுக் கொள்ளுங்கள்.

    தங்கள் நோக்கம் குறித்துச் சிலர் சொல்கிறார்கள். “நிறையச் சம்பாதித்துப் பெரிய ஆளாக ஆக வேண்டும்”

    இந்த நோக்கத்தையும், “நல்ல நோக்கம்” என்றே சொல்வார்கள். ஆனால் இதிலும் தெளிவில்லை. உங்கள் நோக்கம் பிரபஞ்சத்துக்குப் புரியாது. ஏனெனில், “நிறையச் சம்பாதிப்பது” என்றால் எவ்வளவு சம்பாதிப்பது? “நிறைய” என்பது எவ்வளவு என்பதைத் துல்லியமாகத் தெரிவித்தால் மட்டுமே பிரபஞ்சத்துக்குப் புரியும்.

    ஒரு கதை. “பணம் தேவைப் படுவோர் எல்லாம் வந்து கேளுங்கள் தருகிறேன்” என்று அறிவித்தார் கடவுள். ஒரு நபர் ஒரு முறை தான் கேட்க வேண்டும் என்பது நிபந்தனை. குப்பன் சென்றான். எவ்வளவு வேண்டுமென்று கேட்ட கடவுளிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வேண்டுமென்று கேட்டான் குப்பன். பல மூடைகளுக்கு மத்தியில், ஒரு மூட்டையைத் தேடி எடுத்துக் கொடுத்தார் கடவுள்.

    பணத்தை எண்ணிப் பார்த்த குப்பனுக்கு அதிர்ச்சி. ஒரு கோடிக்கும் அதிகமாக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே மூடையில் இருந்தது. “கடவுளே நான் கேட்ட தொகை இல்லையே” என்றான் குப்பன்.

    ‘ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வேண்டுமென்று கேட்டாய். எவ்வளவு அதிகமாக வேண்டுமென்று தெளிவாகக் கேட்கவில்லை. அதனால் ஒரு கோடிக்கும் அதிகமாக – ஒரு ரூபாய் – இருந்த மூட்டையைச் சிரமப் பட்டு நான் தேடி எடுத்துக் கொடுத்தேன். இரண்டாம் வாய்ப்பு இல்லை. போய் வா” என்றார் கடவுள்.

    கேட்கத் தெரியாமல் கேட்டால் இப்படித் தான் கிடைக்கும்.

    இது தவிர, எதற்காக அவ்வளவு பணம் வேண்டும்? மேலும் எவ்வளவு நாட்களில் வேண்டும்? இதையும் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

    எதை அடைய விரும்பினாலும், அதை அடைவதால் தனிப் பட்ட முறையில் நீங்கள் அடையப் போவது என்ன என்பது உங்கள் ஆழ் மனதுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். அப்போது தான் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றத் தேவையான செயல்களில் ஆழ் மனம் ஈடுபடும். இல்லா விட்டால், உங்கள் ஆழ் மனம் உங்களுக்கு உதவாது. ஆழ் மனதின் உதவியின்றி விரும்பியதை அடைய முடியாது. ஆகவே அடைய விரும்புவதை விழிப்புணர்வோடு அடைய விரும்புங்கள்.

    வேறு சிலர் சொல்கிறார்கள். “நிறையப் படித்து, மக்களின் அறியாமையைப் போக்க வேண்டும்”

    ‘நிறைய படிப்பது” என்றால் எவ்வளவு படிப்பது? இந்தத் தெளிவு இங்கே இல்லை. எந்தத் துறை பற்றிப் படிக்க வேண்டும்? இதுவும் தெளிவாக இல்லை. அடுத்து அதை வைத்து மக்கள் சமூகத்துக்கு எவ்வகையில் சேவை செய்ய வேண்டும்? அந்தச் சேவையின் மூலம் தனிப் பட்ட முறையில் பெற விரும்புவது என்ன? இவை பற்றித் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் போது தான், நிறையப் படிக்க வேண்டும் என்கிற விருப்பம் தெளிவான நோக்கமாக மாறும். தெளிவான நோக்கமே பிரபஞ்சத்தால் நிறைவேற்றப் படும்.

    அடுத்து, “மக்களின் அறியாமையைப் போக்குவது” என்றால் என்ன பொருள்? இதில் தெளிவு தேவை. மக்களிடம் காணப்படும் எல்லா அறியாமையையும் அகற்ற வேண்டும் என்பது, பிரபஞ்சத்தால் கூட முடியாத செயல். “நோபல் பரிசு” பெற்ற ஒரு விஞ்ஞானி கூட, வேறு துறைகளில் அறியாமை மிக்கவராக இருப்பார். அனைத்துத் துறையிலும் அறிஞராய் இருப்பது யாருக்கும் சாத்தியமில்லை.

    அனைவரிடமும் அறியாமை உள்ளது. பூமிக்கு வந்த கடவுள் மனிதனிடம் ஒரு வரம் கேட்டார். மனிதனுக்கு ஒரே வியப்பு. “கடவுளே உங்களிடம் இல்லாத எது என்னிடம் உள்ளது? என்னிடம் போய் வரம் கேட்கிறீர்களே” என்றான். “உள்ளது, உன்னிடம் ஏராளமாக உள்ளது. என்னால் சுமந்து செல்ல முடியாத அளவுக்கு உன்னிடம் உள்ளது என்பதை நான் அறிவேன். அதனால் தான் கேட்கிறேன். கொடுப்பாயா?” என்றார். மனிதன் கொடுக்க ஒப்புக் கொண்டான். கடவுள் கேட்டார். “உன்னிடம் உள்ள அறியாமை என்கிற சொத்தை எனக்குக் கொடு” என்றார். மனிதனும் கொடுத்தான். ஆனால் கடவுளால் சுமந்து செல்ல முடியாத அளவுக்கு அந்த மூட்டை இருந்தது. அவர் தன்னால் சுமக்க முடிந்த அளவு அறியாமையை மட்டுமே எடுத்துக் கொண்டார். மீதியை மனிதனிடமே கொடுத்து விட்டார். ஆகவே கடவுளால் கூடச் சுமக்க முடியாத அளவுக்கு அறியாமையை வைத்திருப்பவன் மனிதன்.

    ஆகவே, எந்த அறியாமையைப் போக்குவது? எழுதப் படிக்கத் தெரியாத அறியாமை, மனதைக் கையாளத் தெரியாத அறியாமை, இரு பாலரும் இன்புறும் வகையில் பாலுறவாடத் தெரியாத அறியாமை, உறவைப் பேணத் தெரியாத அறியாமை, உலகுடன் ஒட்டி வாழத் தெரியாத அறியாமை, அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அறியாமை, பணத்தைக் கையாளத் தெரியாத அறியாமை, செல்வந்தராக உருவாகத் தெரியாத அறியாமை, ஆன்மீக அறியாமை என எண்ணற்ற அறியாமைகளுக்கு உரிமையாளன் மனிதன். ஆகவே, எந்த அறியாமையைப் போக்க வேண்டும் என்கிற தெளிவு தேவை.

    இவை தவிர, மக்களின் அறியாமையைப் போக்கும் பணி மூலம் நீங்கள் அடைய விரும்புவது என்ன? பணமா? ஆமென்றால் எவ்வளவு? புகழா? ஆமென்றால், உலகளாவிய புகழா? தேசிய அளவிலா? இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில் கிடைக்காத வரை, ஆழ் மனதைத் தீண்ட முடியாத வெற்று விருப்பமாகவே உங்கள் நோக்கம் இருக்கும். வெற்று விருப்பம் ஒரு மலடு. மலடு எண்ணியதை ஈனாது.

    சிலர் சொல்கிறார்கள். “என் பெற்றோரை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.”

    நல்ல நோக்கம். ஆனால், “நன்றாக” என்றால் என்ன பொருள்? “நல்ல முதியோர் இல்லத்தில் என் பெற்றோரை விட்டிருக்கிறேன். தலா பதினைந்தாயிரம் வீதம் இருவருக்கும் மாதா மாதம் முப்பதாயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஒருவர் சொல்கிறார்.

    இதை வைத்து, இவர் தன் பெற்றோரை நன்றாக வைத்திருக்கிறார் என்று சொல்லி விட முடியுமா? முப்பதாயிரம் அல்ல, மாதம் முப்பது லட்சமே கொடுத்தாலும், முதியோர் இல்ல வாழ்க்கை நிம்மதியைக் கொடுக்குமா? அல்லது கூழே ஆனாலும், குழந்தைகளின் முகத்தைத் தினமும் பார்த்த படி வாழும் வாழ்க்கை நிம்மதியைக் கொடுக்குமா?

    ஆகவே, “பெற்றோரை நன்றாகப் பேணுதல்” என்றால் என்ன பொருள் என்கிற தெளிவு தேவை.

    உதாரணமாக, எத்தகைய மாளிகையில் அவர்கள் வசிக்க வேண்டும்? எத்தகைய வாகனத்தில் அவர்கள் பயணிக்க வேண்டும்? எந்த மாதிரி ஆடைகள் மற்றும் எத்தனை ஆடைகள் அவர்களிடம் இருக்க வேண்டும்? எத்தனை பணியாட்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்? மேற்கண்டவற்றை வரையறை செய்தால் தான், பெற்றோருக்காக நீங்கள் எவ்வளவு பணமீட்ட வேண்டும் என்கிற தெளிவே பிறக்கும்.

    தெளிவான நோக்கம் நிறைவேறியே தீரும். மேலும், பெற்றோரை முன்னிறுத்துவதால் இந்த நோக்கத்தில் போதுமான சுயநலம் உள்ளது. ஆகவே இது நிறை வேறும். இது நிறைவேறுவதால் இந்த நோக்கத்தைக் கொண்டுள்ள மனிதரின் வாழ்வும் முன்னேறும்.

    சிலர் சொல்கிறார்கள். “மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும்.”

    மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றால் என்ன பொருள்? “சாகா வரம்” பெற்று வாழ்வதா? “சாகா வரம்” பெற்று வாழும் மனிதர் ஒருவர் கூட உலகில் இல்லை. கிருஸ்ணர், இராமர், புத்தர் வரை எவரும் இப்போது இல்லை. ஆனால், அவர்கள் புகழ் எப்போதும் இருக்கும்.

    உதாரணமாக, விவேகானந்தர் – 39, சாணக்யர்- 44, அகத்தியர் – 49, இராமகிருஸ்ணர் – 50, ஓஷோ – 59, ரமணர் – 71 வயது வரை உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். எனினும் அவர்களைப் பற்றிய தகவல் பல நூறாண்டுகளுக்குப் பூமியில் இருக்கும்.

    மேற்கண்டோரில் ஒருவரைப் போல் வாழ வேண்டும் என்று தீர்மானிக்கலாம். அவ்வாறு தீர்மானித்தால், அவர்கள் மேற்கொண்ட பயணத்தைத் தான் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், மரணமில்லாப் பெருவாழ்வு வாழக் கிளம்பியோரில், கோடியில் ஒருவர் கூட அதை அடைய முடிவதில்லை. பெரு நிறுவன மடாதிபதிகளாக ஒரு சிலர் உருவாகி இருக்கிறார்களே தவிர, மறைவுக்குப் பின் நினைவு கூறத் தக்கவர்களாக யாரும் உருவாகவில்லை. மரணமில்லாப் பெருவாழ்வு என்கிற பெயரில் வியாபாரம் மட்டுமே நடக்கிறது.

    இந்த நோக்கம், யாரால், எப்படி உருவாயிற்று? இந்த நோக்கம் நிறை வேறும் போது ஒருவர் அடையக் கூடிய பலன் என்ன என்பதைப் பற்றி விழிப்புணர்வோடு சிந்தித்துப் பார்த்தால், இந்த நோக்கம் காணாமல் போய் விடும். அதன் பின், உங்களுக்கும் சமூகத்துக்கும் நன்மையளிக்கக் கூடிய நோக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதையடைய உதவும் உளவியல் அறிவைக் கொண்டு அடைய முயற்சிக்கலாம்.

    சிலர் சொல்கிறார்கள். “என் நோக்கம் ஜீவ சமாதி அடைதல்.”

    இந்த லட்சியத்தை எங்கிருந்து பெற்றார்களோ தெரியவில்லை. வாழ வேண்டிய வயதில், “சமாதி” அடைவதைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.

    ஜீவ சமாதி என்றால் என்ன பொருள்? அதை அடைய விரும்புவது ஏன்? ஜீவ சமாதிக் கருத்து இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எங்காவது இருக்கிறதா? இந்தக் கருத்து உருவாகக் காரணம் என்ன? இதைப் பற்றி விழிப்புணர்வோடு சிந்தனை செய்து பார்க்கலாமா?

    ஒருவர், தன் மரணத்தை அறிவிக்கிறார். “தியான நிலைக்குள் செல்லும் நான், அதே நிலையிலேயே நிரந்தர இடம் நோக்கிச் சென்று விடுவேன்” என்று சொல்லி விட்டுத் தியான நிலைக்குள் செல்கிறார்.

    சீடர்களைத் தவிர யாருக்கும் தெரியாமல் நிகழும் இந்த நிகழ்வு, அவரது மரணத்துக்குப் பின் உலகத்துக்குத் தெரியப் படுத்தப் படும்.

    அதன் பின், அவர் உடலை வேறோர் இடத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்குப் பதில், எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் உடலை விட்டு, அதைச் சுற்றிச் சுவர் கட்டி மூடி போட்டு விடுவார்கள். இது தான் சமாதி.

    வினோபா பாவே இவ்வாறு தான் உலக வாழ்வை நீத்தார். “என் உடல் என்னைக் கைவிடும் முன், என் உடலை நான் கை விட விரும்புகிறேன்” என்று சொல்லி உயிர் நீத்தவர் வினோபா. 1942-ல், நடந்த, “வெள்ளையேனே வெளியேறு” போராட்டத்தின் போது முதல் சத்யாக்கிரகியாகக் களம் இறங்கிய இந்த தேச பக்தரின் மரணம், ஒரு வகைத் “தற்கொலை” என்று பலரால் சாடப் பட்டது.

    இவ்வாறு இறந்தவர் உடலை மூடிய பின், அவர் நகம் வளர்கிறது. முடி வளர்கிறது. ஆகவே அவர் சாகவில்லை என்று கதை கட்டி, இறந்தவரை ஒரு புனிதரைப் போலச் சித்தரித்து, மக்களால் வழிபடப்படும் இடமாக அந்தச் சமாதி மாற்றப் படும்.

    இது தான் ஜீவ சமாதி. “பணம் காய்க்கும் மரமாய்” இந்தச் சமாதி இருக்கும் வரை, “சமாதியை வைத்துப் பிழைப்பு நடத்துவோரால்” இது பராமரிக்கப் படும். வருவாய் நிற்கும் போது சமாதி சீந்துவாரின்றிச் சிதிலமாகி விடும். குட்டிச் சுவராய்க் கிடக்கும் சமாதிகளே சான்று.

    மேலும், ஜீவ சமாதி என்கிற பெயரில் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால், சமாதி உருவாவதைத் தவிர இறந்தவருக்கோ அல்லது அவரைச் சார்ந்தவருக்கோ அல்லது சமூகத்துக்கோ எவ்வித நன்மையும் இல்லை. ஆகவே, ஜீவ சமாதி என்பது ஒரு பித்தலாட்டம்.

    இதை அறிந்த பிறகும், “ஜீவ சமாதி” அடைவதே ஒருவருடைய லட்சியமாக இருந்தால், “தந்த்ரா இரகசியங்கள் நூலை” வாசித்து விட்டுத் தாம்பத்யத்தில் ஈடுபட்டால் போதும். பித்துக் குளித்தனமான எண்ணம் மறைந்து, மனதில் தெளிவும் விழிப்பான சிந்தனையும் பிறந்து விடும்.

    அனுபவிக்க வேண்டிய பருவத்தில், இன்பங்களை அனுபவிக்க வாய்ப்பில்லா விட்டால் – இளமையில் வறுமை இருந்தால் – இத்தகைய பித்துக் குளித்தனமான சிந்தனைகள் மனதில் பிறப்பது இயல்பே. பாலுறவே இவர்களைக் குணப் படுத்தும் மருந்து.

    வேறு சிலர் சொல்கிறார்கள். “தியானம் செய்து, ஞானமடைந்து மக்கள் உயர உதவப் போகிறேன்.”

    பிரார்த்தனை என்பது நீங்கள் கடவுளோடு பேசுவது. தியானம் என்பது உங்கள் கடவுள் உங்களோடு பேசுவது. என் கடவுளும் உங்கள் கடவுளும் ஒன்று அல்ல. என் கடவுள் வேறு. உங்கள் கடவுள் வேறு. ஏனெனில், அவரவர் ஆழ் மனமே அவரவர் கடவுள். “கட + உள்” என்பதே, “கடவுள்.”

    இதைத் தவிர கடவுள் என்கிற முதியவர் எவரும் உலகில் இல்லை. தியானம் சுயம் சார்ந்தது. தன்னை அறிதலே தியானத்தின் நோக்கம். நான் யார்? என் ஆசைகள் எவை? மற்றும் அந்த ஆசைக்குப் பின்னால் மறைந்துள்ள என் ஆணவம் எப்படிப் பட்டது? இதை அறிதலே தியானத்தின் விளைவு.

    என் சிந்தனையை நான் கவனிக்கிறேன். அவ்வாறு என் சிந்தனையைக் கவனிக்கும் என்னையும் கவனிக்கிறேன். அவ்வப்போது மனமற்ற நிலைக்கும் செல்கிறேன். அதன் மூலம் என் சிந்தனையைச் செழுமையாக்குகிறேன்.

    அதனால், உள்ளதை உள்ள படி பார்க்கும் திறனைப் பெறுகிறேன். உண்மைக்குள் மறைந்துள்ள பொய்யையும், பொய்க்குள் மறைந்துள்ள உண்மையையும் என்னால் கண்டுணர முடிகிறது.

    அதனால் அனைவரையும் நேசிக்கும் அன்பாளராய் நான் மாறுகிறேன். யாரிடமும் குறையில்லை. யாரோடும் பகையில்லை. மக்கள் அனைவரும் பிரபஞ்சத்தின் குழந்தைகள்!

    எதிரியும் மாயை! நண்பரும் மாயை! எல்லாம் “நான்” செய்யும் வேலை! ஆகவே ஒருவரைப் போற்றுவதோ அன்றித் தூற்றுவதோ, மகா அபத்தம்! “அன்பு மட்டுமே ஒரே ஆயுதம்!” மேற்கண்ட உண்மையை உணர்வதே தியானத்தால் பெறப் படும் ஞானம்.

    “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி வருந்திய வள்ளலார் ஞானி. தண்ணீர் இல்லாத் தாவரத் துயர் கண்டு யார் கண்ணில் கண்ணீர் வருகிறதோ, அவரே ஞானி. தியானம் மூலம் மேற்கண்ட நிலையை அடையலாம்.

    ஞானம் அடைதல் என்றால், உங்களிடம் இல்லாத ஒன்றை நீங்கள் அடைவது அல்ல. இப்போது இருக்கிற ஒன்றைத் துறப்பதே ஞானம். “நான்” என்கிற உங்கள் அகங்காரத்தைத் துறப்பதே ஞானம்.

    உலக நன்மைக்காக யாகம் செய்யலாம். யாக வாயுக்களால் வளி மண்டலம் சுத்தமாகும். யாகத்தால் வியாதி கூட குணமாகலாம்.

    தியானம் அத்தகையது அல்ல. தியானம் செய்வதன் மூலம், உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ளலாம். ஏனெனில், அவரவர் தியானத்தால், அவரவர் மனம் மட்டுமே சுத்தமாகும்.

    தியானம் செய்வதன் மூலம் மழையை நிறுத்தவோ, பெய்விக்கவோ முடியாது. பூகம்பத்தைத் தடுக்க முடியாது. கொரோனாவைக் கொல்ல முடியாது. திருடனைத் திருத்த முடியாது. மக்களின் வாழ்க்கையைச் செழிப்பாக்க முடியாது.

    தியானம் அவரவர் மனதுக்கான மருந்து. மனதை ஆளும் திறனைப் பெறலாம். எந்தச் சூழலிலும் விழிப்போடு வாழலாம். கேள்விகளற்ற மனதைப் பெறலாம். சிந்தனையற்ற சுகத்தை நுகரலாம். செயல் படும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம். மனித நேயம் மிக்க மனிதனாய் வாழலாம். தியானம் அதி தீவிர சுய நலம்.

    இதை அடைவது தான் உங்கள் நோக்கமெனில், இதை அடைந்த பின், உங்களுக்குத் தனிப் பட்ட முறையில் நீங்கள் செய்து கொள்ளப் போவது என்ன என்கிற திட்டம் தேவை. நீங்கள் விரும்புவது என்ன? பணமா? புகழா? எத்தனை ஏக்கரில் மடம் கட்ட வேண்டும்? எத்தனை ஆயிரம் கோடி பணம் தேவை? கைலாசா மாதிரி தனி நாடே வேண்டுமா?

    மேற்படி ஒரு சுய நலத் திட்டமிருந்தால், நீங்கள் புகழ் அடைவீர்கள். உங்களிடம் பணமும் சேரும். பணமும், புகழும் இருந்தால் தான், உங்களை ஞானியென்றே மக்கள் நம்புவார்கள். அவ்வாறு நம்பினால் தான், உங்கள் பிரசங்கத்தைக் கேட்க வருவார்கள். இல்லா விட்டால், “யாரோ ஒரு பிச்சைக் காரன் உளறுகிறான்” என்று மக்கள் உங்களை மதிக்கவே மாட்டார்கள். எத்தகைய ஞானத்தை நீங்கள் பெற்றிருந்தாலும் இது தான் கதி.

    ஏனெனில், கடவுளாகவே இருந்தாலும், ஏழையாக இருந்தால், எவரும் அவரை மதிக்க மாட்டார்கள். நாய்களின் சிறுநீரில் குளித்த படி மரத் தடியில் அனாதை மாதிரி நின்று கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான கடவுள்களே ஆதாரம்.

    ஆகவே, சுயநல நோக்கம் இல்லா விட்டால், வன மலரின் வாசம் பயனின்றி வீசுவதைப் போல், பிறருக்குப் பயனின்றி உங்கள் ஞானத்தை நீங்கள் வீணடிக்கலாம். முகவரி இல்லாத இமய மலை ஞானிகளில் ஒருவராக வாழ்ந்து மடியலாம்.

    ஒரு முக்கியத் தகவல். எந்த ஞானியும் பிறரை உயர்த்த வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஏனெனில், “உயிர்கள் அனைத்தும் சமம்” என்பதை உணர்தலே ஞானம்.

    “இரு வேறு நிலை உலகில் இல்லை” என்பதை அறிவதே ஞானம்.

    உயர்வு தாழ்வே உலகில் இல்லை. அனைத்தும் ஒன்றே. அனைத்தும் ஆற்றலே. அனைத்தும் சக்தி மயம். ஆகவே “உயர்வு, தாழ்வு” என்கிற இருமை இல்லை என்பதை உணர்தலே ஞானம்.

    ஆகவே, “ஒருவரை உயர்த்துவது” என்கிற நோக்கமே ஞானத்துக்கு எதிரானது. அந்த நோக்கமே போலி ஞானிக்கான அடையாளம். இதைப் புரிந்து கொண்டவன், ஞானம் அடைந்து மக்கள் உயர உதவப் போகிறேன் என்கிற இலக்கை வைக்க மாட்டான்.

    தன் வாழ்வின் நோக்கம் பற்றி வெறொருவர் கூறுகிறார். “நான் பிறவிப் பேரற்ற நிலையை அடைய வேண்டும்.”

    பிறவியற்ற நிலையை அடைய வேண்டும் என்பது பிறரால் ஊட்டப் பட்ட நம்பிக்கையின் விளைவாக உருவான நோக்கம். அல்லது சந்தித்த ஏமாற்றங்களால் உருவான விரக்தியின் விளைவு.

    முற்பிறவி, அடுத்த பிறவி என்பதெல்லாம் நிரூபிக்க முடியாத விசயங்கள். அதைப் பற்றிப் பேசுபவர் உண்மையின் அடிப்படையில் தான் பேசுகிறார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

    செத்துப் போன எவரும் திரும்பி வந்து சொன்னதும் இல்லை.

    வேறெந்தப் பாலூட்டியும், அடுத்த பிறவி பற்றிச் சிந்திப்பதாகவும் தெரியவில்லை. உதாரணமாக, “தானம் செய்தால் அடுத்த பிறவியில் நீ நன்றாக இருக்கலாம்” என்று சொல்லி மனிதனிடம் உள்ள இரண்டு பழங்களில் ஒன்றை நீங்கள் பிடுங்கி விடலாம்.

    ஆனால், குரங்கை அவ்வாறு ஏமாற்ற முடியாது.

    மிருகமும் மனிதரும் ஒன்றா என்று கேட்கலாம். இல்லை. மிருகமும் மனிதரும் ஒன்றல்ல. ஏனெனில், எந்தவொரு விலங்கையும் விட மனிதனே மகா சூழ்ச்சிகரமான மிருகம். முற்பிறவி, அடுத்த பிறவி பற்றியெல்லாம் கூறித் தன் சக மனிதனையே ஏமாற்றும் மிருகம்.

    யோசித்துப் பாருங்கள். முற்பிறவி என்பது உண்மையானால், கிறிஸ்து பிறக்கும் போது பத்துக் கோடியாக இருந்த உலகின் ஜனத் தொகை, இப்போது எண்ணூறு கோடியாக உயர்ந்தது எப்படி?

    மேலும், கி பி 2100 – ல் ஆயிரத்து முன்னூறு கோடியாக ஜனத் தொகை உயரப் போகிறதே! அது எப்படி நிகழ முடியும்?

    இறந்தவர் மீண்டும் பிறக்கிறார் என்பதை உண்மையென்றே எடுத்துக் கொண்டாலும், உலகின் ஜனத் தொகை கி.பி. 1 -ல் இருந்த பத்து கோடியாகவே தானே இருக்க வேண்டும். அது எப்படி அதிகரித்தது? பத்துக் கோடிப் பேர் எண்ணூறு கோடிப் பேராக அதிகரித்தது எப்படி?

    “புண்ணியம் செய்யும் விலங்குகள்” மனிதராய்ப் பதவி உயர்வு பெறுகின்றன என்றால், புண்ணியம் செய்யும் விலங்குகளின் விகிதம் எப்படி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது?

    கி பி 1 முதல் கி.பி. 1000 வரையிலான முதல் ஆயிரம் ஆண்டுகளில், ஏராளமான விலங்கினங்கள் பூமியில் இருந்தன. ஆனால், வெறும் தொண்ணூறு கோடி விலங்குகள் மட்டும் தான் அப்போது மனிதராய்ப் பதவி உயர்வு பெற்றன.

    ஆனால், கி பி 1000 முதல் கி.பி. 2000- க்குள் மட்டும் எப்படி அறு நூறு கோடி விலங்குகள் மனிதராகப் பதவி உயர்வு பெற்றன?

    கி பி 2100 – ல் மக்கள் தொகை 1300 கோடியாக உயரப் போகிறதே. அப்படியெனில் புதிதாக ஐநூறு கோடி விலங்குகள் “புண்ணியம் செய்யும் பயிற்சியை” செய்து கொண்டிருக்கிறதா? புண்ணியம் செய்து கொண்டி ருக்கும் விலங்குகள் எவை?

    மேலும், தொண்ணூறு சதவீத விலங்கினங்கள் ஒழிக்கப் பட்டு விட்ட தற்காலத்தில் மனிதராகப் பதவி உயர்வு பெறும் விலங்குகளின் எண்ணிக்கை மட்டும் எப்படி அசுர வேகத்தில் அதிகரிக்கிறது?

    ஆன்மா! அது எப்போது, எதற்காக உருவாக்கப் பட்டது? அது ஏன் துன்புறுகிறது? அது ஏன் பாவச் செயல்களைச் செய்தது? பாவச் செயல்களைச் செய்ய வைத்தது யார்? அதன் பின் உள்ள காரணம் என்ன?

    கடந்த ஜென்மப் பலன் தான் இந்த ஜென்மம் எனில், தீயில் விரலை வைத்தால் உடனே வேகுமா? அடுத்த ஜென்மத்தில் தான் வேகுமா? என் செயலின் விளைவு எப்போது வரும்? அடுத்த ஜென்மத்தில் சுகமாக வாழ, இப்போதிருந்தே புண்ணியம் சேர்ப்பது உச்ச பட்ச பேராசை அல்லவா? சொர்க்கம், நரகம் கற்பனை உலகங்களா? அல்லது எண்ணெய்க் கொப்பரை எரிந்து கொண்டிருக்கிறதா?

    பிறவியற்ற நிலையை அடைந்துள்ள மனிதர் யார்? பிறவியற்ற நிலையை அடைந்து விட்டதை எவ்வாறு அறிந்து கொள்வது?

    மேலும், வாழ்க்கையின் வெறுப்பு உள்ளவர் தானே அடுத்த பிறவி வேண்டாம் என்று சொல்வார்? இலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில்கேட்ஸ், அம்பானி, சுந்தர் பிச்சை போன்ற யாராவது இதைக் கேட்பார்களா?

    மேற்கண்ட விளக்கத்திலிருந்தே முற்பிறவி, அடுத்த பிறவி என்பதெல்லாம் அபத்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

    மேலும், இப்போது பெற்றுள்ள பிறவி உண்மையானது. ஆகவே, இதைச் சிறப்பாக வாழ்ந்து செல்வோம் என்றும் முடிவெடுக்கலாம்.

    வாழ்க்கையோடு போராடாதீர்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். கொண்டாடினால் தான் வாழ்க்கை வசப் படும். வாழ்க்கை வசப் படும் போது பிறவிப் பேரற்ற நிலையை அடைய வேண்டும் என்கிற நோக்கம் மனதில் பிறக்காது.

    சிலர் சொல்கிறார்கள். ” நான் கடவுளைப் பார்க்க வேண்டும்.” கடவுளைப் பார்ப்பதன் மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறேன் என்று யோசித்தால் போதும். இந்த நோக்கம் காணாமல் போய் விடும்.

    மேலும், “கடவுளைப் பார்த்தே தான் ஆக வேண்டும்” என்று ஒருவர் அடம் பிடித்தால் நானே காட்டுகிறேன். கடவுள் இருக்கிறார். கடவுளை முழுமையாகப் பார்க்க முடியாது. ஆனால், தொட்டுணர முடியும். ஏனெனில், பிரபஞ்சம் தான் கடவுளின் உருவம்.

    நாம் கடவுளால் படைக்கப்பட்ட ஒரு நுண்ணுயிர். அனைத்து ஜீவன்களும் கடவுளின் படைப்புக்களே. உருவாக்கியவரே படைப்பின் தாய். உருவாக்கியது பிரபஞ்சம். பிரபஞ்சம் தான் கடவுள்.

    நீங்களும் நானும் பிரபஞ்சத்தின் குழந்தைகள். ஆகவே, நீங்கள் ஒரு தேவ குமாரன் அல்லது தேவ குமாரி. ஆகவே நீங்களும் கடவுளே.

    அதனால், கடவுளைப் பார்க்க விரும்பினால், கண்ணாடி முன் சென்று நில்லுங்கள். உங்கள் கடவுள் உங்களுக்குக் காட்சியளிப்பார்.

    இதைத் தவிர்த்து, மேரி மாதா மாதிரி, காளி மாதிரி, ஈசன் மாதிரி, ஏசு மாதிரி பார்க்க விரும்பினால், அது சாத்தியமில்லை. அவ்வாறு பார்த்ததாகச் சொல்வதெல்லாம் அவரவர் பிரமை.

    ஏனெனில், உருவ வடிவில் கடவுள் இல்லை.

    தூணிலும் துரும்பிலும் மலையிலும் மடுவிலும் பால்வெளிகள் அனைத்திலும் மற்றும் கருந்துளையிலும் இருப்பவர் எவரோ, அவரே கடவுள். ஆகவே பிரபஞ்சமே கடவுளின் உருவம். ஆகவே கடவுள் உருவமற்றவர். தொடலாம். ஆனால், பார்க்க முடியாது.

    வேறு சிலர் சொல்கிறார்கள். “மதங்களைப் பற்றித் தெளிவாக நான் தெரிந்து கொள்ள வேண்டும். இது தான் என் நோக்கம்.”

    மதம் என்பது என்ன?

    உலகில் அவ்வப்போது அசாத்தியமான அறிவுடைய ஞானிகள் தோன்றுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை வழங்கிய அனுபவத்துக்கு ஏற்ப, வாழ்வியல் உண்மைகள் சிலவற்றை அவர்கள் கண்டறிகிறார்கள்.

    அதன் பின், காட்டுமிராண்டியாக இருந்த மனிதனைப் பண்படுத்தும் நோக்கில் தாங்கள் கண்டறிந்த உண்மைகளைப் போதிக்கிறார்கள்.

    அவர்கள் மறைந்த பின், அவர்கள் கூறிய வாழ்வியல் வழிகளைப் பின்பற்றும் ஒரு கூட்டம் உருவாகிறது. நாளடைவில், பிறரும் தங்கள் வழியைப் பின்பற்ற வேண்டும் என்று அக்கூட்டம் விரும்புகிறது. ஆகவே, தங்கள் வாழ்வியல் வழிகளை உலகெங்கும் கொண்டு சென்று போதிக்கும் ஒரு அமைப்பை அக்கூட்டம் உருவாக்குகிறது. அந்த அமைப்பு வளரும் போது, குறிப்பிட்ட கோட்பாடுகளை வாழ்வியல் வழிகளாகப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு நிறுவனமாக அது உருமாறுகிறது. அந்த நிறுவனம் தான் மதம்.

    இது போல் பல மதங்கள் உள்ளன. அதனால் மக்களிடையே பிரிவுகள் உருவாகி ஒருவரை மற்றவர் அடித்துக் கொள்கிறார்கள். இதற்கு மேல், மதங்களைப் பற்றிப் பெருமை பேச எதுவும் இல்லை.

    தன் மதமே பெரிதெனப் பேசுதல் அறியாமை. தன் மதமே சிறப்பென மதம் ஊட்டுதல் உலகை ஆளும் சூழ்ச்சி. மதத்தை வளர்த்தல் சிலரது பிழைப்பு. மனிதனுக்கு மதம் ஊட்டும் எந்தவொரு மதமும் தீதே. மனித மதத்தைக் குணப் படுத்துவதே மதம்.

    இருப்பினும், மதங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதையே, ஒருவர் தன் நோக்கமாகக் கொண்டிருந்தால், அதைத் தெரிந்து கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார் என்கிற தெளிவு தேவை.

    மதத் தலைவர் ஆகப் போகிறாரா? அதன் மூலம் அவர் பெற விரும்புவது என்ன? பணமா? புகழா? எவ்வளவு தேவை? இதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஏனெனில், சுயநலம் இல்லாமல் எதில் இறங்கினாலும், வெல்ல முடியாது. ஆகவே, தன்னுடைய சுயநல நோக்கம் என்ன என்பது தெளிவான பிறகு, “எதற்காக இதைப் படிக்கிறோம்” என்கிற விழிப்புணர்வோடு மதமும் தத்துவமும் என்கிற தலைப்பில் அவர் படிக்கத் துவங்கலாம்.

    ஒருவர் சொல்கிறார். “நான் மனிதர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தான் என் நோக்கம்.”

    “இதெல்லாம் ஒரு இலக்கா? உளவியல் அறியாமை” காரணமாக உருவான நோக்கம் இது. ஏனெனில், மனிதன் நதி போன்றவன். இப்போதுள்ள மனிதன் அடுத்த கணம் இருக்க மாட்டான். சூழ்நிலை யாரை எப்படி மாற்றும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஜெயலலிதா மறைந்த பின் சசிகலா வாழ்வில் நடந்த நிகழ்வு களைப் பாருங்கள். மனித புத்தி வரையறுக்க முடியாதது என்பது புரியும்.

    எண்ணற்ற முகமூடிகளுக்கு மனிதன் சொந்தக்காரன். எந்த நேரத்தில், யார் முன்னால், எந்த முகமூடியை அணிவான் என்பதை அவரவரால் கூட முன் கூட்டியே சொல்ல முடியாது.

    இணை பிரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியாகவே இருந்தாலும், ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள முடியாது. குறிப்பிட்ட நபரை நான் முழுமையாகப் புரிந்து கொண்டு விட்டேன் என்று கருதுவது தான் பேதமையிலும் பேதமை.

    அதாவது, “மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது” என்பதைப் புரிந்து கொள்வதே மனிதர்களைப் பற்றிய சரியான புரிதல்.

    இதற்கு மேலும், மனிதர்களைப் புரிந்து கொள்வதே லட்சியமாக இருந்தால் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கப் போகிறது என்று பொருள் அதிலிருந்து தப்பிக்க, “மனிதர்களைப் பற்றிப் புரிந்து கொள்வதன் மூலம் எதைச் சாதிக்கப் போகிறோம்” என்று யோசித்துப் பாருங்கள்.

    ஆக்கபூர்வமான சிந்தனை பிறக்கும். அந்தச் சிந்தனையை விழிப் புணர்வோடு பின் தொடருங்கள். வாழ்வில் வளரலாம். அதன் மூலம் பிறருக்கும் உதவலாம்.

    மேலே சொல்லப் பட்ட நோக்கங்கள், பிறருடைய போதனைகளால் உருவானவை. வளர்ந்த சூழலும், பிஞ்சு மனதுக்குள் பிறரால் ஊட்டப் பட்ட நஞ்சும், அவர்களுடைய இன்றைய வறுமையும் தான் மேற்கண்ட நோக்கங்களை உருவாக்கிய காரணிகள்.

    திட்டமிட்டுச் சிந்திக்காமல், தான் தோண்றித் தனமாக எண்ணங்களை மனதில் நிகழ விட்டதால் உருவாகி உள்ள நோக்கங்கள். உங்கள் நோக்கங்களை இவ்வாறு உருவாக்கிக் கொள்ளாதீர்கள். நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். அதோடு நோக்கத்தில் சுய நலமே முதலிடம் பெற வேண்டும்.

    விழிப்புணர்வோடு சிந்தனை செய்து, உங்கள் ஆழ் மனதுக்குப் பிடித்த, உங்கள் சுய நலத்தை முன்னிறுத்தும் ஒரு லட்சியத்தை, அதே நேரத்தில் சமூகத்துக்கும் உதவக் கூடிய ஒரு நோக்கத்தை ஏற்று வாழ்வதே இலக்கோடு வாழ்தல்.

    சுய நலமற்ற இயக்கம் என்று உலகில் எதுவும் இல்லை. “நான் ஞானி” என்று பெயர் பெற வேண்டும் என்பது சுயநலம். “நான் அறிவாளி” என்று பெயர் பெற வேண்டும் என்பது சுயநலம். “நான் நல்லவன்” என்று பெயர் பெற வேண்டும் என்பது சுயநலம். இவ்வாறாக மனிதப் பிறவியின் அனைத்து நடத்தைகளும் சுய நலத்தால் மட்டுமே வடிவமைக்கப் படுகின்றன. சுய நலமே இயக்கத்தின் உயிர்.

    “நான் சுயநலமற்றவன்” என்று சொல்பவன், “மகா பொய்யன்.” அதே போல், சுயநலமற்றவன் என்கிற வேடத்தைப் புனைபவன் “உலக மகா அயோக்கியன்.” “நான் மலமே கழித்ததில்லை” என்பதும் “என் செயலில் சுயநல நோக்கமே இல்லை” என்பதும் சமமான பொய்களே.

    சுயநலமாயிருப்பதே உயிரினங்களின் அடிப்படைப் பண்பு.

  • Dangerous English Medicines

    Dangerous English Medicines

    மேகற்கத்திய வல்லரசு நாடுகளில் தோன்றிய ‘Allopathy’ என்னும் ஆங்கில வைத்தியம் அசுர வளர்ச்சி பெற்று… உலக நாடுகளின் சகல பாரம்பரிய வைத்தியங்களையும் தூக்கி வீசிவிட்டு மருத்துவ உலகில் முழு ஆதிக்கம் செலுத்தும் ஆபத்தான வைத்தியமாக வளர்ந்துள்ளது.

    20 ஆண்டுகள் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி சாமானிய மக்கள் சம்பாதித்த பணத்தை ஏதோ ஒரு நோயின் பெயரைச் சொல்லி முப்பதே நாட்களில் கொள்ளை அடிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட அபாயகரமான வைத்தியமாக இது உள்ளது. இந்த வைத்தியம் தான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வைத்தியம் என்பதுபோல் ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வைத்தியத்தைப் படிப்பதற்கும் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆங்கில வைத்திய நிலையங்களில் பயன்படுத்தப்படும் அத்தனை விலை உயர்ந்த கருவிகளும் மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவர்கள் தரும் அத்தனை ஆங்கில மருந்துகளும் மேற்கத்திய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

    எனவே, இந்த வைத்தியத்தின் வழியே மக்களிடம் கொள்ளை அடிக்கப்படும் பணம் முழுவதும் அந்த நாடுகளுக்கே சென்று சேர்கின்றது. எனவே, ஆதிக்க சக்திகளின் கையில் உள்ள இந்த வைத்தியத்தை 99% தவிர்ப்பது நல்லது.

    மூன்றே மூன்று இக்கட்டான சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த வைத்தியத்தை அணுகலாம்.

    i. திடீரென்று ஏற்படும் விபத்துக்களின்போது முதலுதவி செய்வதற்காக அணுகலாம்.

    ii. நம் கவனக்குறைவால் ஏதேனும் ஒரு நோய் உடம்புக்குள் வளர்ந்து உபாதை செய்தால் ஆய்வுகள் மூலம் அந்த நோயின் தன்மையையும் அளவையும் தெரிந்துகொள்ள இந்த மருத்துவத்தை அணுகலாம்.

    iii. புற்று நோய்க் கட்டிகள்போல் ஏதேனும் ஒரு நோய் வளர்ந்து அறுவை சிகிச்சை இன்றி மற்ற மருத்துவத்தால் கரைக்க முடியாத நிலையை அடைந்திருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுவதற்கு ஆங்கில வைத்தியத்தை அணுகலாம்.

    இந்த மூன்று சூழ்நிலைகள் தவிர மற்ற நேரங்களில் இந்த மருத்துவத்தை அணுகுவது ஆபத்து.. ஆபத்து.. ஆபத்து!!!

    உலக மருத்துவர்களின் பொதுவான அணுகுமுறைகள்

    உடலை மட்டும் ஆராய்ச்சி செய்து, இரசாயன மருந்துகள் மூலம் தற்காலிக நிவாரணம் தருவது ஆங்கில மருத்துவம்.

    உடலையும் உயிரோட்டத்தையும் ஆராய்ச்சி செய்து மருத்துவம் செய்வது மருந்தில்லா மருத்துவ முறைகள் மற்றும் சித்த, ஆயுர்வேத, யுனானி, நாட்டு வைத்திய, பாட்டி வைத்திய முறைகள்.

    இயற்கை உணவு, உபவாசம், யோகா மற்றும் பல்வேறு குளியல்கள் மூலம் உடலைத்தூய்மை செய்து உயிர்ச்சக்தியை ஊக்கப் படுத்தி நோயை விரட்டுவதே இயற்கை வைத்திய முறைகள்.

    உடல் உபாதை, உயிர் ஓட்டம், மன உணர்வுகள் என்னும் மூன்றையும் ஆராய்ச்சி செய்து இனிக்கின்ற மருந்துகளால் நோயை விரட்டும் எளிய மருத்துவமே ஹோமியோபதி மருத்துவம்.

    தான தர்மம், திருக்கோவில் வழிபாடு, கர்மவினை நீக்கும் பரிகாரங் கள் மூலம் நோயை குணப்படுத்துவது ‘கர்மவினை மருத்துவம்’

    யோகா, தியானம், தவம் என்னும் மூன்றின் வழியே சித்தத்தைத் தூய்மைப்படுத்தி நோயை விரட்டும் தலைசிறந்த மருத்துவமே ‘ஆன்மீக மருத்துவம்’. இருப்பவற்றுள் உயர்ந்த மருத்துவம் இதுவே என்பது மகான் பதஞ்சலி முனிவர் வாக்கு. ‘Meditation is the top most Medication.’

  • The World Reflects You

    The World Reflects You

    மனம் என்பது இயக்குனர். மனதின் கட்டளைப் படி இயங்கும் இயந்திரம் மூளை. இயந்திரத்தை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இயக்குனரைப் பார்க்க முடியாது என்று மனதைப் பற்றிச் சொல்லப் படுகிறது. ஆனால், இது உண்மை அல்ல.

    நேரிடையாகத் தான் மனம் கண்ணுக்குத் தெரியாதே தவிர, எல்லோராலும் மனதைப் பார்க்க முடியும். அவரவர் மனதை மட்டுமல்ல. அடுத்தவர் மனதையும் பார்க்க முடியும்.

    மனதை மறைக்க முடியாது. தன்னிடமிருந்து மட்டுமல்ல, அடுத்தவர் பார்வையிலிருந்தும் மனதை மறைக்க முடியாது

    ஒருவருடைய மனதை உலகின் முன் அம்பலப் படுத்தும் இரண்டு தடயங்கள் உலகில் உள்ளன. அவற்றில் ஒன்று உடல்.

    மனதின் வடிவம் தான் உடல்.

    மனம் நலமாக இருந்தால் உடல் நலமாக இருக்கும். மனம் நோய் வாய்ப்பட்டால் உடலும் நோய் வாய்ப் படும். மன நோயே உடல் நோயின் மூலம். ஆகவே மனதின் ரூபமே உடல்.

    மனதை அம்பலப் படுத்தும் இனியொரு தடயம் வாழ்க்கை.

    மனம் நோயுற்றிருந்தால், கோபமும், குரோதமும், எதிர்ப்பும், வெறுப்பும், பகையும், பழியும் கொண்டதாக வாழ்க்கை இருக்கும்.

    மனம் நலமாக இருந்தால், ஊக்கமும், உற்சாகமும், மகிழ்ச்சியும், ஆனந்தமும் வாழ்க்கையில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும். மன நலம் உடையோர் வாழ்வில் செல்வத்தின் வரத்து இருக்கும்.

    மன நோய்களே வறுமையின் மூலம். மன நோய்களே சண்டை சச்சரவுகளின் மூலம். மன நோய்களே தோல்வியின் மூலம். மன நோய்களே மரணத்தின் மூலம்.

    மனதுக்குப் பெயர் அகம். அந்த அகத்தின் அழகை அம்பலப்படுத்தும் சாதனமே உடல். உடல் வீசும் ஒளியைக் கொண்டே மனதின் மணத்தை அறிந்து கொள்ள முடியும்.

    மனதின் எண்ணம் மாறினால், உடலின் நிறம் மாறும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது உடல் மிளிர்ச்சியாக இருக்கும். மனம் வருத்தப் பட்டால் உடல் கறுத்துப் போய் விடும்.

    ஒருவருடைய உடலில் வெளிப்படும் வெளிர் நிறத்தைக் கொண்டே அவருடைய காம வேட்கையின் அளவைக் கண்டு பிடிக்க முடியும், பசலை என்பது அதன் பெயர்.

    ஒருவருடைய முகத்தில் நிலவும் கருமை, மற்றும் வழியும் அசடு எண்ணெயைக் கொண்டே அவரிடம் உள்ள எதிர்மறைச் சிந்தனையின் அளவைத் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த அளவுக்கு மனதின் பிம்பமாக உடல் இருக்கிறது. அதேபோல் மனதின் பிம்பமாகவே பார்வையும் இருக்கும்.

    உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித் தான் உங்கள் வெளியுலகம் இருக்கும்.

    உங்கள் உள் உலகின் பிரதிபலிப்பே உங்கள் புற உலகம்.

    உள்ளே நீங்கள் கொதித்துக் கொண்டிருந்தால் உங்கள் புற உலகம் கொந்தளிப்பாகத் தான் தெரியும். ஆகவே உங்கள் மனம் கொந்தளிப்பில் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும்.

    உள்ளே நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் புற உலகம் மகிழ்ச்சி மிக்கதாய்த் தெரியும். ஆகவே சிந்தனை வளமாக இருந்தால் செல்வம் வரும். சிந்தனை அற்பமாய் இருந்தால் வறுமை வரும்.

    நல்லவர் கெட்டவர் பட்டத்துக்கெல்லாம் பிரபஞ்சத்தில் இடமில்லை. ஒரு நபர் நல்லவராய் இருக்கலாம். ஆனால் அவருடைய சிந்தனை வளம் அற்றதாய் இருந்தால் அவரால் செல்வந்தராக முடியாது.

    ஒரு நபர் உலகமறிந்த மகா அயோக்கியனாக இருக்கலாம். சந்தித்த அத்தனை பேரையும் ஏமாற்றிய வரலாறும் அவருக்கு இருக்கலாம். ஆனால், சிந்தனை வளமாக இருந்தால் அவர் செல்வந்தராகி விடுவார்.

    பிரபஞ்ச சக்தி முன், நல்லவர், கெட்டவர் என்கிற பேதம் இல்லவே இல்லை. எண்ணங்களுக்குப் பதிலளிப்பதே பிரபஞ்சம்.

    உங்களுடைய எண்ணங்களை எதிரொளிப்பதே உங்கள் வாழ்க்கை. உங்கள் எண்ணங்களின் பண்புக்கு ஏற்பத்தான், உங்கள் புற உலகம் உங்களுக்குக் காட்சியளிக்கும்.

    ஆகவே, புற உலகில் நீங்கள் காணும் வண்ணங்கள் அனைத்தும் உங்கள் மனதால் வண்ண மயமாக்கப் பட்டவை.

    உங்களையும், உங்களைச் சுற்றியுள்ள உலகையும் நீங்கள் பார்க்கும் விதத்தை உங்கள் எண்ணங்கள் தான் தீர்மானிக்கின்றன.

    அதிகாலை ஐந்து மணியளவில் நதிக் கரையில் பெண்ணொருத்தி குளித்துக் கொண்டிருந்தாள்.

    அவளைப் பார்த்த ஒரு காமுகன், இரவெல்லாம் தொழில் செய்து விட்டு விடியும் முன் குளித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் ஒரு பாலியல் தொழிலாளி குளித்துக் கொண்டிருப்பதாகக் கருதுகிறான்.

    அதே போல அவளைப் பார்த்த ஒரு பண்பாளர், தன் கணவனைத் தவிர அன்னியர் எவரும் தன் உடலைப் பார்த்து விடக் கூடாது என்று கருதும் பத்தினியொருத்தி – பொழுது புலரும் முன்பே – நதியில் குளித்துக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார்.

    ஆனால், இருவருடைய கருத்துமே தவறானவை. உண்மை என்னவெனில், ஆறு மணிக்கு நடக்கவுள்ள ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளவே அந்த பெண் அதிகாலையில் குளித்துக் கொண்டிருந்தாள்.

    அவரவர் மனதில் உள்ள எண்ணங்களுக்கு ஏற்பத்தான் தங்கள் சுற்றுப்புறத்தை மக்கள் பார்க்கிறார்களே தவிர – உண்மையை உள்ளது உள்ளபடி – எவரும் பார்ப்பதே இல்லை.

    இனியொரு உதாரணத்தைப் பாருங்கள்.

    ஆண் ஒருவர் கூறுகிறார். நான் ஒரு பேராசிரியர். துறைத் தலைவரும் கூட. என் மனைவியும் உயர் பதவியில் இருக்கிறார். நான் தான் அவரை மேல்படிப்பு படிக்க வைத்தேன். இருபது இலட்ச ரூபாய் கொடுத்து அரசு வேலையும் வாங்கிக் கொடுத்தேன்.

    என் மனைவியின் பெயரில் தான் வீடும் கட்டியுள்ளேன். இரு குழந்தைகளும் எங்களுக்கு உள்ளனர். மனைவியின் பெற்றோரையும் நன்றாகவே மதிக்கிறேன். எனினும், அனைவரிடமும் அரக்கியைப் போலவே என் மனைவி நடந்து கொள்கிறாள்.

    என்னிடம் அவள் நடந்து கொள்வதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவளோடு என்னால் பேசவே முடியவில்லை. அந்த அளவுக்கு மிக மோசமாக அவள் வளர்க்கப் பட்டிருக்கிறாள். அவள் அலுவலகத்திலும் இது தொடர்கிறது என்கிறார்.

    அதாவது, அவருடைய மனைவியின் அரக்கத்தனத்துக்கு, அவள் வளர்ப்பு தான் காரணமே தவிர, அந்தக் கணவர் எந்த விதத்திலும் காரணம் அல்ல என்று கருதுகிறார்.

    அவர் நல்ல கணவர். தன் மனைவியின் பாதுகாவலனாக அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். தன் மனைவியைத் தாயாக்கியிருக்கிறார். எனினும், காதலராக அவர் நடந்து கொள்ளவில்லை.

    பெண்ணின் முதல் தேவை கணவன் அல்ல. காதலனே பெண்ணின் முதல் தேவை. ஆனால், யாருக்குமே இது தெரியாது. அதனால், அவருக்கும் இது தெரியாது.

    அதனால், ஆணாதிக்க வழிமுறையிலேயே அவர் தன் தாம்பத்ய வாழ்வை நடத்தியிருக்கிறார். ஒரே ஒரு முறை கூட தன் மனைவிக்குரிய பாலின்பங்களை அவர் வழங்கவேயில்லை.

    மனைவியின் பாலுறுப்பைக் கண்களால் கூட அவர் பார்த்ததில்லை. பாலின்ப சுகத்தை அனுபவிப்பதற்கு மட்டுமே சிறப்பாகப் படைக்கப் பட்ட பெண்ணின் பாலுறுப்பு தொடப் படாமலே இருக்கிறது.

    அதாவது, அவருடைய மனைவி கன்னி கழியாமலே பல்லாண்டுகளாக அவரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

    இரண்டு குழந்தைகளைக் கொடுத்து விட்டதையே தன் மனைவிக் குரிய இன்பங்களை வழங்கி விட்டதற்கான ஆதாரமாக அவர் கருதுகிறார். இது தவறான கருத்து.

    பெண்ணின் பாலுறுப்புக்கும், கருத்தரிப்பதற்கும் கடுகளவல்ல. அணுவளவு கூடத் தொடர்பில்லை.

    பெண்ணின் பாலுறுப்பைத் தொடாமலே பத்து முறை கூட, அவளைத் தாயாக்கி விடலாம். ஆனால், இதெல்லாம் அவருக்கு தெரியாது.

    அதனால் அவர் மனைவியின் காம உணர்வு தணிக்கப்படவில்லை. காமம் தணிக்கப்படா விட்டால், பாலின்ப ஆற்றாமை என்கிற மனநோய் மனிதரைத் தாக்கி விடும்.

    ஆற்றாமையால் தாக்கப் பட்டவர் அரக்கத் தனமாகத் தான் நடந்து கொள்வார். அந்த நோய்க்குத் தான் அவர் மனைவி பலியாகி விட்டாள்.

    ஆனால், பெண்ணின் காமம் தணிக்கப்படா விட்டால், அவள் ஒரு மனநோயாளியாகி விடுவாள். அந்த மன நோய் அவளை அரக்கியாக்கி விடும் என்பது அவருக்குத் தெரியாது. அவருக்கு மட்டுமல்ல, பல பெண்களுக்கே கூட இந்த உண்மை தெரியாது.

    அதனால் பாலின்ப ஆற்றாமை நோய்க்கு ஆளாகியுள்ள பெண்ணை அவள் வளர்ப்பே சரியில்லையென்று ஏசி, அவளுக்கு இணையாகவே மற்றவர்களும் அவளோடு சண்டை போடுவார்கள்.

    இது தவறு.

    அந்தப் பெண் ஒரு அரைப் பைத்தியம். அவளுக்குத் தேவை பாலியல் வைத்தியம்.

    தந்த்ரா வழியில் வழங்கப் படும் பால் இன்பங்கள் மட்டுமே அரக்கத் தனத்திலிருந்து பெண்ணை விடுவிக்கும் ஒரே மருந்து.

    இதை நான் மட்டும் சொல்லவில்லை.

    பெண்ணின் உடலில் நிகழச் சாத்தியமுள்ள பாலின்பங்களை வழங்கி, பெண்ணின் அரக்கத்தனத்தைக் குணப்படுத்தும் மருத்துவ மனையை சிக்மண்ட் பிராய்ட் என்கிற மருத்துவர் நடத்தியிருக்கிறார்.

    “பெண்ணின் காமத்தைத் தணிக்காதவன் ஒரு மனிதனே அல்ல” என்று தமிழ் சாத்திரங்கள் கூறுகின்றன.

    “நெருப்புக்குள் குளிப்பதை விட அதிக சூடானது தணிக்கப் படாத காமம்” என்கிறார் வள்ளுவர்.

    “பெண்ணின் காம உணர்வைத் தணிக்க மறுப்பது தான், பெண்ணுக்கு இழைக்கப் படும் உடல் ரீதியான கொடுமைகளிலேயே மிகக் கொடூரமான கொடுமை” என்று தந்த்ரா சொல்கிறது.

    ஆனால் இவையெல்லாம் இன்றைய ஆண்களில் பலருக்குத் தெரியாது. அதனால் தங்கள் மனைவிக்குரிய பாலின்பங்களை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

    கணவன் தன் மனைவியைக் கட்டிலில் எப்படி நடத்துகிறானோ, அதற்கேற்ப அவன் மனைவி அவனைப் பகற்பொழுதில் நடத்துகிறாள். ஆகவே, பெண்ணின் அரக்கத்தனம் என்பது அவள் கணவனின் பாலியல் மடமையை அம்பலப் படுத்தும் கண்ணாடி.

    புறத்தில் திடமான ஆணாகக் காட்சியளித்தாலும், இரவு வாழ்வில் பாலியல் அறிவற்றவனாக அந்தக் கணவன் இருக்கிறான் என்பதைத் தான் அவன் பகல் வாழ்க்கை அம்பலப் படுத்துகிறது.

    இல்லற வாழ்வில், அவ்வப்போது உலகப் போர் நிகழ்வது சகஜம். அந்தப் போருக்கான ஒரே காரணம் காமம்.

    அந்தப் போரின் போது, கையாலாகாதவன், பொண்டுகன், பொட்டை, ஒண்ணுந் தெரியாத முட்டாள், லூசு, உன்னைக் கட்டி என்ன சுகத்தைக் கண்டேன், குழந்தைகளுக்காக மட்டுமே உன்னோடு வாழ்கிறேன், பெண் கேட்டு எத்தனையோ பேர் வந்தும் உன்னிடம் சிக்கிக் கொண்டேனே என்றெல்லாம் மனைவி ஏசுவதே ஆதாரம்.

    ஏசலெல்லாம் வேட்கையின் கூக்குரல்.

    அதாவது, பாலியல் வேட்கையை வெளிப் படுத்தும் கசிவே ஏசல்.

    ஆனால், மனைவியின் இத்தகைய ஏசலைச் சில கணவர்கள் சட்டை செய்வதே இல்லை. காரணம் தங்களைப் பற்றிப் பாலியல் முடவர்கள் என்று அவர்களே கருதிக் கொண்டிருக்கிறர்கள்.

    ஏனெனில், “பாலியல் மடையர்கள்” தான் உலகில் உண்டே தவிர, “பாலியல் முடவன்” என்றொரு ஆண், இதுவரை பூமியில் பிறந்ததே இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது.

    “ஆண்மைக் குறைவு” என்று சொல்வதை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை உடல் ஏற்கிறது. அதனால், செயல்பாடு சிதைகிறது. அதைக் கொண்டு, தங்கள் ஆண்மை குறித்து தவறான கருத்துக்களுடன் பல ஆண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    அவரவர் மனதில் உள்ள எண்ணங்களுக்கு ஏற்பத் தான், தங்கள் சூழலைப் பார்க்கிறார்களே தவிர – உண்மையை உள்ளது உள்ளபடி- பார்ப்பதே இல்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணமே சான்று.

    இனியொரு உதாரணம். ஒரு மனிதர் காலையில் எழும் போதே, லாரி ஒலிப்பான் சத்தம். அதை மோசமான நிகழ்வாகக் கருதிய படியே, பல் துலக்கும் போது பிரஸ் இடிக்கிறது. “நாள் கொஞ்சம் சரியில்லை” என்று நினைத்த படியே உண்கிறார். உணவு விக்குகிறது. நூலிழையில் வாகன விபத்தைத் தவிர்க்கிறார். “ச்சே. யார் முகத்தில் விழித்தோம்” என்று யோசித்த படியே பயணிக்கையில், போக்குவரத்தில் நெரிசல். ஆபீசில் மோதல். மாலையில் தலைவலி. வீட்டுக்கு வரும் போது, மனைவியைக் காணோம். மாமியாரிடம் கேட்கிறார். எங்கோ வெளியில் சென்றாள். என்று அவர் முணுமுணுக்க, அவரோடு சண்டை.

    மனைவி குழந்தையோடு வருகிறாள். மாமியார் ஏதோ சொல்ல, மனைவி “காளி” ஆகிறாள். அவளோடு ரகளை. உடனே, “டாக்சியை” வரவழைத்து, தாயும் மகளும் குழந்தையோடு கிளம்பி விட்டனர்.

    கெஞ்சியும் பயனில்லை. திடீரென்று வாழ்க்கை சிக்கலாகி விடுகிறது. அடுத்த நாள் எழும் போது, எதிர்மறைச் சிந்தனையுடனே எழுகிறார். அதனால், அன்றைய தினமும் எதிர்மறை நிகழ்வுகளே தொடர்கிறது. இவ்வாறாக எதிர்மறைச் சிந்தனைச் சுழலில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்குகிறார்.

    தாம்பத்யம் இருந்தால், சிந்தனையைச் சீராக்கி விடலாம். ஆனால், மனைவி போய் விட்டதால் அதுவும் இல்லை. அதனால், எதைப் பார்த்தாலும் எதிர்மறைச் சிந்தனையே தோன்றுகிறது. அந்த சிந்தனையால், மனைவியோடு கைபேசியில் சண்டையிட, மனைவி நீதிமன்றத்துக்குச் சென்று விட்டாள். முடிந்தது வாழ்க்கை.

    படுக்கையிலிருந்து காலை எழுந்த போது எதேட்சையாகக் கேட்ட லாரியின் ஹார்ன் சத்தத்தை ஒரு எதிர்மறை நிகழ்வாக மனம் பார்த்த தால், சிறிய அளவில் உருவான ஒரு எதிர்மறை சிந்தனை, ஒவ்வொன்றாக ஈன்று வாழ்வையே நரகமாக மாற்றி விடுகிறது.

    உள் உலகில் உருவான ஒரு எரிச்சல், இந்த உலகமே ரொம்ப மோசம் ‘என்கிற எண்ணத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. இவ்வாறாக, நம் துயரத்தை உலகம் உருவாக்கவில்லை. நாம் தான் உருவாக்கி உள்ளோம்.

    நாம் உருவாக்கியதைத் தான் நம் உலகம் பிரதிபலிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமலே உலகத்தைச் சபித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சபிப்பது வளரும். அதனால், நாம் சபிப்பதைப் போன்றே நம் உலகம் உருவாகிறது.

    உங்கள் சிந்தனை தான் உங்கள் புற உலகை உருவாக்குகிறது.

    உங்களால் சாதிக்க முடியும் என்று நீங்கள் மனதுக்குள் நினைத்தால், உங்களால் வெளியுலகில் சாதிக்க முடியும். அதேபோல, உங்களால் எந்த ஆணியையும் பிடுங்க முடியாது என்று நீங்கள் நினைத்தால், உங்களால் எதையுமே பிடுங்க முடியாது.

    உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், நம்பிக்கைகள் மற்றும் சுய பேச்சு ஆகிய நான்கும் தான் உங்கள் புற உலகைத் தீர்மானிக்கின்றன. ஆகவே, என்ன நடந்தாலும் நீங்கள் நல்லதை மட்டும் தேடுங்கள். எதைத் தேடுகிறீர்களோ அதை மட்டுமே கண்டடைவீர்கள்.

    அதாவது எதிர்மறைச் சிந்தனையே கூடாது என்று நான் சொல்ல வில்லை. அது சாத்தியமற்றது.

    ஒரு நாளில் சிந்திக்கப்படும் 60,000 எண்ணங்களில் 55,000 எண்ணங்கள் எதிர்மறையாகத் தான் இருக்கும்.

    மனம் நடத்தும் தற்காப்பு நர்த்தனம் இது.

    எதிர்மறையாகச் சிந்திப்பதே மனதின் இயல்பு. ஆனால், ஒரு நாள் முழுக்க தொடர்ந்து எதிர்மறையாகவே சிந்திக்கக் கூடாது. சிந்தித்தால் அதன் சுழலில் சிக்கிக் கொள்வோம். ஆகவே, அவ்வப்போது நம் சிந்தனையை நாம் கவனிக்க வேண்டும். தொடர்ச்சியாக எதிர்மறை சிந்தனை நடக்க விடக் கூடாது.

    சங்கிலிக் கண்ணியை உடைப்பது போல் எதிர்மறை சிந்தனையை உடைத்து விட வேண்டும்.

    அதன்பொருட்டு, என்ன நடந்தாலும் சரி, அதிலுள்ள நல்லதை மட்டுமே தேட வேண்டும்.

    உதாரணமாக, லாரியின் ஒலிப்பான் சத்தத்தை கேட்ட மனிதர், அதைத் தனக்கான ஒரு அலாரமாக அன்று கருதியிருந்தால், அவருடைய வாழ்க்கை நீதிமன்றத்துக்குப் போயிருக்காது.

    ஆகவே, நிகழ்வுகளில் உள்ள நல்லதை மட்டுமே தேடுவது என்கிற பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    எதைத் தேடுகிறீர்களோ அதை நீங்கள் கண்டடைவீர்கள். ஏனெனில், நீங்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களோ, அது தன் பங்குக்கு உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. இது பிரபஞ்ச விதி. ஆகவே, நல்லதைத் தேடும் போது, நிச்சயமாக நீங்கள் நல்லதைக் கண்டு பிடித்தே தீர்வீர்கள்.

    இவ்வாறாக, நமக்குள் நடக்கும் எதிர்மறைச் சிந்தனையின் விளை வாகவே நாம் உலகின் மீது குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்வது உளவியல் ரீதியாக நம்மை வளமாக்கும்.

    அதன்பின் வெற்றி பெறுவது ஒரு கடினமான பணியாக இருக்காது. நம் உள் உலகில் வெறுப்பை அகற்றி விடும் போது, புற உலகை நம்மால் வெறுக்க முடியாது. அவ்வாறு நம்மிடமிருந்து வெறுப்பு அகலும் போது, வெறுப்பிருந்த இடம் அதன் எதிரியான அன்பால் நிரப்பப் படும். அதனால், நம்மையறியாமலே நாம் அன்பாளராகி விடுவோம். அன்பு மேலும் அன்பையே ஈர்க்கும்.

    உங்கள் வெளியுலகிலிருந்து எதையாவது அகற்ற வேண்டுமா? உங்கள் உள் உலகிலிருந்து அதை அகற்றுவது தான் ஒரே வழி. அன்பு நிரம்பிய வாழ்க்கையைப் பெற வெறுப்பதை நிறுத்துங்கள். அதே போலத்தான், உங்கள் புற உலகில் சோகம், வருத்தம், மனச்சோர்வு போன்றவற்றை நீங்கள் பார்க்கும் போது, உங்களுக்குள் உள்ளது தான் வெளியே தெரிகிறது என்று அறிந்து கொள்ளுங்கள். அதை மாற்றிட, அவ்வப்போது புன்னகை புரியுங்கள்.

    பிறரோடு சிரித்து மகிழுங்கள்.

    உங்கள் உலகம், உங்களைப் போல் மகிழ்ச்சி மிக்கதாக மாறியே தீரும். ஒவ்வொரு நாளும், உங்கள் புற உலகைக் கவனமாகக் கவனிப்பதை உங்கள் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

    உங்கள் அகத்தைக் காட்டும் கண்ணாடி தான், உங்கள் புற உலகம். ஆகவே, புற உலகை வைதலும், பிறரை வைதலும் முட்டாள்தனம்.

    உங்கள் வாழ்வியல் நிகழ்வுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உங்கள் உள் உலகம் தீர்மானிக்கிறது. ஆகவே, உங்களுக்கு நடக்கும் எல்லாவற்றுக்கும் உங்கள் உள் உலகமே காரணம்.

    உங்கள் வெளியுலகம் விரும்பத்தக்கதாக இல்லையா?

    அதை விரும்பத் தக்கதாக மாற்ற, உள் உலகை நேர்மறையாக மாற்றிப் பாருங்கள். உங்கள் சூழலும் உங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளும் நேர்மறையாக இருப்பதாகவே நீங்கள் உணர்வீர்கள்.

    உங்கள் உள் உலகம் என்பது உங்கள் மூக்குக் கண்ணாடி.

    உங்கள் வெளி உலகம் என்பது உங்களைச் சுற்றியுள்ள புல்வெளி. உங்கள் கண்ணாடி சிவப்பு நிறத்தில் இருந்தால், பச்சைப் புல்வெளி சிவப்பாகத் தான் தெரியும்.

    எந்த வண்ணத்தில் உங்கள் கண்ணாடி இருக்கிறதோ, அந்த வண்ணத்தில் உங்கள் புற உலகை நீங்கள் காண்கிறீர்கள்.

    சிவப்புப் புல்வெளியைப் பார்க்க உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

    கண்ணாடியில் உள்ள சிவப்பு நிறத்தை எடுத்து விடுங்கள்.

    புல்வெளி பச்சையாகத் தெரியும்.

    உங்கள் புற உலகில் உள்ள நல்லவற்றைக் காண்பதற்கு உங்கள் உள் உலகை மாற்றுவதே ஒரே தீர்வு. உதாரணமாக, நான் ஒரு கண்ணாடி. நீங்கள் என் மீது அன்பு காட்டினால், நான் உங்கள் மீது அன்பு காட்டுகிறேன். நீங்கள் என் மீது வெறுப்பை உமிழ்ந்தால் நான் உங்கள் மீது வெறுப்பை உமிழ்கிறேன்.

    நான் உங்களைப் பிரதிபலிக்கிறேன். அவ்வளவு தான்.

    உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் இது பொருந்தும். உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் உங்களைப் பிரதிபலிக்கிறார்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் உங்கள் கண்ணாடிகள்.

    ஒரு கண்ணாடி காட்டுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? உடனே உங்கள் உள் தோற்றத்தை மாற்றுங்கள். கண்ணாடியில் தெரியும் உருவம் மாறும். எளிமையாகச் சொல்வதென்றால், எந்தவொருவர் உங்களோடு போரிட்டாலும் நீங்கள் போரிடாதீர்கள். மாறாக நீங்கள் அன்பைப் பொழியுங்கள். அவர் அவராக இருக்கட்டும். எனினும், நீங்கள் போரிடாதீர்கள். போர் முடிவுக்கு வந்து விடும்.

    கண்ணாடியில் தெரியும் உங்கள் உறவுகள் நல்லதாக இருந்தால், உங்களோடு நீங்கள் நல்ல உறவில் இருக்கிறீர்கள் என்று பொருள்.

    அவரவரோடு நல்ல உறவில் இருப்பது தான், பிரபஞ்சத்தோடு நல்லுறவில் நட்புறவில் இருப்பதாகும்.

    அதேபோல் உங்கள் கண்ணாடியில் மகிழ்ச்சி அதிகரித்து காணப்பட்டால், உங்கள் உள் உலகம் மகிழ்ச்சியாக உள்ளதென்று பொருள். பிரபஞ்சத்தோடு நல்ல உறவில் இருத்தல் என்பதும், உள் உலகில் மகிழ்ச்சியாக இருத்தல் என்பதும் வெவ்வேறானவை அல்ல.

    இரண்டும் ஒரே கருத்துடைய வெவ்வேறு சொற்றொடர்களே. ஆகவே, உள் உலகில் மகிழ்ச்சியாக இருப்பவரின் கையில் தான் பிரபஞ்ச செல்வ வங்கியின் திறவுகோல் வழங்கப்படும்.

    ஏனெனில், ஒரு நபர் உள்ளே எப்படி இருக்கிறாரோ, அதே மாதிரி அவருடைய வெளியுலகத்தை மாற்றியே ஆக வேண்டும் என்பது தான் பிரபஞ்சத்தின் முதற்கடமை.

    தன் கடமையிலிருந்து பிரபஞ்சம் ஒருபோதும் பிறள்வதில்லை. ஆகவே, செல்வ வங்கியின் திறவுகோல் உங்களுக்கும் வழங்கப் படும். நீங்கள் செல்வந்தர் ஆவீர்கள்.

  • Don’t open your mouth!!!

    Don’t open your mouth!!!

    வீடு வாங்கப் போகிறீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!!

    புதிய கார் வாங்கப் போகிறீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!!

    திருமணம் ஆகப் போகிறதா? வாயைத் திறக்காதீர்கள் !!!

    விடுமுறைக்குச் செல்கிறீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!!

    ஒரு கோர்ஸ் கற்றுக்கொள்ளப் போகிறீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!!

    பதவி உயர்வு கிடைத்ததா? வாயைத் திறக்காதீர்கள் !!!

    தொழிலில் லாபம் பார்த்தீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!!

    99% நேரம் நமது கனவுகள்/இலக்குகள் நிஜமாகாமல் இருப்பதற்குக் காரணம், தவறான நேரத்தில் தவறான நபர்களிடம் நாம் விரைவில் வாய் திறப்பதுதான்.

    “நண்பர்கள்” என்று கூறும் நபர்களுடன் நமது திட்டங்கள் அல்லது வெற்றிகளைப் பற்றி முன்னமே பகிர்வது தவறு.

    நீங்கள் நினைப்பது நடக்கும் முன் வாயைத் திறக்காதீர்கள் !!!

    உங்கள் “நண்பர்களில்” பெரும்பான்மை யானவர்கள், நீங்கள் சிறப்பாகச் செயல்படுவதைக் காண விரும்புகிறார்கள், ஆனால் அவர்களை விட நீங்கள் சிறந்து விளங்குவதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

    உங்களுக்கு ஒரு முக்கிய நினைவூட்டல்! சில குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட பொறாமை மறைந்திருக்கும்!!!

    ஆனால், பிரபஞ்சம் உங்களுக்காக வைத்திருப்பதை அவர்களால் தடுக்க முடியாது!

    புத்திசாலித்தனமாக இருங்கள், நினைவில் கொள்ளுங்கள் மீன் வாயை மூடினால் மீனவனின் கொக்கியில் அது மாட்டாது.

  • what is suicide?

    what is suicide?

    தற்கொலைக்குப் பின்னால் ஒரு செய்தி ஒளிந்திருக்கும். அந்தச் செய்தி கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

    மன நிம்மதியின்மையின் வெளிப்பாடே தற்கொலை.

    தாங்கொணா மன வலியின் வெளிப்பாடே தற்கொலை.

    சாக விரும்புவதல்ல, தற்போதைய மன வலியிலிருந்து விடுபடும் நோக்கில் நிகழ்வதே தற்கொலை.

    விரும்பாத ஒன்றை எதிர் கொள்ள முடியாமல் தப்பிக்கும் முடிவே தற்கொலை.

    ஒரு இக்கட்டான சூழலிருந்து வெளியேற வழியே இல்லை எனக் கருதி புதிய வழியை உருவாக்கும் முயற்சியே தற்கொலை.

    யார் மீதும் எனக்கு அன்பில்லை என்கிற பிரகடனமே தற்கொலை.

    இனி எதிர்காலமே இல்லை என்கிற நம்பிக்கையே தற்கொலை.

    ஒருவர் மீது நடத்தும் கொடூரமான தாக்குதலே தற்கொலை.

    என் அன்புக்குரியவரால் நான் கொல்லப் படுகிறேன் என்கிற செய்தி தான் தற்கொலை.

    எவ்வளவோ போராடியும் வெல்ல முடியாத ஒன்றை, இறுதியாக வென்று காட்டுவதே தற்கொலை.

    ‘இனி தாக்கு பார்க்கலாம்’ என்று அன்பிற்குரிய எதிரிக்குச் சவால் விடுவதே தற்கொலை.

    ‘என்னை வென்று விடு பார்க்கலாம்’ என்று யாரோ ஒருவருக்கு விடுக்கும் சவாலே தற்கொலை.

    ‘என் உயிரே போனாலும் உன் கொள்கையை நான் ஏற்க மாட்டேன்’ என்கிற அறைகூவலே தற்கொலை.

    ‘உன் கூண்டுக்குள் ஒருபோதும் நான் அடை பட மாட்டேன்’ என்று யாரோ ஒருவர் முன் ஏற்கின்ற சூளுரையே தற்கொலை.

    ‘உன் விருப்பப்படி என்னை இயக்க முடியாது’ என்று விடுக்கின்ற அறைகூவலே தற்கொலை.

    ‘உன் தாளத்துக்கு நான் நடனமாட மாட்டேன்’ என்கிற உறுதியான இறுதி மறுப்பே தற்கொலை.

    ‘இனியும் உன்னோடு நான் போராட விரும்பவில்லை. என்னை மன்னித்து விடு’ என்கிற அறிக்கையே தற்கொலை.

    தன் விருப்பத்தை உறுதியாக வெளிப் படுத்தும் முயற்சி தான் தற்கொலை.

    தற்கொலை என்பது ஒரு தண்டனை.

    ஒருவருடைய பலவீனத்தையே அவருக்கு எதிராகப் பயன்படுத்தி அவரைத் தோற்கடித்த அன்புக்குரியவருக்கு அவர் தருகிற தண்டனை.

    தற்கொலை என்பது பிரம்மாஸ்திரம்.

    இயலாமையின் வெளிப்பாடல்ல தற்கொலை. போரின் இறுதி அஸ்திரமே தற்கொலை.

    இரக்கமின்றித் துன்புறுத்திய நெருக்கமான நபர்களுக்கு கொடுக்கும் தண்டனையே தற்கொலை.

    மிக மிக அன்புக்குரிய ஒருவர் கொடுத்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எடுக்கும் முடிவே தற்கொலை.

    அன்புக்கான கதறலே தற்கொலை.

    உயிரினும் மேலாக அன்பு செலுத்தக் கூடிய நபரிடமிருந்து நமக்குரிய அன்பு கிடைக்கவில்லையே என்கிற குமுறலே தற்கொலை.

    யாரோ ஒருவரால் அல்லது சிலரால் இரகசியமாகச் செய்யப் படும் கொலையே தற்கொலை.

    தன்னைச் சார்ந்த அனைவரையும் ஒற்றைச் செயலில் குற்றவாளி ஆக்கும் தந்திரமே தற்கொலை.

    தன்னை வாழ விடாமல் தடுத்த நபர்களை, அவர்கள் மரணம் வரை குற்றவுணர்வோடு மருக வைக்கும் கொடூர தாக்குதலே தற்கொலை.

    என் விருப்பப்படி என் வாழ்க்கையை வாழ அனுமதிக்காத எவருடைய அடிமையாகவும் நான் உயிர் வாழ மாட்டேன் என்பதை ஆணித்தரமாகச் சொல்லும் செய்தியே தற்கொலை.

    நம் உயிரினும் மேலாக நாம் அன்பு செலுத்தக்கூடிய ஒரு நபர் நமக்கு இழைக்கும் துரோகத்தைத் தடுக்க முயன்றும், முடியாத போது அவர் மீது நடத்தப் படுகிற இறுதித் தாக்குதல் தான் தற்கொலை.

    மேற்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு செய்தி தான் தற்கொலை.

    தற்கொலையைக் கோழைத்தனமான, முட்டாள்தனமான முடிவு என்று கருதுவது அறியாமை.

    நொடிப் பொழுதில் உணர்ச்சி வயப் பட்டு எடுக்கப் படும் முடிவே தற்கொலை என்பதும் தவறு.

    இயன்ற வரை போராடிப் பார்த்து விட்டு, இறுதியாக எடுக்கும் முடிவே தற்கொலை.

    ஒவ்வொரு தற்கொலைப் பயணமும் மாதக் கணக்கில் நடந்த பிறகே தற்கொலையை அடைந்திருக்கிறது.

    தன்னைக் கை விட்டு விட்டு, வேறொரு நபருடன் கூடிக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் தன் இணையை அம்பலப்படுத்து வதற்காக, தன் காதலை ஏற்காத தன் பெற்றோரைப் பழியெடுப்பதற்காக, விரும்பியவரை அடைய முடியாமல் போய் விட்ட விரக்தி காரணமாக செய்யப் படுவதே பதின் பருவத் தற்கொலை.

    “தங்கள் இருப்பால் கூடப் பாதிக்கப் படாத ஒருவரைத் தங்கள் இழப்பால் பாதிக்கச் செய்ய முடியும் என்று நம்பித் தங்கள் உயிரை விடும் செயல்” அதாவது, “உயிரோடு போராடியே திருத்த முடியாத நபரை தன் உயிரைக் கொடுத்துத் திருத்த முயலும் செயலே தற்கொலை”

    இவ்வாறாகத் தற்கொலை செய்து கொண்டோரைப் பற்றி பலரும் பலவிதமாக வர்ணித்தாலும், “அன்புக்கான கதறலே தற்கொலை. தற்கொலை குறித்த மற்ற விவரணை அனைத்தும் உண்மையை மறைக்கும் சாக்குப் போக்குகளே” என்பதே இந்நூலின் கருத்து.

    இந்த அத்தியாயம் 2k Kids காதல் அறிவியல் நூலில் இருந்து. பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய தகவல்களின் களஞ்சியம் இந்த நூல்.

  • Relationship problems

    Relationship problems

    உறவில் சிக்கலை உருவாக்குவது ஒரு மன நோய்.

    செல்வந்தர் ஆகும் பயணத்தைத் தொடங்கிய பின் இந்த மன நோயால் தாக்கப்பட்டு, முகவரியற்ற மனிதராய் முடங்கிப் போன திறமைசாலிகள் ஏராளம்.

    இந்த மன நோய் தாக்கினால், மூளையின் பெரும் பகுதியை அந்த நோய் தரும் வலியே ஆக்ரமித்துக் கொள்ளும். அதனால், சிந்தனா சக்தியின் கூர்மை மழுங்கி மனிதரின் விழிப்புணர்வு குறைந்து விடும்.

    மனிதரின் விழிப்புணர்வு குறைந்து விட்டால், இருப்பதைத் தக்க வைப்பதே சிரமம். செல்வந்தராக உருவாகும் பயணத்தைப் பற்றி யோசிக்கக் கூட முடியாது.

    உறவுச் சிக்கலுக்கு எது காரணம்? மற்றவர் உங்களை விமரிசிக்கிறார். அல்லது நீங்கள் மற்றவரை விமரிசிக்கிறீர்கள். விமரிசனத்தால் மனம் காயப்படுகிறது. அக்காயமே உறவுச் சிக்கலை உருவாக்குகிறது. இது தான் பொதுவான கருத்து.

    இது சரியான கருத்தா? அல்லது எந்த உறவிலும் சிக்கல் ஏற்பட நாம் மட்டுமே காரணம். மற்றவர் என்பவர் நம் மனைவியாகவே இருந்தாலும், அல்லது நம் எதிரியாகவே இருந்தாலும், உறவுச் சிக்கலுக்கு மற்றவர் காரணம் அல்ல என்று புத்தர், ஏசு, கருத்தினர் போன்றோர் கூறுகிறார்களே. இது சரியான கருத்தா?

    எது சரியான கருத்து?

    உறவுச் சிக்கலுக்கு யார் காரணம்? அல்லது எது காரணம்? அல்லது உறவில் எவ்வாறு சிக்கல் உருவாகிறது?

    உங்கள் மனதுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால், உங்கள் வெளியுலகில் பிரச்சினை இருக்குமா?

    உதாரணமாக, உங்கள் மனைவியைப் பற்றி மோசமான கருத்து எதுவும் உங்கள் மனதில் இல்லாவிட்டால், மனைவியோடு சண்டை போட உங்களால் முடியுமா?

    அல்லது உங்கள் கணவனைப் பற்றி மோசமான கருத்து எதுவும் உங்கள் மனதில் இல்லாவிட்டால், உங்கள் கணவரோடு உங்களால் சண்டை போட முடியுமா?

    உங்கள் கணவர் அல்லது மனைவி வம்புக்கே நிற்கிறார். ஆனாலும் அவரை ஒரு குழந்தையாகவே நீங்கள் கருதுகிறீர்கள். அந்த நிலையிலும் உங்கள் இணையோடு போரிட உங்களால் முடியுமா?

    சண்டை என்பது என்ன? ஒருவருடைய செயலையோ, கருத்தையோ உங்களால் ஏற்க முடியவில்லை. அதனால் அவர் மீது உங்கள் மனதில் வெறுப்பு உருவாகிறது.

    அந்த வெறுப்பு எதிர்ப்பாய் வெளிப்படுகிறது. அது தான் சண்டை. கணவன் மனைவி சண்டை அவர்களுக்கு இடையே இருக்கும் அன்பின் அடையாளம் என்று சொல்வோர் இருக்கிறார்கள்.

    சமூகத்தைத் தவறாக வழி நடத்தும் அபத்தமான கருத்து இது.

    இக்கருத்தை ஏற்றுக் கொண்டால், “கூலிப்படை” வைத்துக் கணவனைக் கொல்வது, மனைவியைக் கொல்வது எல்லாம் அன்பின் உச்சம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே, கொஞ்சம் அறிவுபூர்வமாகவே நாம் சிந்தனை செய்வோம்.

    உங்கள் மனைவியின் செயலொன்று உங்களைப் பாதிக்கிறது. அப்பாதிப்பால் உங்கள் மனைவியைப் பற்றி ஒரு கருத்து உங்கள் மனதுக்குள் உருவாகி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

    உதாரணமாக, ஒரு விழாவுக்குச் “கோட்” போட்டுக் கொண்டு செல்கிறீர்கள். செல்லும் போது, பத்தாயிரம் ரூபாயை, “கோட்” பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்கிறீர்கள். விழா முடிந்து வந்து உங்கள் கோட்டை ஒரு இடத்தில் காற்றாடத் தொங்க விடுகிறீர்கள். ஆனால், அதில் வைத்த பணத்தை எடுக்க மறந்து விட்டீர்கள்.

    அடுத்த நாள் நினைவு வந்து, பணத்தை எடுக்க முனைந்த போது பணத்தைக் காணவில்லை. அடுத்தவர் எவரும் உங்கள் வீட்டுக்கு வரவில்லை. குழந்தைகளுக்கும் “கோட்” எட்டாது.

    ஆகவே, உங்கள் மனைவியைத் தவிர, வேறு எவரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பது உங்களுக்கு தெளிவாய்ப் புரிகிறது.

    அந்தப் புரிதலின் அடிப்படையில், உங்கள் மனைவியோடு நீங்கள் பேச விரும்புகிறீர்கள். ஆனால் பேசவில்லை. பேசினால் சண்டை வந்து விடுமோ என்று பேசாமல் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

    இந்த நிலையில் சில நாட்கள் கழித்து, “கோட்”டை உரிய வகையில் அதன் நிரந்தரமான இடத்தில் வைக்க முனையும் போது, கோட்டின் ஒரு பகுதியில் ஏதோ நெருடுகிறது. பார்க்கிறீர்கள்.

    அது கோட்டில் இருந்த ஒரு ரகசிய பாக்கெட்.

    நீங்கள் வைத்த பணம் அதில் பத்திரமாக இருக்கிறது. பணத்தைத் தேடிய நாளன்று இந்த ரகசிய பாக்கெட்டைக் கவனிக்கத் தவறியது இப்போது நினைவுக்கு வருகிறது.

    உங்கள் மனைவி தான் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டார் என்று உருவாக்கி வைத்திருந்த உங்கள் கருத்து முற்றிலும் தவறானது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள்.

    அதன்பிறகும் உங்கள் மனைவி குறித்த, உங்கள் கருத்தைப் பற்றி மனைவியோடு விவாதிக்க விரும்புவீர்களா?

    உங்கள் உள் உலகில் இருந்த சிக்கல் தீர்ந்து விட்டதால், உங்கள் வெளியுலகில் நீங்கள் தீர்க்க வேண்டிய சிக்கல் தானாகவே தீர்ந்து விட்டது என்பது புரிகிறதா?

    உங்கள் மனம் தான் உங்கள் உலகம். உங்கள் உலகில், உங்களைத் தவிர வேறு யாரும் இல்லவே இல்லை. அதாவது உடல் ரீதியாக எண்ணூறு கோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால், உள ரீதியாக உங்களைத் தவிர உங்கள் உலகில் யாரும் இல்லை. மற்றவர் என்கிற கண்ணாடியில் உங்கள் இருப்பைத் தான் நீங்கள் காண்கிறீர்கள்.

    உங்கள் மனதுக்குள் எதிரிகளே இல்லையென்றால் உங்கள் புற உலகில் எதிரிகள் இருக்க மாட்டார்கள். ஆகவே மற்றவரோடு உள்ள உறவுச் சிக்கல் உங்கள் மனதில் உள்ள சிக்கல்.

    மற்றவரோடு உள்ள உறவு, உங்களோடு உங்களுக்கு உள்ள உறவு.

    ஆகவே எந்த உறவுச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றாலும், அதை உங்களுக்குள் தீர்ப்பதே சரியான அணுகுமுறை.

    உள் உலகில் ஏற்படும் மாற்றமே புற உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    உங்கள் உள் உலகம் மாறாத வரை புற உலகம் ஒருபோதும் மாறாது.

    இந்தப் புரிதலே உறவுச் சிக்கலைத் தீர்ப்பதற்கான இரகசியம்.

    சரி. உள் உலகை எப்படி மாற்ற வேண்டும்?

    மனதிலிருந்து காழ்ப்பு, வெறுப்பு, எதிர்ப்பு, பகை போன்ற மோசமான உணர்ச்சிகளை யார் மீது நீங்கள் கொண்டிருந்தாலும், அவற்றை உடனே வெளியேற்றி உங்கள் மனதைச் சுத்தப் படுத்த வேண்டும்.

    அதன்பின், மேற்கண்ட மோசமான உணர்ச்சிகளால் மாசு அடையாதவாறு உங்கள் மனதுக்கு அரண் அமைக்க வேண்டும்.

    இந்த இரண்டையும் செய்தால் போதும்.

    உங்கள் வாழ்வில் உறவுச் சிக்கல் எழவே எழாது.

    சரி. மோசமான உணர்ச்சிகளை மனதிலிருந்து வெளியேற்றி, மனதைச் சுத்தப் படுத்துவது எப்படி? அதன் பின், மோசமான உணர்ச்சிகளால் மாசு அடையாதவாறு மனதுக்கு அரண் அமைப்பது எப்படி?

    மனதைச் சுத்தப்படுத்த வேண்டுமானால், நம் உணர்ச்சிகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    உதாரணமாக, கோப உணர்ச்சி எவ்வாறு உருவாகிறது?

    நாம் விரும்பியதைப் போல் மற்றவர் நடந்து கொள்ளாத போது, அல்லது நம் விருப்பத்துக்கு விரோதமாக மற்றவர் நடந்து கொள்ளும் போது, நம் மனதில் கோபம் என்கிற உணர்ச்சி உருவாகிறது.

    அப்படியெனில், நம் கோபத்துக்கு மற்றவர் காரணமா? அல்லது நம் மனதில் இருந்த விருப்பம் காரணமா?

    நம் உணர்ச்சிகள் எவ்வாறு உருவாகின்றன?

    நம் எண்ணங்களால் நம் உணர்ச்சிகள் உருவாகிறதா?

    அல்லது அடுத்தவர் செயலால் நம் உணர்ச்சிகள் உருவாகிறதா?

    தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு கற்பனை.

    இரவு கணவனோடு உறவாட மனைவி மறுத்து விட்டாள். கணவன் கட்டிலிலிருந்து கீழே இறங்கிப் படுத்துக் கொள்கிறான். ஆனால் அவன் உடல் அவனை உறங்க விடவில்லை.

    நம்மைப் போல் தானே மனைவிக்கும் உடற் பசி இருக்கும். ஆனால், ஏன் மறுக்கிறாள்? வேறு எவனோ தீனி போடுகிறானோ? என்கிற எண்ணம் அவன் மனதில் எழுவதாக வைத்துக் கொள்வோம்.

    அந்த எண்ணம் மனைவியின் மீது கோபம், சந்தேகம் போன்ற உணர்ச்சிகளை முதலில் உருவாக்கும். பிறகு காழ்ப்பு, வெறுப்பு உணர்ச்சிகளாக அது மாறும். அப்படியே அவன் தூங்கி விடுகிறான்.

    எந்த உணர்ச்சியோடு உறங்கச் செல்கிறோமோ, அந்த உணர்ச்சியோடு தான் காலையில் விழித்தெழுவோம்.

    உணர்ச்சிகளை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் சாதனம் உடல்.

    அதனால் அந்தக் கணவனின் உடல் அடுத்த நாள் முழுவதும் கோபம், காழ்ப்பு, வெறுப்பு, சந்தேகம் போன்ற உணர்ச்சிகளை, உச்சரிக்கும் வார்த்தை, பார்வை, குரல், முகத்தின் கருமை போன்ற உடல் மொழி வாயிலாக விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கும்.

    உள்ளத்தில் இருப்பதை மறைக்க உடலுக்குத் தெரியாது.

    அகத்தை மறைக்க யாராலும் முடியாது.

    அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தே தீரும்.

    பொய் பேச உடலுக்கு அறவே தெரியாது.

    கற்றுக் கொடுத்தாலும் உடலால் பொய் பேச முடியாது.

    உளவியல் கற்றவராயினும் உடல் மூலம் தகவல் கசிந்தே தீரும். அதனால், அவனைச் சுற்றியுள்ள அனைவருமே உடல் மொழி மூலம் அவன் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் அவனுடைய அந்தரங்க செய்தியைக் கவனிப்பார்கள்.

    கவனிப்போர் அனைவரும் சிறிதளவேனும் பாதிக்கப் படுவார்கள். அவனுடைய மனைவி நிச்சயம் பாதிக்கப் படுவாள். அந்த பாதிப்புக்கு ஏற்ப அவள் எதிர்வினை ஆற்றுவாள். குழந்தையை அடிக்கலாம். பாத்திரங்களை உருட்டலாம். அவன் பெற்றோரைத் திட்டலாம். அல்லது உணவில் சற்றே உப்பை அதிகரிக்கலாம்.

    ஏற்கெனவே கோபத்தில் உள்ள கணவன், மனைவியின் எதிர் வினைக்கு ஏற்ப அதிகமாகப் பாதிக்கப் படுவான். அது ஆத்திரம் என்கிற உணர்ச்சியை அவன் மனதில் உருவாக்கும்.

    ஆத்திர உணர்ச்சி ஒரு மோசமான போதை. ஆதாரம். சாத்தான் குளம்.

    மதுப் பிரியர் தன் மனதில் இருப்பதை எல்லாம் உளறி விடுவார் என்று சொல்கிறார்கள். இது பொய். ஆனால், ஒருவரை ஆத்திரப் படுத்தினால், அவர் இரணகளப் படுத்தி விடுவார். நம்மைப் பற்றி அவர் மனதில் மறைத்து வைத்துள்ள கருத்துக்கள் அனைத்தையும் அவர் கக்கி விடுவார் என்பது உண்மை. ஆத்திர உணர்ச்சி ஒரு மோசமான போதை.

    ஆத்திர போதைக்கு ஆளான கணவன், தன் சந்தேகத்தை அவனுக்கே தெரியாமல் கசிய விட்டு விடுவான்.

    அதாவது கள்ளத் தனமாய்த் தன்னோடு உறவாடும் அடுத்தவன் மனைவியைக் கூட கற்புக்கரசி என்று கருதுவதும், தன்னோடு உறவாட மறுப்பவள் தன் மனைவியாகவே இருந்தாலும் அவள் நடத்தையைப் பழிப்பதும் ஆணின் இயல்பு.

    பாலுறவுக்குப் பின் சில நாட்கள் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்ளும் என் கணவர், மறுத்தால் மட்டும், “வே…..” என்று திட்டுகிறார் என்று பல பெண்கள் என்னிடம் கூறியுள்ளார்கள்.

    “வே…”என்கிற ஒரு வார்த்தை போதும்.

    அவன் மனைவியும் ஆத்திர உணர்ச்சிக்குள் விழுந்து விடுவாள்.

    ஆகவே, “ஆமாடா. நான் வே….. தாண்டா. கையாலாகாத நாயே” என்று தன் கணவனைப் பற்றி தன் மனதில் உருவாக்கி வைத்துள்ள கருத்தைக் கசிய விட்டபடியே பாத்திரத்தைத் தூக்கி வீசுவாள். கணவனின் ஆத்திரம் அதிகரிக்கும்.

    அதனால், “யாரைப் பார்த்து என்ன சொன்னாய்? நானா கையா லாகாத நாய்? எத்தனை பேர் என் முன் கை கட்டி நிற்கிறார்கள் தெரியுமா? தெரு நாய் மாதிரி, நீ தான் அலைகிறாய். எவனிடமோ போய்த் தொலை” என்று ஏசிய படியே கையையும் நீட்டி விடுவான்.

    அதன் விளைவாய் ஆறு மாதம் அவன் கை வேலை செய்ய நேரலாம்.

    சில நேரங்களில் நிரந்தரப் பிரிவையும் இது உருவாக்கி விடலாம்.

    இனி வேறோரு வகையில் கற்பனை செய்து பார்க்கலாம்.

    எண்ணங்களை மாற்றினால் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

    இது நல்ல கற்பனை. அதனால், இந்தக் கற்பனையில் உங்களையே நாயகனாக நினைத்துக் கொள்ளுங்கள்.

    கேட்கிறீர்கள். மறுத்து விட்டார். வழக்கம் போல் என்னவோ செய்கிறீர்கள். அப்போது, நம்மைப் போல் தானே உடற்பசி இருக்கும். ஆனால் ஏன் மறுக்கிறாள் என்கிற சிந்தனை எழுகிறது.

    விருந்தை யாரேனும் அருந்த மறுப்பரா? ஆனால், என் படைப்பு விருந்தாக இல்லாமல் மருந்தாக இருக்கிறதோ? அடங்கிக் கிடக்கும் காமத்தைத் தூண்டி விட்டு விட்டு, தணிக்காமலே நான் தூங்கி விடுகிறேனோ? ஒரு பொருளைப் போல் என் மனைவியை நான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறேனோ? அதனால் தான் மறுக்கிறாளோ?

    அவள் உடல் வேறு. என் உடல் வேறு. உடலில் என்ன பிரச்சினையோ?

    பணிப் பளுவால் களைப்பாக இருக்கலாம்.

    மன உளைச்சல் இருக்கலாம். அவள் பெற்றோரின் உடல்நிலை பற்றிக் கவலை இருக்கலாம். அவள் பிரச்சினை அவளுக்கு.

    கொடுக்கும் போது இணையாக, மறுக்கும் போது தனியாக நாம் அனுபவித்துக் கொள்வோம். திருமணத்துக்கு முன் பெண் வாடையே இல்லாமல் சுயத்தைத் தானே நம்பிக் கொண்டிருந்தோம்.

    ஆனால், இப்போது வாடையை நுகர முடிகிறது. அருகில் படுத்து உறங்க முடிகிறது. அவ்வப்போது பெண் அளிக்கும் சுகமும் கிடைக்கிறது.

    ஆகவே, திருமணத்துக்கு முன் இருந்ததை விட, சிறப்பாகத் தானே இருக்கிறோம் என்று எண்ணுவதாய் வைத்துக் கொள்வோம்.

    இப்படிப்பட்ட எண்ணங்கள் அனுதாபம், பரிதாபம், கருணை போன்ற உணர்ச்சிகளைத் தான் உருவாக்கும்.

    இவை அன்பின் மூல உணர்ச்சிகள்.

    அன்பின் மூல உணர்ச்சிகளோடு உறங்கத் தொடங்கிய நீங்கள் காலையில் அன்பானவராகத் தான் விழிப்பீர்கள். அதனால் உங்கள் உடல் அன்பை ஒளி பரப்பும் கேந்திரமாய் இருக்கும்.

    உச்சரிக்கும் வார்த்தை, பார்வை, குரலின் தொனி, முகத்தின் செழுமை போன்ற உடல் மொழி வாயிலாய், நாள் முழுதும் உங்கள் அன்பைத் தான் நீங்கள் ஒளி பரப்பிக் கொண்டிருப்பீர்கள்.

    உங்களைச் சுற்றியுள்ள அனைவருமே உங்கள் அன்பை உணர்வார்கள். மனைவியும் உணர்வார். உணர்ந்ததன் எதிர் வினையாக முத்தம் கிடைக்கலாம். இரவு விருந்தும் கிடைக்கலாம்.

    எண்ணங்கள் எவ்வாறு உங்கள் உணர்ச்சிகளை உருவாக்குகின்றன? உணர்ச்சிகள் எவ்வாறு அனுபவங்களை உருவாக்குகின்றன? உங்கள் உள் உலகம், உங்கள் வெளி உலகை எவ்வாறு பாதிக்கிறது? என்பதற்கு இது தான் தெளிவான விளக்கம்.

    “செக்ஸ்” விவகாரத்தை உதாரணமாகப் பயன்படுத்தினால், சொல்லப் படும் கருத்து எளிதாய் உங்கள் ஆழ் மனதைச் சென்றடைந்து விடும் என்கிற ஒரே காரணத்துக்ககத் தான், “செக்ஸ்” விவகாரத்தை நான் உதாரணமாய்ப் பயன் படுத்தி இருக்கிறேன்.

    நம் எண்ணங்களால் நம் மனதில் உணர்ச்சிகள் உருவாகின்றன. அந்த உணர்ச்சிகளின் அடிப்படையில் நாம் இயங்கிறோம். அந்த இயக்கம் குறிப்பிட்ட வகையான அனுபவத்தை நமக்கு வழங்குகிறது.

    ஆனால், நாம் நம் எண்ணத்தை மாற்றும் போது வேறு வகை உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவற்றின் அடிப்படையில் இயங்கும் போது, அந்த இயக்கம் வேறு வகையான அனுபவத்தை வழங்குகிறது. என்பதை நாம் தெளிவாகப் பார்த்து விட்டோம்.

    உள் உலகை மாற்றும் போது, அதாவது உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றும் போது, அந்த மாற்றத்தின் விளைவாக உங்கள் வாழ்வியல் அனுபவங்கள் மாற்றமடைகின்றன என்பது இப்போது தெளிவாகப் புரிகிறது அல்லவா?

    இதிலிருந்து, உங்கள் உள் உலகை மாற்றுவதன் மூலம் உங்கள் வெளியுலகில் நீங்கள் விரும்பும் வாழ்வியல் மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதும் புரிகிறதல்லவா?

    ஒரு விசயத்தைப் பல கோணங்களில் சிந்தித்துப் பார்த்துச் சரியான கருத்தை மனதில் உருவாக்குபவரே மேதை.

    சிந்திக்கும் கோணத்தை பல்வாறாகத் திருப்பிப் பாருங்கள். செழுமையான எண்ணங்கள் பிறக்கும். செழுமையான எண்ணங்களின் விளைச்சலே நல்ல உணர்ச்சிகள். உங்கள் உணர்ச்சிகளே உங்கள் புற உலகைத் தீர்மானிக்கும் காரணிகள்.

    உங்கள் மன உலகில் சிக்கல் இல்லையென்றால், உங்கள் புற உலகில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. உங்கள் எதிரியை மனதுக்குள் நீங்கள் உருவாக்குகிறீர்கள். அதன் நீட்சி தான் புற எதிரிகள்.

    ஆகவே, உங்கள் மனதுக்குள் உள்ள சிக்கலைத் தீர்ப்பது தான், உறவுச் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரே வழி.

    உங்கள் மனதில் ஒருவரைப் பற்றிக் கருவிக் கொண்டிருந்தால், உடல் மொழி மூலம் உங்கள் வெறுப்பு அவரைச் சென்றடைந்து விடும். விழிப்போடு செயல் பட்டாலும் உடல் காட்டிக் கொடுத்து விடும்.

    உங்கள் உள்ளத்தைக் கண்ட எதிராளி, உங்களிடமிருந்து வந்ததை உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பார். மேலும், தான் பெற்றதைப் பன் மடங்காக அதிகரித்தும் கொடுப்பார். அப்படிக் கொடுக்கும் போது தான் உறவில் சிக்கல் உருவாகிறது.

    ஆகவே, மற்றவருடன் உள்ள உறவுச் சிக்கல், உங்கள் மனதுக்குள் உள்ள பிரச்சினையால் உருவாகிறது. மற்றவரால் போர் உருவாவதில்லை. உங்கள் மனதுக்குள் ஒரு போர் நடக்கிறது. அந்தப் போர் தான், மற்றவரோடு சிக்கலை உருவாக்குகிறது.

    ஆகவே, உறவுச் சிக்கலைப் பேசியெல்லாம் தீர்க்க முடியாது.

    உங்கள் உள் உலகில் உள்ள சிக்கலைத் தீர்க்காமல் பேசும் போது, சிக்கல் அப்போதைக்குத் தீர்கிற மாதிரி தெரியும். ஆனால், எதிர்பாரா நாளில் அது பூகம்பம் போல் வெடிக்கும்.

    வெளியுலகில் உள்ள பிரச்சினையை அதோடு நேராக மோதித் தீர்க்க முடியாது. நமக்கு உள்ளே புகைந்து கொண்டிருக்கும் தீயை முதலில் அணைக்க வேண்டும்.

    உள்ளிருந்து வெளிப்புறம் நோக்கிப் பயணிப்பதே, உறவுச் சிக்கலை நிரந்தரமாய்த் தீர்ப்பதற்கான ஒரே வழி.

    மனதுக்குள் உள்ள சிக்கல் தீர, நம் சிந்தனையில் மாற்றம் நிகழ வேண்டும். சிந்தனை மாற்றமே வெளியுலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    நம் மன மாற்றமே மற்றவர்களை மாற்றும் மந்திரம்.

    இனியொரு கோணத்திலும் உறவுச் சிக்கலைப் பார்க்கலாம்.

    உங்கள் வாழ்வில் உறவுச் சிக்கல் இருந்தால், பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியாய் அதை நீங்கள் பார்க்க வேண்டும்.

    “உன் உளவியல் திறன் சற்றே பலவீனமாக இருக்கிறது. ஆகவே, உன்னை உளவியல் ரீதியாக வளர்த்துக் கொள்.” என்று பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பிய இரகசிய தகவல் தான் உறவுச் சிக்கல்.

    சிந்தனையின் கோணத்தை மாற்றினால், கருத்துக்கள் மாறும்.

    கருத்துக்கள் மாறும் போது சிக்கல், சிக்கலாய்த் தெரியாது. வளர்வதற்கான வாய்ப்பாய்த் தெரியும். மற்றவர் தவறுகள் தவறுகளாகத் தெரிவதற்குப் பதில், நமக்கான கல்வியாகத் தெரியும்.

    மனதுக்குள் உள்ளார்ந்த இணக்கம் இருப்பதால், மற்றவர்களின் தவறுகளால் உங்கள் மனம் பாதிப்படையாது.

    எதிர் மறைக்குப் பதில் நேர்மறைச் சிந்தனை தோன்றும்.

    நேர்மறையாளர்கள் வாழ்வில் உறவுச் சிக்கலே உருவாகாது.

    நாம் நேர்மறையாகி விடுகிறோம். ஆனால் எதிர்மறைச் சிந்தனையாளர் வம்புக்கு வந்தால் நாம் என்ன செய்வது? அப்போது உறவுச் சிக்கல் ஏற்படுமே என்று நீங்கள் கேட்கலாம்.

    அனைத்தும் நன்மைக்கே என்று கருதுபவரை யாராலும் அவமதிக்க முடியாது. வம்புக்கு இழுக்கவும் முடியாது. ஏனெனில், உங்கள் மனதில் இல்லாத ஒன்றைப் பிறரால் ஒருபோதும் பிரதிபலிக்க முடியாது.

    மேலும், நம்மோடு வம்புக்கு வருபவர் நமக்கு இழப்பை ஏற்படுத்த விரும்புகிறார் அல்லது நாம் வைத்திருக்கும் ஒன்றைப் பறிக்க அல்லது தடுக்க முயல்கிறார் என்று எண்ணுகிறோம். அது உண்மையல்ல.

    அவர் மனதில் மோசமான உணர்ச்சி உள்ளது. அதன் காரணமாகத் தான் அவர் வம்புக்கு நிற்கிறார். அவர் சிந்திக்கத் தெரியாத மன நோயாளி.

    ஆகவே, அவர் மீது அனுதாபம் தான் கொள்ள வேண்டும். அவரோடு வாதாடக் கூடாது. பைத்தியத்துக்குத் தேவை வைத்தியம். வம்புக்கு வருபவர் வாழ்க்கைத் துணையாக இருந்தால், அவருக்கான ஒரே வைத்தியம் தந்த்ரா வழியில் தாம்பத்யம்.

    யாருக்குப் பைத்தியம் பிடித்தாலும் அதன் மூலம் காமமே. வேறு எந்தக் காரணத்தாலும் மனிதர்க்குப் பைத்தியம் பிடிக்காது.

    வம்புக்கு வருபவர் வேறு உறவாக இருந்தால், மனதை வருடிக் கொடுக்கும் அன்பான வார்த்தைகளே சரியான மருந்து.

    உணர்ச்சி வசப் படாமல் உரையாட வேண்டும். தேவைப் பட்டால், எந்த உறவையும் நாம் கட்டித் தழுவலாம். கட்டிப் புடி வைத்தியத்தால் அரை குறைப் பைத்தியங்களைக் குணப் படுத்த முடியும். இவ்வாறு செயல் பட்டால் உறவுச் சிக்கல் காணாமல் போய் விடும்.

    உறவுச் சிக்கல்களிலிருந்து நாம் மீளும் போது, கவலைப்படுவது, கறுவுவது அல்லது பிறரை வெறுப்பது போன்றவற்றின் மூலமாக வீணாகும் ஆற்றலை நாம் முழுமையாகத் தடுத்து விடலாம். அதனால் நம் சிந்தனா ஆற்றல் நம் இலக்கை நோக்கித் தடங்கலின்றிப் பயணிக்கும்.

    “நீங்கள் எதை வெறுக்கிறீர்களோ அது வளரும்.” உங்களால் வெறுக்கப் படுபவர் உங்களை விட உயர்வாய் வளர்வார்.

    ஆனால், வெறுப்பு உணர்ச்சிகளை உங்கள் மனதிலிருந்து நிரந்தரமாக நீங்கள் அகற்றி விட்டதால், நீங்கள் பிரபஞ்ச விதியைப் பின்பற்றி நடக்கும் மனிதராகி விடுகிறீர்கள்.

    பிரபஞ்ச விதியைப் பின்பற்றி நடப்போர், பிரபஞ்சத்தால் பாதுகாக்கப் படுவார்கள் என்று மற்றொரு பிரபஞ்ச விதி இருக்கிறது. அதனால் நீங்கள் பிரபஞ்சத்தால் பாதுகாக்கப் படுவீர்கள்.

    பிரபஞ்சத்தின் பாதுகாப்பு இருக்கும் போது, அச்ச உணர்வே உருவாகாது. அச்சமற்றவராக நீங்கள் மாறும் போது, உங்களைப் பாதிக்கும் விசயங்களைச் செய்யும் துணிச்சல் பிறருக்கு வராது.

    ஒருக்கால், அடுத்தவர்கள் உங்களிடமிருந்து எதையேனும் தட்டிப் பறித்துக் கொண்டாலும் பிரபஞ்சம் அதைச் சரிக் கட்டி விடும்.

    நீங்கள் விரும்பும் ஒன்றை மற்றவர்கள் தடுத்து நிறுத்தினால், மற்றவர்களால் நெருங்க முடியாத வேறொரு வழி மூலமாக, பிரபஞ்சம் அதை உங்களுக்கு அனுப்பி வைக்கும்.

    ஆகவே உங்கள் வாழ்வில் நிலவும் உறவுச் சிக்கல்கள் அனைத்தும் உங்கள் மனதுக்குள்ளே உள்ள சிக்கல்களின் பிரதிபலிப்பே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    அந்தப் புரிதலின் அடிப்படையில், உங்கள் வாழ்வில் நிலவும் உறவுச் சிக்கல் காணாமல் போக, உங்கள் உள் உலகத்தின் கருத்துகளை நேர்மறையாக மாற்றுங்கள்.

    உறவுச் சிக்கலுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதற்காகப் பிறரிடம் இருந்து பாராட்டை எதிர் பார்க்காதீர்கள். எதிர் பார்ப்பது உடனே கிடைக்காத போது வருத்தம் உருவாகும். வருத்தம் ஒரு மோசமான உணர்ச்சி. மனதின் அருகே அதை அண்ட விடாதீர்கள்.

    ஆனால், நீங்கள் பாராட்டுங்கள். பாசாங்கின்றிப் பாராட்டுங்கள்.

    பிறரைப் பாராட்டும் போது பாராட்டுபவரின் மனோ சக்தி பலம் அடையும். வெறுக்கும் போது மனோ சக்தி பலவீனமடையும்.

    மனோ சக்தி தான் சாதிக்கும் ஆற்றல்.

    உறவில் சிக்கல் அகல இனியொரு வழி, அன்பைப் பொழியுங்கள். நிபந்தனையின்றி நீங்கள் அன்பைப் பொழியும் போது மற்றவர் உங்களை நேசித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருக்கால் மற்றவர் நேசிக்கா விட்டாலும் கூட, நீங்கள் அன்பைப் பொழியுங்கள்.

    நம்மை நேசிக்காதவர் மீதும் அன்பைப் பொழிவதற்குப் பெயர் தான், “ஆன்மீக விழிப்புணர்வு.”

    உங்கள் ஆன்மீக விழிப்புணர்வால் உங்கள் உறவு செழித்தே தீரும். ஏனெனில், ஆன்மீக விழிப்புணர்வுடைய மனிதரை யாராலும் தொடர்ந்து வெறுக்க முடியாது. மற்றவர் உங்களை நேசித்தே தீர்வார்.

    ஆகவே உறவு மலர்ந்தே தீரும்.

    சிக்கலான உறவு மீண்டும் மலரும் போது அதன் மலர்ச்சி மிகவும் அழகாகவும், அனுபவிப்பதற்கு அதிக சுகமானதாகவும் இருக்கும்.

    உறவுச் சிக்கலுக்கு நாம் பொறுப்பேற்கும் போது, மற்றவர் குறித்துத் தீர்ப்பளிக்க மாட்டோம். தீர்ப்பின் அடிப்படையில் குறை கூற மாட்டோம். அதனால், குறை கூறல் மூலம் வீணாகும் சக்தி பாதுகாக்கப் படும்.

    மற்றவர்களோடு பிரச்சினை வராது. சண்டையிடவோ, வாதாடவோ நேரம் ஒதுக்கத் தேவையிருக்காது. தற்காத்துக் கொள்ள வேண்டிய அழுத்தம் குறையும். அதனால், உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.

    மற்றவரை ஏற்றுக் கொள்வது சுலபமாக இருக்கும். மற்றவரை ஏற்றுக் கொள்ளும் போது மனதில் எதிர்ப்பு இருக்காது. மற்றவரை எதிர்க்காத போது மற்றவர் மாறத் தொடங்குவார்.

    ஆகவே மற்றவர்க்கு எதிரான எதிர்ப்பையோ, வெறுப்பையோ, கோபத்தையோ, காழ்ப்புணர்வையோ உங்கள் மனதில் உணரும் போது, நீங்கள் எச்சரிக்கையாக அவற்றை அகற்றி விட வேண்டும். உங்கள் மனதில் எந்த எதிர்ப்பும் இருக்கக் கூடாது.

    உங்கள் மனதில் எதிர்ப்பு இருந்தால், மற்றவரிடமிருந்து எதிர்ப்பையும் நிராகரிப்பையும் தான் நீங்கள் சந்திப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் அறியாத நிலையிலேயே மற்றவர்களை எதிர்ப்பீர்கள். நிராகரிப்பீர்கள். அதனால், அதைத் தான் மற்றவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.

    ஆகவே, உங்கள் மனதில் இருந்து எதிர்ப்பு, வெறுப்பு, காழ்ப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை நிரந்தரமாக அகற்றி விடுங்கள். அவற்றை நீங்கள் அகற்றும் போது, மற்றவர் உங்களை ஏற்றுக் கொள்வார்.

    மேலும், உறவுச் சிக்கல்கள் அனைத்துக்கும் மூலம், உங்கள் அன்பு நிபந்தனை அற்றதாய் இல்லை. உங்கள் தரப்பில் நிபந்தனை உள்ளது. அந்த நிபந்தனையைக் கண்டு பிடித்து உதறுங்கள். நெருங்கிய உறவுகளோடு உள்ள உறவுச் சிக்கல் முடிவுக்கு வந்து விடும்.

    நிபந்தனையின்றி அன்பு செலுத்துவதே, “உண்மையான அன்பு.” உண்மையான அன்பு இருக்கும் மனதில் தான் உறவு மலரும். அந்த உறவில் சிக்கல் எழ வாய்ப்பே இல்லை. ஆகவே நிபந்தனையின்றி அன்பு செலுத்தும் நபராக மாறுங்கள். உறவுச் சிக்கல் இருக்காது.

    அதனால், வீண் விதண்டா வாதங்கள், நியாயப் படுத்தல்கள், வெட்டிச் சண்டைகள், அதன் பின் அவற்றை எண்ணிக் குமுறிக் கொண்டிருத்தல் போன்றவற்றால் உருவாகும் வலிகளைத் தவிர்த்து விடலாம். அதனால், மனம் நிம்மதியாக இருக்கும்.

    மனம் நிம்மதியாய் இருக்கும் போது ஆற்றல் கூர்மையாக இயங்கும். ஆற்றலின் கூர்மையான இயக்கமே செறிவான சிந்தனைக்கு மூலம். செறிவான சிந்தனையே செல்வந்தராய் ஆக்கும் சிந்தனை. ஆகவே, உங்கள் வாழ்வில் உறவுச் சிக்கலே உருவாகாமல் இருக்க, கீழ்க்கண்ட சூளுரையை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

    எந்த உறவோடு சிக்கல் ஏற்பட்டாலும், அதற்கு என் எண்ணங்களே பொறுப்பு. எனக்குள் நடக்கும் போரே அதற்குப் பொறுப்பு. ஆகவே, உறவுச் சிக்கலுக்கு நானே பொறுப்பு என்று நான் பிரகடனம் செய்கிறேன்.

    இவ்வாறு கூவி, “உறவுச் சிக்கலுக்கு நாமே காரணம்” என்கிற கருத்தை ஆழ் மனதில் பதித்து விட்டால் போதும். செல்வந்தராக உருவாகும் பயணத்திலிருந்த ஒரு மன நோய் அகன்று விடும்.

    அதனால், எளிதாக நீங்கள் செல்வந்தராக மலர்வீர்கள்.


    பிறப்பால் அல்லாமல், திட்டமிட்டு செல்வந்தராக உருவாக
    விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பிரபஞ்ச விதிகள் செல்வத்தை ஈர்க்கும் இரகசியம் சொல்லாத இரகசியம் எனும் நூலில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது படித்து பயனடைய வாழ்த்துக்கள்.

    உங்கள் உறவினர், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

  • It is not God who punishes

    It is not God who punishes

    ஏமாற்றுக்காரனும் துரோகியும் கடவுளால் தண்டிக்கப் படுவான். நமக்குக் கெடுதல் செய்தவனைக் கடவுள் தண்டிப்பார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் கூறி மனித மனதில் தவறான நம்பிக்கை ஊட்டப் பட்டிருக்கிறது.

    இது ஒரு பொய். காட்டுமிராண்டிகளை ஒழுங்கு முறைக்குள் கொண்டு வருவதற்காகத் திட்டமிட்டுச் சொல்லப்பட்ட பொய் இது.

    காட்டுமிராண்டிகள் முரடர்கள். முரடனின் இனியொரு பெயர் தான் முட்டாள். முட்டாள் தனமான ஒரு நபரால் பெருந் தன்மையாகச் சிந்திக்க முடியாது. ஆகவே, முட்டாள்கள் அனைவரும் கீழ் மக்களே.

    அச்சமே கீழ்களது ஆசாரம். அச்சுறுத்துவதன் மூலம் மட்டுமே ஒரு ஒழுங்கு முறைக்குள் கீழ்மக்களைக் கொண்டு வர முடியும்.

    ஆகவே, சமூக அமைப்பை உருவாக்கிய போது, காட்டு மிராண்டிகளை ஒழுங்கு முறைக்குள் கொண்டு வருவதற்காக, அவர்களை அச்சுறுத்த வேண்டியிருந்தது.

    மனிதர்களைக் காட்டியெல்லாம் ஆழ்மன அச்சத்தை உருவாக்க முடியாது அதனால், அன்றைய ஞானிகள் கடவுளின் பெயரைப் பயன் படுத்தினார்கள். வஞ்சகனையும், துரோகியையும் கடவுள் தண்டிப்பார் என்கிற கருத்து அவ்வாறு அச்சுறுத்துவதற்காகச் சொல்லப்பட்ட கருத்து.

    அது தான் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப் பட்டு நம் காலம் வரையிலும் ஒவ்வொருவர் மனதிலும் பதிக்கப் படுகிறது.

    ஒரு நபர் குழந்தையாக இருக்கும் போது இந்த நம்பிக்கை ஆழ்மனதில் பதிக்கப் படுகிறது. ஏனெனில் குழந்தைகளின் ஆழ்மனம் ஏழு வயது வரை திறந்தே இருக்கக் கூடியது. ஏழு வயதிற்குப் பிறகு தான் மேல்மனம் என்கிற காவலாளியை ஆழ்மனம் நியமிக்கிறது.

    மேல்மனம் என்கிற காவல்காரனை நியமிக்காத, அப்பாவித்தனமான குழந்தைப் பருவத்தில், குறும்பு செய்தால் கடவுள் மூக்கை அறுத்து விடுவார் என்று மிரட்டத் தொடங்கிய போது ஆழ்மனதில் நுழைந்த தவறான நம்பிக்கை இது.

    பெற்றோராலும், சுற்றுப்புறத்தாலும், ஆசிரியர்களாலும் நாம் வளர்க்கப் படுகிறோம். தவறு செய்தவனைக் கடவுள் தண்டிப்பார் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப் பட்டிருந்தது. அதையே அவர்கள் தன்னுணர்வற்ற நிலையில், நமக்கும் ஊட்டி விடுகிறார்கள்.

    வாழ்வியல் விவகாரங்களில் நாம் சுயமாகச் சிந்திக்கக் கூடியவர்கள் அல்ல. அடுத்தவர்களுடைய பிரதிகள்.

    பெற்றோரால், சுற்றத்தாரால், அண்டை அயலாரால், மற்றும் ஆசிரியர்களால் அவர்களுடைய அறிவிற்கேற்ப பக்குவப் படுத்தப் பட்டுள்ள இயந்திரங்களாகவே நாம் செயல் பட்டுக்கொண்டிருக்கிறோம்.

    குழந்தையாயிருந்த போது உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளின் அடிப் படையிலேயே நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். காமத்தைப் பற்றி நம்மிடமுள்ள தவறான கருத்துக்களும் அப்படிப்பட்டவையே.

    அடுத்தவர்களால் அவர்களுடைய நம்பிக்கைகளுக்கேற்ப, அனுபவங்களுக்கேற்ப, தகுதிக்கேற்ப நம்முடைய மனம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதனால் தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு தவறான நம்பிக்கை.

    துரோகிகளையும், வஞ்சகர்களையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும் கடவுள் தண்டிப்பார் என நம்புவது, வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டுள்ள மனிதனை மென்மேலும் வீழ்ச்சியடையச் செய்கிறது.

    நம்மை ஏமாற்றியவனுக்கு தண்டனை கிடைக்கும், கெட்டது நடக்கும் என்று நம்புவது மிகப் பெரிய ஆபத்து. தவறான நம்பிக்கைகளிலேயே தலையாயது.

    ஒரு வஞ்சகச் செயலுக்கோ, துரோகத்திற்கோ நாம் ஆளாகும் போது, அதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஏதேனும் ஒரு வகையில் மோசமாகத் தண்டிக்கப் படுவார்கள் என்று நாம் நம்புகிறோம்.

    இந்த நம்பிக்கை முதலில் ஒரு எதிர் பார்ப்பாக இருக்கிறது.

    அதன் பின் அந்த எதிர்பார்ப்பு வஞ்சகனுக்கும், துரோகிக்கும், ஏமாற்றுக் காரனுக்கும் கெட்டது நடக்க வேண்டும் என்கிற ஆசையாக தன்னுணர்வற்ற நிலையிலே மாறி, அந்த ஆசையே தொடர் சிந்தனையாகவும் நடைபெறத் தொடங்கி விடுகிறது.

    துரோகத்திற்கு ஆளான வலியோடு சிந்திப்பதால் அது உணர்ச்சிகரமான சிந்தனையாகி, நம்முடைய பிரார்த்தனையாக மாறி விடுகிறது.

    இறுதியில் கெட்டது நடக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை இம்மி பிசகாமல் நம்முடைய வாழ்விலேயே நிறைவேறுகிறது.

    ஏனெனில், பிரபஞ்சத்திற்கு பெயர்ச் சொற்கள் தெரியாது. உணர்ச்சிகரமான வினைச் சொற்கள் மட்டுமே புரியும்.

    அதனால் தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும் எண்ணம் போல் வாழ்வு என்றும் ஞானிகள் கூறியுள்ளனர்.

    ஏமாற்றுக்காரர்கள் ஒருபோதும் தண்டிக்கப் படுவதில்லை.

    ஏமாற்றுக்காரனோ, பெரும் துரோகியோ, வஞ்சகனோ வாழ்வில் ஒரு போதும் கெட்டுப் போவதில்லை. குறிப்பிட்ட வஞ்சகச் செயலுக்காகத் தண்டிக்கப் படுவதில்லை. இது ஒரு பேருண்மை. மனித வரலாறே இதற்கான ஆதாரம்.

    இரக்கமற்ற கொலைகாரர்களும், பெருந் துரோகிகளும், மகா சூழ்ச்சியாளர்களும், கடைந்தெடுத்த வஞ்சகர்களும், சண்டாளப் படுபாவிகளும் தான் மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஏக போக சுகத்துடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்.

    ஆகவே, தவறு செய்தவன் கடவுளால் தண்டிக்கப் படுவான் என்கிற கருத்தை நம்பாதீர்கள். கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை. தண்டிக்கும் மனோபாவம் உடையவர் ஒரு போதும் கடவுளாக இருக்க முடியாது.

    கடவுளுக்குத் தெரிந்த மொழி கருணை மட்டுமே. மன்னித்தலே கடவுளின் தண்டனை. கேட்டதைக் கொடுப்பது மட்டுமே கடவுளின் வேலை. இதைத் தவிர வேறெந்த கெடுதலையும் செய்யத் தெரியாத அப்பாவி தான், கடவுள்.

    மனிதர்களை நல்லவன், கெட்டவன் என்றெல்லாம் பாகு படுத்திப் பார்க்க கடவுளுக்குத் தெரியாது.

    மேலும் வஞ்சகனையோ, துரோகியையோ, நம் வழியில் கொண்டு வந்து கடவுள் தான் நிறுத்துகிறார்.

    அதாவது, குடும்ப விவகாரச் சண்டையின் போது நம் ஆழ் மனதில் நுழைந்து விட்ட மோசமான எண்ணத்தின் படி, காரியங்களை நிகழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஆழ்மனம் இருந்தது.

    தன்னால் முடிந்த வரை செய்தது.

    தன்னந்தனியே தன்னால் நிறைவேற்ற முடியாத எண்ணங்களைத் தொடர்ச்சியாகப் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது.

    அதனால் அந்த எண்ணத்தை நம் பிரார்த்தனையாக ஏற்றுக் கொண்டு, அந்தப் பிரார்த்தனையைச் செவ்வனே, உடனடியாக நிறைவேற்றிட பிரபஞ்சம் முடிவெடுத்தது.

    அந்த முடிவின் படி, ஒரு மனிதனின் நெஞ்சில் வஞ்சக சிந்தனையை உருவாக்கி நம்முடைய வழியில் கொண்டு வந்து நிறுத்தி, வஞ்சகச் செயல்களில் ஈடுபடும் படி அவனை இயக்குகிறது.

    ஆகவே, நமது எண்ணங்களின் படி, நமக்குக் கெடுதல் உண்டாக வேண்டுமே என்கிற நோக்கத்தில் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள் தான் மோசக்காரர்கள்.

    ஆகவே, நம் பிரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு, தானே முன்னின்று சிலரைத் தேர்ந்தெடுத்து, தானே அவர்களை மோசக்காரர்களாக உருவாக்கி, தானே முன்னின்று, நம் வாழ்க்கைக்குள் அனுப்பிய, தன்னுடைய தூதர்களையே தண்டிக்க கடவுளால் எப்படி முடியும்?

    ஆகவே தவறு செய்தவர்களைக் கடவுள் தண்டிப்பார் என்கிற கருத்தை நம்பாதீர்கள். ஒருக்கால் அந்த நம்பிக்கையை விட முடியாத போது, பசுவையும் சிங்கத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள்.

    பசு ஒரு சாதுவான சைவப் பிராணி. எவ்வகையிலும் சிங்கத்திற்குக் கெடுதலை இழைக்காத ஒரு உயிரினம். சிங்கத்தின் உணவிற்குக் கூட பசு போட்டியாக இல்லை. எனினும் அப்பாவிப் பசுவை முரட்டுச் சிங்கம் உயிரோடு பிடித்து உண்கிறது.

    இது மிகவும் கொடூரமான செயல். ஆனால், இத்தகைய கொடூரச் செயலுக்காக இதுவரை எந்தச் சிங்கமும் கடவுளால் தண்டிக்கப் பட்டதில்லை.

    இங்கே குழப்பத்தை உருவாக்கக் கூடிய ஒரு எண்ணம் தோன்றலாம்.

    சிங்கம் என்பது பிற விலங்குகளைக் கொன்று வாழும் வகையில் தான். இயற்கையாலேயே படைக்கப்பட்டுள்ளது. அதனால் அது தண்டிக்கப் படுவதில்லை என்கிற கருத்து உருவாகலாம்.

    அந்தக் கருத்து சரியானதே. சிங்கத்தைத் தண்டிக்க முடியாது தான். ஆனால், சிங்கத்தைப் போலவே தான் மனிதர்களும் படைக்கப் பட்டுள்ளனர்.

    ஒருவனை மற்றவன் மிஞ்ச வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல் படும் படியாகத் தான் மனிதப் பிறவிகளும் படைக்கப் பட்டுள்ளனர்.

    ஆகவே, ஒருவனை மிஞ்சுவதற்காக மற்றவன் செய்கிற வஞ்சகங்களையும், துரோகங்களையும், ஏமாற்று வித்தைகளையும் அவனுடைய போர்த் தந்திரங்களாகத் தான் இயற்கை எடுத்துக் கொள்கிறதே தவிர, குற்றமாகப் பார்ப்பதில்லை.

    ஆகவே, எந்தக் கொடியவனும் இயற்கையால் தண்டிக்கப் படுவதில்லை. அதை விட முக்கியமாக இயற்கையின் பார்வையில், நல்லவன், கெட்டவன் என்கிற பேதங்கள் இல்லை.

    மேலும், கயவர்களைத் தண்டிப்பது என்கிற முடிவைக் கடவுள் எடுக்கின்ற நாளில், இந்தப் பூமியில் உள்ள குழந்தைகளைத் தவிர மற்ற அனைவரும் தண்டிக்கப் படுவார்கள்.

    ஏமாளியே மென்மேலும் தண்டிக்கப் படுவான்.

    கொலைகாரச் செயலுக்காக எந்தச் சிங்கமும் தண்டிக்கப் படுவதில்லை. அதேபோல, எந்தவொரு மோசக்காரனும், வஞ்சகனும், துரோகியும் ஏமாற்றுப் பேர்வழியும் தத்தம் செயலுக்காகக் கடவுளால் தண்டிக்கப் படுவதில்லை.

    அதற்கு மாறாக, துரோகத்திற்கு ஆளானவனே மென்மேலும் தண்டிக்கப் படுவான். மென்மேலும் துரோகங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருப்பான். மென்மேலும் ஏமாற்றப் படுவான்.

    ஏனெனில், துரோகத்திற்கு ஆளாகும் நபர் தான் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருப்பான். குமுறி அழுது கொண்டிருப்பான். மனதிற்குள் மறுகிக் கொண்டிருப்பான். தனியாய் அமர்ந்து கதறிக் கொண்டிருப்பான். மனமொடிந்து மூலையிலே போய் முடங்கி கிடப்பான்.

    அவனுடைய கனவுகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, அவனை வஞ்சித்த வஞ்சகர்களையும், அவனுக்கு துரோகம் இழைத்த துரோகிகளையும், அவையெல்லாம் இழைக்கப்பட்ட விதத்தையும் நெஞ்சம் நிறைய வைத்துக் கொண்டு, ஒரு ஒளிப்படக் காட்சியாகத் திரும்பத் திரும்ப மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டு, அரைப் பைத்தியமாகச் சுற்றிக் கொண்டிருப்பான்.

    கழிவிரக்கமும், சுயபச்சாதாமும், அவனைத் தான் வாட்டு வாட்டென்று வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும்.

    மேற்கண்டவாறு நிகழக்கூடிய எண்ணங்கள் அனைத்தும் மிகவும் உணர்ச்சிகரமானவை.

    அதனால் அவனுடைய ஆழ்மனதிற்குள் மிக எளிதில் நுழையக் கூடியவை.

    ஆழ்மனதிற்குள் நுழைகின்ற சிந்தனை மட்டுமே தொடர்ச்சியாக நடைபெறக் கூடிய சிந்தனை.

    தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய சிந்தனை தான் பிரபஞ்ச சக்தியின் முன் வைக்கப்படுகின்ற பிரார்த்தனை.

    யாருடைய பிரார்த்தனையையும் பிரபஞ்ச சக்தியால் நிராகரிக்க முடியாது. எப்படிப்பட்ட பிரார்த்தனையாக இருந்தாலும், எதிர்க் கேள்வியின்றி  நிறைவேற்றப் படும்.

    துரோகத்திற்கும், வஞ்சகத்திற்கும், ஏமாற்றுச் செயலுக்கும் ஆளான அப்பாவி, மனதிற்குள் குமுறிக் கொண்டிருப்பதும், மருகிக் கொண்டிருப்பதும், கதறிக் கொண்டிருப்பதும் அவனுடைய பிரார்த்தனையாக ஏற்கப்படும்.

    அதனால் மென்மேலும் பன்மடங்கு கூடுதலாக அவன் குமுறிக் கொண்டிருக்கவும், மருகிக் கொண்டிருக்கவும், கதறிக் கொண்டிருக்கவும் என்ன செய்ய வேண்டுமோ அதைப் பிரபஞ்ச சக்தி நிகழ்த்திக் கொண்டிருக்கும்.

    மென்மேலும் அதே போன்ற அனுபவங்களையே தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பான். வாழ்க்கை நரகமாக மாறிக் கொண்டிருக்கும்.

    இது தான் பட்ட காலிலே படும், கெட்ட குடும்பமே கெடும் என்கிற பழமொழிக்கான விஞ்ஞான பூர்வ விளக்கவுரை.

    ஆனால், வஞ்சித்தவன் ஒளியுடன் இருப்பான். வெற்றி பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டிருப்பான்.

    அவனுடைய சூழ்ச்சி வலைகளையெல்லாம் தன்னுடைய தனித் திறமையெனக் கருதிக் கொண்டிருப்பான். அதனால் அவனுடைய மூளை அற்புதமாக வேலை செய்யும். அவனுடைய தன்னம்பிக்கை மிதமிஞ்சிய அளவிற்கு அதிகரித்திருக்கும்.

    நெருங்கிய நண்பனையே நம்ப வைத்துக் கழுத்தறுத்தவன்.

    இரத்த உறவையே வீழ்த்தி விட்டவன்.

    ஆகவே சந்திக்கும் யாரையும் எளிதாக வெல்ல முடிந்தவன்.

    எதையும் சாதிக்கப் பிறந்தவன் என்றெல்லாம் தன்னைப் பற்றிப் பெருமிதமாக எண்ணிக் கொண்டிருப்பான்.

    அவனுடைய தன்னம்பிக்கை வலுப்பட்டிருக்கும்.

    மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    அதனால் மகிழ்ச்சி நிறைந்த எண்ண அலைகளையே பிரபஞ்சத்திற்கு அவன் அனுப்பிக் கொண்டிருப்பான்.

    அந்த மகிழ்ச்சிகரமான எண்ண அலைகளே அவனுடைய பிரார்த்தனையாக பிரபஞ்ச சக்தியால் ஏற்கப்படும்.

    அதனால், அவனுடைய மகிழ்ச்சியை மென்மேலும் அதிகரிக்கக் கூடிய அனுபவங்களையே பிரபஞ்சம் அவனுக்கு வழங்கிக் கொண்டிருக்கும்.

    அவன் மென்மேலும் வளர்ந்து கொண்டிருப்பான்.

    ஆகவே, கொலைகாரச் செயலுக்காக சிங்கம் எப்படித் தண்டிக்கப் படுவதில்லையோ, அதே போல எந்த மனிதனும் தன் வஞ்சகச் செயலுக்காக, செய்த துரோகத்திற்காகத் தண்டிக்கப் படுவதில்லை.

How to Read Books Online

உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.

I'm Very Cool Person Because That's What Everyone Says so Feel Free to Ask your Doubts.

A GIFT FROM US!

வளமான வாழ்க்கை வாழ்வதற்குரிய 19 PDF புத்தகங்கள் & வீடியோ பயிற்சிகளை இலவசமாக பெற விரும்பினால்…!

1. உங்கள் பெயர் 

2. Email ID ஐ (Free Member) என்று டைப் செய்து 

எங்கள் WhatsApp இலக்கத்திற்கு அனுப்புங்கள்.

வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் நன்றி.

Don’t Miss it!